Search This Blog

Wednesday, May 10, 2017

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (9): திரு. இராமர் ஆ. அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (9): திரு. இராமர் ஆ. அவர்களின் இறை அனுபவங்கள்.


இராமர். ஆ [Ramar A]

நேர்காணல் விவரம்:

இடம்: இராமர் கொடாப்பு, வாசி மலை அருகில், தொட்டப்பநாயக்கனூர், உசிலம்பட்டி, மதுரை.

நாள்: சித்தரை 21, 2017 வியாழக்கிழமை [05/04/2017 ] மதியம் 4.01 முதல் 05:12 வரை [04:01 PM to 05:12 PM]

இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
  1. 1995ஆம் ஆண்டு, சாப்டூர் பகுதியில், திரு. இராமர் அவர்கள், செம்மறியாடு மேய்த்துக் கொண்டு இருந்தார், அப்பொழுது, திரு. இராமர் அவர்களை ஒருவர் நாகவிளாகம் அழைத்து வந்து, சித்தர் அய்யா பிள்ளையை அறிமுகப்படுத்துகின்றார், அன்று முதல், சித்தர் தன் பூதவுடலை உதிர்த்த 08/20/2011 வரை, கிட்டத்தட்ட 16—17 வருடங்கள், அவருடனான நல்ல ஆத்மார்த்தமான உறவை தக்க வைத்துக் கொள்கின்றார். சித்தர்கள், உண்மையின் ரூபமாக, குரு கடாச்சமாக விளங்குபவர்கள், அரியனை ஏறாமலே ஆட்சி புரிபவர்கள். அத்தகையவர்களை நெருங்குவது என்பது நெருப்பினில் பஸ்பமாவதற்கு ஒப்பான செயலாகும், அவர்களுக்கு நிகரான, அறிவு, திறமை, இல்லையெனினும், உண்மை, இயற்கை இருப்பின், அவர்களுடன் நெருங்கி இருந்தும், அவர்களுடனான தத்தம் உறவுகள் பாதிக்கப்படாமல், காத்து, வளர்த்துக் கொள்ளலாம். இந்த கோணத்தில் பார்க்க, சித்தர் அய்யா பிள்ளை அவர்களுடன், ஆத்மார்த்தமாக நெருங்கி பழகி, அவருடனான உறவை கடைசி மூச்சு வரை தக்க வைத்துக் கொண்ட அன்பர்களில் ஒருவர் தான் திரு. இராமர் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  2. 2000-த்தில் காசி யாத்திரை முதல், பல யாத்திரா பயணங்கள் அவர்களுடன் சென்று, இயற்கை பற்றியும், அதன் செய்லபாடுகளை பற்றியும் விழிப்புணர்வு பெறுகின்றார்.
  3. காசி பயணத்தில், 15 பேர், மார் அளவு நீரில், சுமார் 7 மணி அளவில், எதார்த்தமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட, சுடலையில், நெருப்பு ஆடலின், நடன தரிசனம் கண்டனர். மேலும் அங்கு, அன்று, ஒவ்வொருவருக்கும், பிரம்மத்திலும், ஆத்ம முடிச்சுகளிலும் நீர் வார்த்து, அவர்களது ஆத்மாவை மேல் நிலை அடைய செய்கின்றார்.
  4. இவர் தான் ஷீர்டி சாய் பாபா என்று அறியும் முன்னரே, திரு. இராமர் அவர்களுக்கு, சயனத்தில் அவர் காட்சி கிடைக்கின்றது, மேலும் அவர்தம் கைகளில் இருந்து அருள் தம் மேல் பாய்ந்ததையும் நினைவு கூறுகின்றார். அந்த காட்சிக்கு பின் அவரை பற்றிய தேடலும் ஆரம்பிக்கின்றது. அந்த காட்சி கிடைத்த சுமார், 7 வருடங்களுக்கு பின்னர், சித்தர் அய்யா பிள்ளை மூலமாக, ஷீர்டி சென்று, ஜந்து நாட்கள் தங்கி, நல்ல தரிசனம் கிடைக்கப் பெறுகின்றார்.
  5. ஷீர்டி தரிசனம் முடித்து, வீடு திரும்பும் போது, வருங்காலத்தில் என்னைப் போல வருவான் என்று நாளேட்டில் சித்தர் எழுதியும் கொடுக்கின்றார்.
  6. ஒவ்வொரு புனித பயணத்திலும், சித்தர் அவர்களுடன் சென்ற அனைவருக்கும், பிரம்மத்தில் நீர் வார்த்து, சப்தம் எழுப்பி ஆன்மாவை மேல் நிலையடைய செய்வதை சித்தர் வழக்கமாக கொண்டிருந்தார் என்பதையும், இராகவேந்திரர் பிருந்தாவனத்தில் அத்தகைய நிகழ்வு நடந்தேறியதையும் நினைவு கூறுகின்றார். அதேபோல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக ஆன்மா மேல் எழும்பவதை பார்த்து, அதை பற்றி விசாரித்து, அவர்களின் மனதை தேடலில் செலுத்த, உறுதுணையாய் இருந்திருக்கின்றார்.
  7. திரு. இராமர் அவர்களுக்கு, பிரம்மத்தில் நீர் வார்த்து, ஓம் என்று சொன்ன போதெல்லாம், குளிர்ச்சி கிடைத்து, உடம்பில் சிலிர்ப்பு ஏற்பட்டு, சிரசில் இருந்து, ஏதோ ஒன்று வெளியே செல்வது போன்ற உணர்வும், மகிழ்ச்சியும் கிடைக்கப் பெறுகின்றார்.
  8. சித்தர் அவர்கள் பூதவுடலை விடும் ஒரு வருடத்திற்கு முன்னர், அருப்புக்கோட்டை செல்ல, திரு. இராமர் அவர்களை தேடி வருகின்றார். பின்னர், அருப்புக்கோட்டையில் அன்பர் ஒருவரை சந்திக்க, திரு. இராமர் அவர்களையும், மேலும் சில அன்பர்களையும், அழைத்துக் கொண்டு செல்கின்றார். அங்கு அவர்களுக்கு, பாத பூஜை செய்து, ஜீவ நாடி கண்டு, வாலை பேசியதை, அந்த ஏடு மூலம் அறிகின்றனர், அது சித்தர் அவர்களது பிறவி கர்மா முடியும் தருணம் என்றும், உடனே காலஹஸ்தி செல்ல வேண்டும் என்றும் உத்திரவு கிடைக்கின்றது. ஆனால் அங்கெல்லாம் சென்று வர எங்களிடம் பணம் இல்லை என்று சித்தர் அய்யா பிள்ளை முறையிட, பயணத்திற்கான, ஏனைய அனைத்து ஏற்பாடுகளையும் ஜீவ நாடி பார்த்த அன்பரே செய்து தருகின்றார். அந்த பயணம் நிறைவுற்ற ஒராண்டு பின்னரே, சித்தர் பூதவுடலை உதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  9. கலியுகத்தில், பணம் பொருளுக்காக ஏதும் செய்யாமல், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், காடு, மலை, என்று, தனக்கு மட்டுமல்லாமல், தன்னை சார்ந்தவர்களுக்காகவும் தேடி திரிந்தார். இத்தகைய அவரது பெருந்தன்மையை எண்ணி, திரு. இராமர் அவர்கள் மனம் நெகிழ்கின்றார்.
  10. காசி, சதுரகிரி, என யாத்திரா பயணம் கன்னியாகுமரி வந்தடைந்தது, அங்கு சத்திரத்தில் தங்கியிருந்த போது, திரு. இராமர் அவர்களை மீன் வாங்கி வர சொல்ல, அவர் மேலும் ஒரு அன்பரை அழைத்துக் கொண்டு மீன் வாங்க செல்கின்றார், வெளியே சென்ற அவர்கள், மனம் குழம்பி, எப்படி யாத்திரா பயணம் செல்பவர்கள் அசைவ உணவு உண்பார்கள் என்ற எண்ணம் எழ, திரும்ப வந்து மீன் இல்லை என்று சொல்லி விடுகின்றனர். அதற்கு சித்தர் அவர்கள், திரு. இராமர் அவர்களை அடித்து, இந்த இடத்தில் மீன் பொரித்து விற்கின்றார்கள், சென்று வாங்கி வா, என்று திரும்பவும் அடித்து அனுப்பி வைக்கின்றார். அப்படி வாங்கி வந்த மீன் இறைச்சியை அனைவருக்கும், பிரசாதமாக சித்தர் வழங்குகின்றார்.
  11. அந்த யாத்திரா பயணத்தின் தொடர்ச்சியாக, திருச்செந்தூர் சென்று விட்டு, திரு. இராமர் அவர்களின் சொந்த ஊரான, இராமநாதபுரம், கடலாடியில், அவரது இல்லத்தில் உணவருந்தி விட்டு, இராமேஸ்வரம் வந்தடைகின்றனர், அங்கு, தனுஷ்கோடியில் நடந்து செல்லும் போது, மீனவர்கள் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அதை கண்ட சித்தர், திரு. இராமர் அவர்களிடம் பத்து ரூபாய் தந்து, திரும்பவும் மீன் வாங்கி வருமாறு கூறுகின்றார். முன்னர் கிடைத்த அனுபவத்தின் பலனாக, இந்த முறை தவறாமல் வாங்கி வந்து விட வேண்டும் என்று எண்ணத்துடன், முன்னர் சென்ற இருவரும் சேர்ந்து செல்கின்றனர். அங்கு கண் தெரியாத ஓர் ஆள், என்ன யாத்திரை பயணத்தில் மீன் கேட்கின்றீர்களே என்று வினவிய பின்னரே, மீனை கொடுத்து, போய் கொடுங்கள் நானே வந்து சுட்டு தருகின்றேன் என்று மனம் உவந்து கூறுகின்றார். பின், மீனை சுட்டு வைத்த விட்டு, அங்கு, இரு கடல் சங்கமிக்கும் இடத்தில், நீரில் அமர்கின்றனர். அந்த நிலையில், அனைவருக்கும் அருட் கடாச்சியம் கிடைக்கப் பெறுகின்றனர், அந்த நிலையில், சுட்டு வைத்த மீன் இறைச்சியை, நீரினில் இருக்கும் போதே, அனைவருக்கும் பிரசாதமாக சித்தர் தருகின்றார். நீரில் இருந்தவாறே, அதை அவர்களும் உண்ணுகின்றனர். அந்த நேரத்தில் அங்கு வந்த கண் தெரியாத மீனவர், மீன் வேட்டைக்கு செல்லும் நாங்கள் மட்டுமே இப்படி இங்கு இரு கடல் சங்கமிக்கும் இடத்தில், மீன் இறைச்சி சுட்டு படைப்போம், இது எப்படி உங்களுக்கு தெரியும் என்று சித்தர் அவர்களை வினவுகின்றனர். சித்தர் அவர்களும், எனக்கு தோன்றியது அதனால் செய்கின்றேன் என்று கூறி இருக்கின்றார். இதனால் ஆச்சிரியப்பட்ட அந்த கண் தெரியாத மீனவர், நீ ஒரு பெண்ணாக தானே இருக்க வேண்டும், உங்கள் குரலும் (அன்றைய நிலையில்) அப்படி தான் இருக்கின்றது என்று கூற, சித்தர் அவர்கள், அவரை அருகில் அழைத்து, தன் மீசை மேல் அவர்கள் கையை வைத்து தான் ஆண் தான் என்று கூறி இருக்கின்றார்.
  12. ஒருமுறை, சித்தர் அவர்களும், திரு. இராமர் இருவரும், பேரூந்தில் வரும் போது, திருவாரூர் அருகே, ஆத்துக்கு அந்த பக்கம், வனத்தில், சித்தர் அவர்கள் தனது ஆரம்ப காலங்களில், 1970களில், கல் பானை சுமந்து வந்த போது காட்சி கிடைத்த இடத்தை குறிப்பிட்டு காட்டுகின்றார். அதே இடத்தை என்னிடமும் (ரோஸாரியோ ஜோசப்) காண்பித்து இருக்கின்றார், என்னிடம், ஓர் பேரொளி, தனது நாக்கில் இறங்கியதாகவும், முதலில், அதை தாம் காளி என்று வழிபட்டதாகவும், பல இறை அனுபவங்கள் கிடைத்த பின்னரே, தன் மேல் இறங்கிய பேரொளி, சித்தர் வியாக்கிரபாதர் என்று அறிந்து, உணர்ந்து, அந்த பரப்பிரம்ம சொரூபத்தை வழிபட ஆரம்பித்ததாகவும் கூறி இருக்கின்றார்.
  13. அதே யாத்திரா பயணத்தில், சித்தர் அவர்கள், சதுரகரியில், தான் அகத்தில் கண்ட அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து இருக்கின்றார். சித்தர்களை பற்றியும், ஏடுகள் பற்றியும், சதுரகிரி பற்றியும், பல அரிய தகவல்கள் அவர்களுக்கு அன்று வெளிப்பாடு ஆகின.
  14. இதே போல், ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும், ஒவ்வொரு ஆத்ம அனுபவத்தின் போதும், எதை உணர்ந்தாய்? என்ன உணர்ந்தாய்? அதைப்பற்றி சிந்தித்தாயா? என்று ஒவ்வொருவரையும் விசாரித்து, அவர்களை மென்மேலும் சுய தேடலில் தள்ளியிருக்கின்றார்.
  15. கோயம்புத்தூர் பட்டீஸ்வரர் கோயில் சென்றிருந்த போது, அந்த கோயிலில் ஏதும் இல்லை என்றும், இந்த கோயிலுக்கான காரணம், அங்கிருந்து ஒரு பர்லாங்கு தூரத்தில் தான் உள்ளது என்றும், அங்கு இறவாப் பணை மரம் ஒன்று இருக்கின்றது என்றும், இரவில் அங்கு அழைத்து சென்று, அந்த கோயில் உண்டான அனைத்து செய்திகளையும், அந்த கோயிலுக்கு சம்மந்தப்பட்ட பல விஷயங்களையும் தெரிவிக்கின்றார்.
  16. பின்னர் சுவாமிதோப்பு சென்ற வழிபட்டனர். சுவாமிதோப்பு என்பது அவர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஓர் இடம் என்று திரு. இராமர் அவர்கள் தெரிவித்துள்ளார். சுவாமிதோப்பில், சித்தர் அனைவரையும் சுற்றி பார்த்து விட்டு வருமாறு கூறிவிட்டு, அமைதியாக ஓர் இடத்தில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  17. மேலும் சித்தர் அவர்கள், சுயம்பாக அவரவர்களையே தேடுமாறு சொல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இரையோடு, இறையும் தேடு என்பதே அவரது கோட்பாடாக இருந்தது.
  18. இப்படி பல பயணங்கள் சென்று வந்தாலும், பல பேருக்கு இறை அனுபவங்கள் கிடைக்கப் பெற செய்தாலும், வீடு திரும்பிய பின், மண்வெட்டி எடுத்துக் கொண்டு, வயலுக்கு சென்று இயல்பாக உழைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். பத்து ஆட்கள் களையெடுத்து கொண்டிருந்தாலும், அவர்களுடன், அவர்களில் ஒருவராக, சித்தர் அவர்களும் களையெடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். சித்தர் அவர்களின், இந்த துளிக்கூட ஆணவமற்ற போக்கை எண்ணி திரு. இராமர் அவர்கள் பெருமிதம் கொள்கின்றார். இது போல் உண்மையான சித்த புருஷர்களை கண்டுபிடிப்பது என்பது மிக மிக கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  19. 2003–ஆம் ஆண்டு பக்கம், கடனாநதி அணை மேல், நாக தீர்த்தத்திற்கு சென்று நீராடி, வழிபாடு செய்து விட்டு, வரும் போது, திரு. இராமர் அவர்கள் படுத்திருக்க, அனைவரும் பாம்பு, பாம்பு என்று கத்த, அவருக்கு பின் கரு நாகம் ஒன்று, ஓர் ஆள் நீளத்திற்கு எழும்பி தவ்வி புதரில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.
  20. பின்னர் குற்றாலம் பெரிய அருவிக்கு மேல், 2 கி.மீ. தூரத்தில், சித்தர் அகத்தியர் பாதம் பட்ட குகை உள்ளது என்றும், அங்கு சென்று வழிபட வேண்டும் என்றும் சித்தர் அய்யா பிள்ளை உத்தரவிட, அனைவரும் பூஜை பொருட்கள் வாங்கி கொண்டு, மேல் சென்று, அகல் ஏற்றி, பிரணவ சப்தமும், பஞ்சாச்சரமும் எழுப்ப, அனைவருக்கும் அருட்கடாச்சம் நிறைவாய் கிட்டுகின்றது, பின்னர், படைத்த உணவு பொருட்களை பகிர்ந்து கொடுக்க, அது, திரு. இராமர் அவர்களுக்கு ஒவ்வாமல் போய் விடுகின்றது. வாந்தி பேதி ஏற்பட்டு, மலையிலிருந்து இறங்க முடியாத அளவிற்கு மிகவும் சிரமப்படுகின்றார். கீழே ரோடு வரை வந்தவர், இதற்கு மேல், என்னால் நடக்க முடியாது என்று கூற, சித்தர் ஓர் ஆட்டோ பிடித்து, திரு. இராமர் அவர்களை முதலில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கின்றார். காலரா பரவியுள்ளதால், அவர்களை தனியார் மருத்துவமனையில் ஏற்றுக் கொள்ளாமல், அரசு மருத்துவமனைக்கு, அழைத்து செல்லுமாறு கூறுகின்றனர். அதேபோல், அரசு மருத்துவமனையில், திரு. இராமர் அவர்களை சேர்க்கின்றனர். இராமர் உணர்வற்று கிடக்க, எழு பாட்டில் குலுக்கோஸ் அவருக்கு ஏற்றப்படுகின்றது. இதற்கிடையில், கட்டிலில் திரு. இராமர் அவர்கள் உடல் நலம் சரியில்லாமல், உணர்வற்று படுத்திருக்க, சித்தர் அவர்கள், அவர் கட்டிலுக்கு கீழ் படுகின்றார். சுமார் அதிகாலை மூன்று மணி அளவில் திரு. இராமர் அவர்களுக்கு உணர்வு திரும்புகின்றது. பின்னர் உடனே அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து புறப்படுகின்றனர். இப்படி, குற்றாலத்தில், உயிர் போய் உயிர் வந்ததை நினைவு கூறுகின்றார். அது சித்தர் கொடுத்த மறு பிறவியாகவே கருதுகின்றார்.
  21. சித்ர சபையில் உள் அமர்ந்த போது, திரு. இராமர் அவர்களை, இந்த இடம் உன்னை என்ன செய்கின்றது பார் என்று சித்தர் உத்திரவிட, அவரும் கண்கள் மூடி அமர, தன்னைத்தானே சுற்றுவதை போல, நாலு பக்கமும், அருளால் ஆட் கொள்ளப்பட்டு அமர்ந்தவாறு சுற்றி வந்தனர். இதில் ஆச்சிரியம் என்னவென்றால், சித்தர் அவர்களும், அவர்களுடன் இருந்த மேலும் ஓர் அன்பரும், மொத்தம் மூன்று பேரும் அவ்வாறே, ஒரே மாதிரி அருள் நிலையில் சுற்றி வந்தனர்.
  22. சுரளியில், அருவிக்கு மேல், வனத்தில், சாமியார் கோட்டம் என்ற இடத்திற்கு சென்று, சுரளி ஆற்றில் நீராடி, அந்த நீரால் ஆத்ம முடிச்சுகளை வருடி, சித்தர் வழிபாடு நடத்துகின்றார். அன்று, அனைவருக்கும், நல்ல பெரும் சப்தங்களும், அருட் கடாச்சமும் கிடைத்தருளியது.
  23. நாகவிளாகத்தில், ஆரம்ப காலங்களில், தாள விருச்சத்தில், இரவில், அகல் ஏற்றி, வழிபட்டு வந்த போது, நிறைவான அருட் கடாசம் கிட்டியிருக்கின்றது.
  24. அண்ணன் சுவாமிகள் காலமாகி 12–ஆம் வருடம், சித்தர் அவர்களுடன், திரு. இராமர் அவர்களும், மேலும் சில அன்பர்களும், மொத்தம் ஜந்து பேர் அண்ணன் சுவாமி சமாதிக்கு செல்கின்றனர். அவர் வாழ்ந்த இடதில் அமர்ந்து சிவ நாமம் படிக்க, அண்ணன் சுவாமிகள் உயிருடன் இருந்த போது, பழகிய சிறு வயது நன்பர் ஒருவர் அங்கு வருகின்றார். அதற்குள், அண்ணன் சுவாமிகள் சித்தர் அய்யா பிள்ளையை முழுவதுமாய், ஆட்கொண்டிருக்க, வந்தவரிடம், நான் என்ன சாப்பிடுவேன் என்று கேட்க, அதை கேட்ட அவர் ஸ்தம்பித்து நிற்க, உன் வீட்டில் ஒரு பாட்டில் ரம் வைத்து இருக்கின்றாய், அதை எடுத்து வா என்று கூறி இருக்கின்றார். அதை அனைவருக்கும் பிரசாதமாய், தருகின்றார். பின்னர் அதே அன்பரிடம், நான் கணேஷ் பீடி பிடிப்பேன் தெரியுமா என்று சொல்ல, அதையும் அவர்கள் வாங்கி வங்து தருகின்றனர். பின்னர் இன்னும் ஒரு பாட்டில் வைத்திருக்கின்றாய் அதையும் எடுத்து வா என்று கூற, அவ்வண்ணமே அவரும் செய்கின்றார், அதை முழுவதுமாய், சித்தர் அவர்களே அருந்துகின்றார், பின்னர் அண்ணன் சுவாமிகள் முழுவதுமாய் இறங்கி, அனைவரிடமும் சகஜமாய் பேசுகின்றார். முடிந்த பின் என்ன செய்தும் சித்தர் அவர்களை எழுப்ப முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  25. இந்நிலையில், திரு. இராமர் அவர்கள் அருகே படுத்திருக்க, பூமியிலிருந்து சந்தனம், ஜவ்வாது வாசம், அற்புதமாய், வீசி கொண்டிருந்தது.
  26. காலை மூன்று மணிக்கு மேல், அனைவரும் அண்ணன் சமாதிக்கு செல்கின்றனர், அவருக்கு பழைய பாடல்கள் பிடிக்கும் என்பதால், அவைகளை பாடி, அங்கே இரவை கழித்து விட்டு, பின்னர் அடுத்த நாள் காலை 8-9 மணிக்கு தான் வீடு திரும்பியிருக்கின்றனர். கூட வந்த ஆட்டோகாரரும் அவர்களுடன் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அண்ணன் சமாதி அனுபவங்கள், திரு. இராமர் அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக குறிப்பிட்டுள்ளார்.
  27. இப்பொழுது, திரு. இராமர் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து, தெற்கு திசையில் வழிபாடு செய்ய ஏதுவான இரண்டு இடம் உள்ளது என்பதை, நாகவிளாகத்தில் இருந்து கொண்டே சித்தர் தெரிவிக்கின்றார், அங்கு தொடர்ந்து மூன்று வருடம் வழிபட்டு வரவும் சொல்லுகின்றார். அதேபோல், வாசி மலை அடிவாரத்தில், மலைவாசிகள் வழிபட்டு கொண்டிருந்த ஓர் இடம் இருந்தது, தொடர்ந்து ஐந்து வருடங்கள், இரவில், அங்கு கடா வெட்டி, அன்னதானம் கொடுத்து, வழிபட்டு வந்தனர். அதுவரை அந்த பூமியில் வறட்சி என்பதே இருந்ததில்லை என்றும், என்றிலிருந்து வழிபாட்டை ஊரார்கள் வெளியே இருந்து ஆட்கள் வருகின்றார்கள் என்றும், இரவில் வழிபாடு நடக்கின்றது என்றும், காரணம் சொல்லி நிறுத்தினார்களோ, அன்றிலிருந்து வறட்சி நிலவுகின்றது என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார்.
  28. ஒரு முறை இப்படி வழிபட்டு வந்த போது, வரிசையாக, தென் திசை நோக்கி அகல் விளக்கு ஏற்றப்பட்டிருக்க, அதற்கு அருகில், ஒரு முதிய பாட்டிமா, கையில் தடியோடு, வட திசை நோக்கி அமர்கின்றார். அவர் அமர்ந்த பின்னரே விளக்கு அணையாமல், இரவு முழுவதும் எரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சூச்சுமமாய் நடந்த காட்சியை, இராமர் கொடாப்பு அருகில் குடியிருந்த ஓர் பெண்மனி கண்டு இருக்கின்றார். காலை, அந்த பெண், சித்தர் அய்யா பிள்ளையிடம் ஆசிர்வாதம் வாங்க சென்ற போது, சாமியாடி, சித்தர் அவர்கள் கையை பிடித்து, இரவில் அந்த பாட்டியம்மா வந்தது எனக்கு தெரிந்தது போல, உனக்கும் தெரிந்திருக்கின்றது, ஆனால் நீ ஏன் சொல்லவில்லை என்று கேட்டதை நினைவு கூறுகின்றார். அந்த நிகழ்வின் போது, திரு. இராமர் அவர்கள், இந்த கலியுகத்திலும், இப்படியும் இறைத்தன்மை, இருக்கின்றதா என்பதை உணர்ந்து, ஆனந்த கண்ணீர் வடித்ததையும் நினைவு கூறுகின்றார்.
  29. சாப்டூர் அருகே, கும்ப மலையில், கும்பேஷ்வரன் கோயிலுக்கு முன், முன்பக்கம் முடிக்கப்படாத ஓர் பள்ளி வாசல் இருக்கு, அங்கு ஓர் பாறையில் சித்தர் அய்யா பிள்ளை அமர்கின்றார். அந்த பாறையில், அமர்ந்த பின்னரே, அவருக்கு கூடுதலான இறை அனுபவங்கள் கிடைகப்பெறுகின்றது, எனவே, அந்த தலத்தின் உள்ள விருச்சமான உசிலை மரத்தின் இலைகளை, அவரது வீட்டு விஷேசங்களுக்கு உபயோகப்படுத்துவதை வழக்கமாக கொண்டார். அதே இடத்தின் அருகே உள்ள குகையில் தான், சித்தர் அகத்தியர் முன்னொரு காலத்தில் காட்சி தந்தருளினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடம் (கும்ப மலை பாறை), சித்தர் அய்யா பிள்ளைக்கு மிகவும் பிடித்த ஓர் இடம் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
  30. தேடல் நிமித்தமாக, திண்டுக்கல் அருகே, கேசவனம்பட்டி சுவாமி சன்னிதியில், சித்தர் அய்யா பிள்ளையுடன், ஓர் இரவு தங்கி இருக்கின்றார்.
  31. 2000–த்தில் காசி பயணத்தின் போது, பயணத்துக்கான தொகையை கொடுத்த பின், பத்து, பன்னிரெண்டு நாள் செலவுக்கு, கையில், வெறும் 200 ரூபாயோடு திரு. இராமர் அவர்கள் புறப்படுகின்றார், பயணம் முடியும் போது, 6 ரூபாய் மட்டும், அதுவும் ஓர் பிளாஸ்டிக் பையில் வைத்துக் கொண்டு வீடு திரும்புகின்றார். இதில் அவர் உணர்ந்து கொண்டது என்னவென்றால், பணம், பொருள், மனித உறவுகள் தாண்டியது தான் இறை அனுபவங்கள் என்பதை ஆணித்தரமாக, அனுபவரீதியாக உணர்ந்ததுதான். இது அவருக்கு வாழ்க்கையில், மறக்க முடியாத அனுபவமாகும். இது சித்தர் அவருக்கு கொடுத்த வரலாறு என்பதையும் தெளிவாக உணர்ந்து இருக்கின்றார்.
  32. முதல் சபரி மலை பயணத்தின் போது, திரு. இராமர் அவர்களும், சித்தர் அய்யா பிள்ளையை போல், இருமுடி சுமக்காமல் தான் மலையேறுகின்றார், எதேர்ச்சியாக, அவருக்கு ஒரு முடி கிடைக்க, அதை தலையில் சுமக்கின்றார். அதிலிருந்து வருடத்திற்கு இரு முறை மலைக்கு சென்று வருவதை பழக்கமாக கொண்டுள்ளார்.
குறிப்பு: நேர்காணல் செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.

Sunday, May 7, 2017

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (8): திரு. கருப்பையா ப. அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (8): திரு. கருப்பையா ப. அவர்களின் இறை அனுபவங்கள்.


கருப்பையா. ப [Karupaia P]



நேர்காணல் விவரம்:

இடம்: இராமர் கொடாப்பு, வாசி மலை அருகில், தொட்டப்பநாயக்கனூர், உசிலம்பட்டி, மதுரை.

நாள்: சித்தரை 21, 2017 வியாழக்கிழமை [05/04/2017 ] மதியம் 12.53 முதல் 01:18 வரை [12:53 PM to 01:18 PM]

இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
  1. திரு. இராமர் அவர்கள் மூலமாக சித்தர் அய்யா பிள்ளையை நாகவிளாகத்தில் திரு. கருப்பையா அவர்கள் சந்திக்கின்றார், மலைவாழ் மக்களில் ஒருவரான அவர், வாசி மலை அடிவாரத்திலேயே வாழ்ந்து வருவதை முன்னிட்டு சித்தர் பாராட்டுகின்றார். பின்னர், திரு. கருப்பையா அவர்கள், ஜந்து வயதில் இறந்து மறுபிறவி எடுத்ததும், பாலிய பருவத்தில் ஒரு முறை இறந்து, புதைக்க சென்ற நேரத்தில் புனர் ஜன்மம் எடுத்ததையும், ஆக இரு முறை இறந்து பிறந்ததை சித்தர் ஊடுருவி பார்த்து சொல்ல அவரும் அதை ஆமோதிக்கின்றார்.
  2. அதேபோல் அவருக்கு கருப்புசாமி (இறைசக்தி) துணை நிற்பதையும், அதை உபவாசம் செய்து குறி சொல்லலாம் என்றும் வழிகாட்டுகின்றார். மேலும், திரு. கருப்பையா அவர்களும், ஞானியர் போலவும், தன்னைப் (சித்தர்கள்) போலவும் வாழலாம் என்றும், திரு. இராமரை போல நீயும் எனது மகன் தான் என்றும் கூறியிருக்கின்றார்.
  3. சித்தர் அவர்கள் ஸ்பரிசம் பட, யோக நிலை வசப்படுதல், வாலை பேசுதல், சாமியாடுதல், போன்ற பல ஆத்ம விசேஷங்கள் நடந்தேறியதையும். இந்த இடத்தில் இந்த ஊற்று உள்ளது, இந்த மலையில் இந்த விஷயம் கிடைக்கும் என்பதை போல, அரிய செய்திகள் வெளியானதையும், கண்டு களித்திருக்கின்றார்.
  4. சித்தர் அய்யா பிள்ளையுடன், சதுரகிரி, வாசி மலை, சுரளி, போன்ற பல யாத்திரா பயணங்களில் பங்கேற்றும் இருக்கின்றார். அப்படி சில பயணங்களில் சிலருக்கு சாமி இறங்க மறுத்தாலும், அதை பாடி, விழித்து, இயற்கையாக, இலகுவாக இறக்கியதையும் நினைவு கூறுகின்றார். சித்தர் பேசிய போது, தான் சாமியாடிதையும், நினைவு கூறுகின்றார்.

குறிப்பு: நேர்காணல் பதிவு செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (7): திரு. அம்மாவாசி ஆ. அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (7): திரு. அம்மாவாசி ஆ. அவர்களின் இறை அனுபவங்கள்.


திரு. அம்மாவாசி. ஆ [Ammavasi A]

நேர்காணல் விவரம்:

இடம்: இராமர் கொடாப்பு, வாசி மலை அருகில், தொட்டப்பநாயக்கனூர், உசிலம்பட்டி, மதுரை.

நாள்: சித்தரை 21, 2017 வியாழக்கிழமை [05/04/2017 ] காலை 10.59 முதல் மதியம் 12:04 வரை [10:59 AM to 12:04 PM]

இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
  1. திரு. அம்மாவாசி அவர்களது பத்தாம் வயது மூலம், சுயம்பாக பல இறை அனுபவங்கள் கிடைக்கப்பெற்று, சாமியாடி, வாசி மலையான், மற்றும், அங்கு வீட்டிருக்கும் பிற இறை சக்திகளை நிறைவாய், ஆத்மார்த்தமாய் வழிபட்டு வந்திருக்கின்றார். பின்னர், திரு இராமர் அவர்கள் மூலம், சித்தர் அய்யா பிள்ளையை நேரில் சந்தித்து, அவரது அருளையும் பெற்றிருக்கின்றார். இன்றளவும், அவர், பணம், பொருள், ஏதும் வாங்காமல், மக்களுக்கு இறை சேவை செய்தும், செய்தி சொல்லியும், மக்களுக்கும், ஆடு, மாடு, மற்ற இதர ஜீவன்களுக்கும், விபூதி போட்டு, தகப்பன் வழி கிடைத்த வாசி மலையான் மந்திரத்தை ஓதி, மருந்து கொடுத்து, நோய் விரட்டி, விஷ கடிகளின் விஷத்தையும் நீக்கி, வருகின்றார்.
  2. இராமர் கொடாப்பில், சித்தர் அய்யா பிள்ளை அவர்கள், அவர் அங்கு விரும்பி கேட்டு உண்ணும் புளித்த கஞ்சியும், வெங்காயமும் உண்ணும் போது, திரு. அம்மாவாசி அவர்களிடம் உரையாட நேர்கின்றது, அந்த உரையாடலின் போது, இதில் நீ வித்தியாசமான ஆளாய் இருக்கின்றாய் என்று கூறி, நீ நினைத்தது எல்லாம் நடக்கும் என்ற வாக்கும் தருகின்றார். பின் அவர்களுடன், தெற்கு மலையோரம், மோர் ஊற்று அருகில், பாண்டி கோவில், பளிச்சியம்மா சந்நிதியில், சித்தர் வழிபாடு செய்கின்றார், அன்றைய வழிபாட்டில், வாசி மலை சித்தர், நாக கண்ணிகள், பாண்டி சாமி, என பல தெய்வங்கள் பக்தர்கள் மேல் இறங்கி அருள் பாலித்தனர்.
  3. அதன் பின் இராதாமங்கலம் யாகத்தின் போது, யாக குண்டத்தில், அம்பாள் இறங்கும் காட்சி அவருக்கு கிட்டுகின்றது. அந்த காட்சி அவரை பரவசமடைய செய்து, பின்நோக்கி தூக்கி அடிக்கின்றது. சபையில் பின் அமர்ந்திருந்த ஒருவர், பரவசமடைந்த திரு அம்மாவாசி அவர்களை முதுகில் தட்டி, சாந்தப்படுத்தி அமர வைக்கின்றார்.
  4. திரு அம்மாவாசி அவர்களின் மூன்றாவது இராதாமங்கல யாக காலத்தின் போது, அவரது மூத்த மகனுக்கு அவர்களது ஊரில் திருமணம் நடைபெறுகின்றது. அந்நிகழ்ச்சியில், சித்தர் அய்யா பிள்ளை, தாலி எடுத்துக் கொடுத்து, ஆசிர்வதித்து, தலைச்சன் பிள்ளை ஆண் என்று வாக்கும் தருகின்றார், பிற் காலத்தில் அந்த வாக்கும் இனிதே நிறைவடைகின்றது.
  5. பின்னர் ஒரு நாள், திரு அம்மாவாசி அவர்கள் இடத்தில் வேப்ப மரத்தில், திரு இராமர், சித்தர் அய்யா பிள்ளை, இன்னும் சிலர் கூடி, அங்கு குடிகொண்டிருந்த இறை சக்தியை பள்ளிகொள்ள செய்து, நிலை நாட்டுகின்றனர். அந்த நிகழ்வின் போது, திரு இராமர் அவர்களின் மைத்துனர் மேல் அந்த இறை சக்தி இறங்கி, பெண்ணாக பிறப்பேன் என்று வாக்கு கூற, அதேபோல் அவர் மூத்த மகனுக்கு, இரண்டாவது குழந்தை, பெண்ணாக பிறக்கின்றது. அந்த வேம்பில் குடிகொண்டுள்ள இறை சக்தியை, கணவின் மூலம் திரு. அம்மாவாசி முன்னரே உணர்ந்து இருக்கின்றார். அங்கு, சித்திரா பெளர்ணமி அன்று, அந்த தெய்வத்துக்கு விஷேச வழிபாடுகள் நடந்து வருகின்றன. அந்த வழிபாடுகள் அனைத்திலும் மலைவாழ் மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து, வஸ்திரம் தந்து, அன்னதானம் அளிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு.
  6. சித்தர் அய்யா பிள்ளையுடன் சபரிமலை அய்யப்பன் முதல் பயணத்தின் போது, அவர்களுக்கு முன், அய்யப்பன் புலி மேல் செல்லும் காட்சியும் அவருக்கு கிடைத்திருக்கின்றது.
  7. அதே பயணத்தின் போது சித்தர் அய்யா பிள்ளையிடம் இருந்த ஜீவ காந்த சக்தி கொண்ட உருத்திராட்ச மாலையை திரு. அம்மாவாசியிடம் கொடுத்து உணர சொன்ன போது, அவருக்கு அருளுடன் கூடிய யோக நிலை கிடைத்ததை நினைவு கூறுகின்றார்.
  8. சித்தர் அய்யா பிள்ளை பர்மா பயணத்தின் போது சில பச்சை நிற கற்களை கொண்டு வந்து அனைவரையும் தொட்டு தருமாறு கேட்கின்றார், அதை அவர்களும் அவ்வாறே செய்கின்றனர். அது அவர்களுக்கு, தங்கள் அனைவருக்கும் அந்த கற்கள் கிடைத்தது போல மன நிறைவை தருகின்றது. திரு. அம்மாவாசி அவர்கள், அந்த கற்களை தொட்ட போது, அதில் விறு விறுவென குளிர்ந்த அதிர்வுகள் தன் மேல் பாய்ந்ததை நினைவு கூறுகின்றார். பிற்காலத்தில் அந்த கற்கள், சித்தர் அவர்களை அடக்கம் செய்யும் போது, அவர் சமாதியில் சேர்த்து புதைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்க ஓர் நிகழ்வு.
  9. ஓர் ஊர்வலத்தின் போது, சித்தர் அய்யா பிள்ளை, திரு. அம்மாவாசி அவர்களிடம், இனி, நீ தான் தீவட்டி பிடித்து வர வேண்டும் என்று கட்டளையிடுகின்றார். அதேபோல், அந்த ஊர்வலத்தில், அவருக்கு, தலைப்பாகை கட்டி, மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, தீவட்டியை கையில் தருகின்றனர். கொடுத்த கையுடன் அருள் நிலையடைந்த அவர், ஊர்வலம் முடியும் வரை, அதே நிலையில், மெய்மறந்த நிலையில், தீவட்டியை தூக்கி வந்திருக்கின்றார். கடைசியில், பாலத்தின் அருகே வந்த போது, நாக சுழற்சி ஏற்பட்டு, வாசி மேல் எழும்பி இறங்க, யோக நிலையில், சுழற்சிக்கு இசைந்துக் கொடுத்தவாறு, இயற்கையாக ஆடி வந்திருக்கின்றார்.
  10. ஒரு முறை, ஊர்வலத்தில், சித்தர் அய்யா பிள்ளையை, திரு. ஆறுமுகன் அவர்கள் அருள் நிலையில், தோலில் தூக்கி வைத்து ஆடிய காட்சி, அந்த ஈசனையே தோலில் தூக்கி வைத்து ஆடியது போல இருந்தது என கூறி மெய் சிலிர்த்தார்.
  11. சித்தர் அய்யா பிள்ளையை நேரில் பார்த்த போது, எல்லாம் தாயாகவே, ஒரு பெண் தெய்வமாகவே, தாம் அவர் மடியில் படுத்திருப்பது போலவே உணர்கின்றார்.
  12. ஒரு முறை சித்தர் அவர்கள், திரு. அம்மாவாசி அவர்களின் சயனத்தில் காட்சி தருகின்றார், அவர்கள் வீட்டிற்கு வெளியே நிற்க, திரு. அம்மாவாசி அவர்கள், சித்தர் அவர்களை உள் அழைத்து சென்று, சாமியறையில் அமர வைக்க, அமர்ந்த அவரை ஏகாந்த நிலை ஆட்கொள்ள, எழ முடியாமல் தவித்து இருக்கின்றார். இதை உணர்ந்த திரு. அம்மாவாசி அவர்கள், சித்தர் பாதத்தின் மேல் காலை வைத்து அழுத்தி, தூக்கி விடுகின்றார். இந்த காட்சியை, அடுத்த நாள் சித்தர் அவர்களிடம், அலைபேசியில் தொடர்பு கொண்டு விவரிக்க, சித்தர் விளையாட்டாக, நீ அங்கு கனவில் காலை மிதித்து எழுப்ப, எனக்கு இங்கு கால் பொத்து விட்டது என்று கூறி இருக்கின்றார். இவ்வாறாக, எனக்கு இங்கு நடக்கப் போவதை முன்னதாகவே சித்தர் உன்னிடம் தெரிவித்திருக்கின்றார் என்றார். அதேபோல், திரு. இராமர் அவர்கள், மற்றும் சில பெரியவர்கள் சையனத்தில் வரும் போது எல்லாம், அன்று மழை பெய்வதையும், பட்டறிவு மூலம் உணர்ந்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  13. ஆத்திகத்தில், சித்தர் அய்யா பிள்ளையை தாயாகவும், திரு. இராமர் அவர்களை தந்தையாகவும் கருதி, அவர்கள் வழியில் செவ்வனே பின் தொடர்ந்து வந்திருக்கின்றார்.
  14. முதல் முறை சித்தர் அவர்கள் பஞ்சாச்சரம் சொல்லி நெற்றியில் விபூதி வைத்து குங்குமம் வைக்க, திரு அம்மாவாசி அவர்கள், சித்தர் அருளால் ஆட்கொள்ளப்பட்டு, அவர் மடியில் மெய்மறந்து சாய்ந்து விடுகின்றார். பின்னர் அவர் முதுகை தட்டி எழுப்பி, ஒரு கையை பிரம்மத்தில் மேல் வைத்து “சாந்தம்” என்று சொல்லி மிருதுவாய் அழுத்தி, மற்றொரு கையால், மூன்று முறை, நீர் தருகின்றார். இந்த நிகழ்வு திரு. அம்மாவாசி அவர்களுக்கு ஆத்மார்த்தமான பெரும் மன நிறைவு தருகின்றது.
  15. ஒரு முறை ஊர்வலத்தின் போது, திரு. அம்மாவாசி அவர்கள் மேளக்காரர்களிடம், விளையாட்டாக, நான் பாட்டு படிக்கின்றேன், நீங்க அடிங்க, என்று கூறியிருக்கின்றார். அங்கில்லாத சித்தர், அதே வாக்கியத்தை, ஊர்வலத்தின் போது, திரு. அம்மாவாசியிடம் கூற, அவரும் ஒரு பாட்டு படிக்கின்றார், பின்னர், அது அவரை, பரவச நிலையடைய செய்கின்றது, நாக சுழற்சி ஏற்பட, வாசி மேல் எழும்பி, இறங்கிய நிலையில், மெய்மறந்து, பலருடன் சேர்ந்து ஆடி வருகின்றார்.
  16. ஒரு முறை சபரி மலை செல்லும் போது, சுரளி மலையில் தீர்த்ததை பிரம்மத்தின் மேல் விட, அது திரு. அம்மாவாசி அவர்களுக்கு ஈஸ்வரன், ஈஸ்வரி, மேல், அபிஷேகம் செய்வது போல காட்சியை தருகின்றது.

குறிப்பு: நேர்காணல் பதிவு செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.