Search This Blog

Sunday, March 26, 2017

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (6): திரு. முருளி. ர அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (6): திரு. முருளி. ர அவர்களின் இறை அனுபவங்கள்.


முரளி ர [Murali R]

நேர்காணல் விவரம்:

இடம்: பெத்தேல் நகர், ஈஞ்சம்பாக்கம், சென்னை.

நாட்கள்:
1. பங்குனி 13, 2017 ஞாயிற்றுக்கிழமை [03/26/2017 ] மாலை 2.56 முதல் 3:10 வரை [2:56 PM to 3:10 PM]

இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
  1. சித்தர் அய்யா பிள்ளை இறை பாடல்கள் (சிவபுராணம், சிவவாக்கியர் பாடல்கள்,) பாடும் போது எல்லாம், ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், அவருடனான ஆத்மார்த்தமான பிணைப்பையும், பந்தத்தையும், உணர்கின்றார். எந்நிலையில் இருந்தாலும், அவர் பாடும் போது சந்தோஷம் கிட்டுகின்றது. இதனால் வெகுவாய் அவர் பால் ஈர்க்கப்படுகின்றார். சித்தர்கள் பாடும் போது, குரல், ராகம், தாளம் தாண்டி, அவர்களின் ஆன்மா அனைவரின் மனதையும் வசியப்படுத்துகின்றது. இவ்வாறு இரண்டற கலந்தவர்களுக்கு, அவரவர் நிலைக்கேற்ப, சித்தர் அவர்களின் ஆனந்த, யோக, ஞான நிலைகள் வெகு இயல்பாக கிடைக்கப் பெறுகின்றது.
  2. இப்படி ஒரு முறை, சித்தர் அய்யா பிள்ளை, அம்மனூரில், அவரது இல்லத்தில் பாடிக் கொண்டிருந்த போது, திரு முரளி, அவர்கள், அதனால் வெகுவாய் ஆட்கொள்ளப்பட்டு, பத்மாசனத்தில் மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் மெய்மறந்து அமர்ந்து விடுகின்றார். அவரது உயிர் எங்கோ அவரை அழைத்து செல்ல, ஒரு சில காட்சிகள் அவருக்கு கிட்டுகின்றது. அதில் அவர் மனதில் நன்கு பதிந்த காட்சி, ஓர் பெண் அமர்ந்திருந்ததும், ஓர் ஆண், தடி வைத்துக் கொண்டு அந்த பெண் முன் நின்று இருந்ததும். இவ்வாறு இந்தக் காட்சிகளை பார்த்தவாறு, அதே நிலையில், சிறு வயதிலேயே (10–12 வயது?) மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்துவிடுகின்றார். அந்த சிறு வயதிலேயே, கிடைப்பதற்கு அரிய ஆத்ம சுகங்களை, அனுபவிக்கவும் தொடங்கி விடுகின்றார்.
  3. சித்தர் தொடும் போது, உள்ளுக்குள் ஏதோ ஒன்று மேல் எழும்பி செல்வதை உணர்ந்திருக்கின்றார். அந்த நிலையில் சித்தர் மேல் கட்டுக்கடங்காத ஈர்ப்பு உண்டாகி, அவருடன் கட்டிப் புரண்டு, பின்னிப் பிணைந்து இருந்திருக்கின்றார். இந்த நிலையை, பல முறை, யாக வீதி உலா, மற்றும் பால் குடத்தின் போதும் அனுபவிக்கின்றார். இப்படி, அவருடன் இருந்த காலங்கள் அனைத்தும் மகிழ்வுற்று இருந்திருக்கின்றார்.
  4. ஹோம வீதி உலா, பால் குடம் போதும், தன் மேல் ஒரு சக்தி வந்து இறங்க, பல முறை, மெய் மறந்த நிலையில் ஆடியும் இருக்கின்றார்.
  5. சித்தர் தீண்டும் போதும், ஒரு வித மின்சாரம் தன் மேல் பாய்வதையும் உணர்ந்திருக்கின்றார்.
  6. ஒரு சபரிமலை பயணத்தின் போது, மதுரை பக்கம், அன்பர் ஒருவர் வீட்டில், அமர்ந்து, இரவு உணவு உண்ணும் நேரத்தில், எதிரே வாசி மலையில், இரு ஒளி திவளைகள் பளிச்சென்று தோன்றி மறைகின்றது. அதைப்பற்றி சித்தரிடம் வினவ, அந்த மலையில் வாசிமலையான் எனும் சக்தி இருப்பதை குறிப்பிடுகின்றார்.
  7. சிதம்பர நீராடலில், பிரம்மச்சாரி பாத பூஜையின் போது, முன் சொன்ன அதே ஆத்ம சந்தோஷம் கிட்டுகின்றது. உயிர் மேல் எழும்புவதையும் உணர்கின்றார்.
  8. பொதுவாக, சித்தர் ஸ்பரிசத்தின் போது எல்லாம், திரு. முரளி அவர்கள், தம் உயிர், மேல் நோக்கி செல்வதையும், கீழ் நோக்கி பயணிப்பதையும் உணர்ந்திருக்கின்றார். மேலும், அந்த நிலைகளில், அவருக்கு அதீத வீரியத் தன்மை கிடைப்பதையும் உணர்கின்றார்.
  9. சித்தர் அவரின் கடைக்கண் பார்வை கூட, அவரது ஆன்மாவை இயக்கி இருக்கின்றது என்பதையும் நினைவு கூறுகின்றார்.
  10. ஒரு முறை, கடை நிலையில், அம்மனூரில், அவரது இல்லத்தில், சித்தர் அவரது உயிரின் ஒட்ட நிலையை, திரு, முரளி அவர்களுக்கு தந்து, அதை அனுபவிக்க வைக்கின்றார். உயிர் உடம்பை விட்டு, ஒளியை விட வேகமாய் செல்வதும், திரும்ப, ஏதோ ஓர் விஷயம், சித்தர் அவர்களது உயிரை, அதை விட இரு மடங்கு வேகத்துடன், திரும்ப உடலுக்குள் இறக்கும் போராட்டத்தையும், சுமார் மூன்று நிமிடங்கள் கண்களை மூடி அருகில் அமர்ந்து உணர்ந்திருக்கின்றார். அதைப்பற்றி சித்தரிடம் விசாரிக்க, அது தான் அவரது அன்றைய நிலை என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்கின்றார். அன்று, திரு. முரளி அவர்கள், பிரம்ம வாசல் திறந்தவர்களுக்கு, கடை நிலையில், உயிர் (இங்கு வாசி) பிரிய முயற்சிக்கும் நிலையும், அது திரும்ப கூட்டினுள் தள்ளப்படும் நிலையையும் உணர்கின்றார்.
  11. அதே நேரத்தில், யாகம் முடிந்த ஒரு வாரத்தில், அவரது இல்லத்தில், ஓர் உயிர் பிரியும் என்பதையும் சித்தர் முன்கூட்டியே சொல்லுகின்றார். அவர், அவரைப்பற்றி தான் சொல்லுகின்றார் என்பதை அந்த நேரத்தில் திரு. முரளி அவர்களால் யூகிக்க முடியவில்லை.
  12. ஒரு முறை, சித்தர் ஹோமத்தை முடித்து விட்டு, சிலரோடு பேசிக் கொண்டிருந்த போது, கவனம் சிதற விட்டோரை சாடுகின்றார். அது திரு. முரளி அவர்களுக்கு, சபையில் பேசும் பொருளோடு ஐக்கியமாகி, அருகில் இருப்போரிடம் பேசாமல், கூர்ந்து கவனிக்க வேண்டும்; ஒரு புள்ளியில் கவனம் முழுக்க இருக்க வேண்டும் எனும் பாடத்தை, ஆழ்மனதில் பதிய வைத்து விடுகின்றது. இது அவரது வாழ்வியலுக்கும் சிறந்த ஓர் பாடமாகவும் எடுத்துக் கொள்கின்றார்.

குறிப்பு: நேர்காணல் பதிவு செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.

Thursday, March 23, 2017

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (5): திரு. ரோஸாரியோ ஜோஸப் அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (5): திரு. ரோஸாரியோ ஜோஸப் அவர்களின் இறை அனுபவங்கள்.


ரோஸாரியோ ஜோசப் [Rozorio Joseph]
எனது சொந்த குறிப்பு என்பதால் நேரிடையாகவே பதிவேற்றி விட்டேன்.

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
  1. MITல் (Madras Institute of Technology, Chromepet, Chennai) B.Tech மூன்றாம் ஆண்டு நிறைவில், எனது தேடல் தீவிரமடைகின்றது. நண்பர்களுடன் பல ஆங்கில நாவல்கள் படித்து வந்த நான், மெல்ல தத்துவம், ஆத்திகம் என்று எனது தேடல், அகம் சம்மந்தப்பட்டவையாக மாறியது. பல மேதைகளின் புத்தகங்கள், அதிலும் குறிப்பாக, இயன் ராண்ட், ப்ரெட்ரிக் நீட்ஷே, ஒஷோ, என அது விரிந்து தேடலை இன்னும் தீவிரமடைய செய்கின்றது. இப்படி எந்த தேடலிலும் அகப்படாத ஒன்றை நோக்கி, விரக்தியுடன், வாழ்வியல் சுகத்திலும், கேளிக்கைகளிலும் லயித்தவாறு சில வருடங்கள் கழிக்கின்றேன். பின், 2005 கடைசியில் முன்னிருந்த அதே தேடல் படு தீவிரம் அடைகின்றது. எப்படியாவது அதை உணர வேண்டும் என்ற முயற்சியில் எந்த புத்தகமும் உதவாமல், கடைசியாக, கந்த சஷ்டி கவசத்தில் “நிஷ்டையும் கைகூடும்” என்று சொல்ல, அதை வாங்கி படிக்கின்றேன். மூன்று முறை படித்தேன், அன்று மூன்றாவது நாள். எதுவும் உணர முடியவில்லை. வெறுப்பும், விரக்தியும் மட்டுமே எஞ்சியது. கந்த சஷ்டி கவச புத்தகத்தை தூக்கி எரிந்து விட்டு, அறையில் (தி. நகர்) ஒரு மூலையில், புகை பிடித்தவாறு தலையை சாய்த்தேன். என்னை அறியாமல், எந்த ஒரு முயற்சியும் இன்றி மனம் உள் ஒடுங்கியது. என்னை அறியாமல் முதுகின் அடிப்பாகத்திலிருந்து, ஓர் உருண்ட, திரண்ட ஒளி, ஏதோ ஒரு முடிச்சிலிருந்து அவிழ்க்கப்பட்டு, வேகமாக உச்சந் தலையை நோக்கி சென்று முட்டியது. அன்று தான், எனது முதல் சமாதி நிலையை அனுபவிக்கின்றேன்.
  2. பின்னர் ஒரு முறை, ஆழ் நிலை தியானத்தில், முதுகு தண்டை போல், உடம்பின் மத்தியிலிருந்து கிளைகளாக, பளிச் என்று எங்கும் ஓடிக் கொண்டிருக்கும் சக்தியின் ஓட்டத்தை காண்கின்றேன். இவை எந்த மேதை எழுதிய புத்தகங்களிலும் குறிப்பிட வில்லையே என்ற வருத்தம் மேலோங்க, அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள, நமக்கு ஓர் குரு தேவை என்ற எண்ணம் மிக ஆழமாக விதைக்கப்படுகின்றது. அன்றே தொடங்கியது எனது குரு தேடல், பதினெண் சித்தர்களில் ஆரம்பித்து, கடைசியாக அன்பர் ஒருவர் மூலம், சித்தர் அய்யா பிள்ளையிடம் அது என்னை அழைத்து செல்கின்றது. சித்தரின் தொடர்பு கிட்டியும், அவரை நேரில் காண ஆறு மாத காலங்கள் ஆனது.
  3. ஒரு வழியாக, அவரின் உத்திரவின் படி 2006ல், சுயம்பு சக்தியாக, சித்தர் அய்யா பிள்ளையை நேரில் காண, அதே நண்பருடன் நாகவிளாகம் செல்கின்றேன். அவர் ஒரு ஓடையை காட்டி குளித்து விட்டு வர சொன்னார். அங்கு சென்று பார்த்த பின்னரே தெரிந்தது, அது நீரோட்டம் இன்றி, அழுக்கு படிந்த, கணுக்கால் அளவு தண்ணீர் கொண்ட குட்டை என்று. அன்றைய காலக்கட்டங்களில், நான் புற சுத்தத்தை (Hygenic) வெகுவாய் நேசித்தேன். அந்த பாசி படிந்த, தேங்கிய குட்டையில் காலை வைக்க எனக்கு கூசியது. திரும்பி சென்று விடலாமா என்று கூட யோசித்தேன். ஆனால், என்னை ஏதோ ஒரு சக்தி உந்த, மெல்ல குட்டையை நோக்கிச் சென்றேன். முதல் முறையாக, மனம் உவந்து கீழ்ப்படிந்தேன். குட்டையில் கால் வைத்த அடுத்த நொடி, அது வரை வெறித்திருந்த வானம் மழையாக பொழிந்தது. அன்று நான் குட்டையில் குளிக்கவில்லை. மழையில் ஆசை தீர நனைந்தேன். உஷ்ணம் தணிந்தது. ஒரு நாழிகை நீடித்திருக்கும். மனமும் அமைதியானது. உள்ளார்ந்த களிப்புடன் சித்தரின் இல்லத்திற்கு சென்றோம். அவரும் எங்களோடு பேச காத்திருந்தார், அன்று ஆரம்பித்தது எனது இறை பயணம், அதில் சித்தரிடம் கிட்டிய அனுபவங்கள் பின்வருமாறு: [2006]
    1. சென்னையின் ஓர் அன்பரின் வீட்டில், இரவு சத்சங்கம். திரு. ஆறுமுகன் ரூபமாக கூத்துக்கட்டுதல் இனிதே ஆரம்பித்தது. அவர் “கந்தனே வழியென்று, கருனை முகத்தானே வழியென்று” என்று ஒரு பாடலை கம்பீரமாக, சப்தமாக பாட, என்னை அறியாமல், எனது கண்களில் நீர் ததும்பியது. வெளியே வந்து விழுந்துவிடுமோ என்ற அளவிற்கு இதயம் வேகமாய் துடித்தது. எதிரில் உச்சி வெயில் சூரியனை ஒத்த, பிரகாசமான ஒளி என் முன் தென்பட்டது. திரு. ஆறுமுகனின் கழுத்திலிருந்து முகம் வரை அது மறைத்து நிற்க, எனக்கு, பிரணவ சப்தத்துடன், சக்கர சப்தமும் கேட்டது. அப்படி ஒரு பிரமாண்டமான ஒலி—ஒளி தரிசனம் அன்று எனக்கு கிட்டியது. அன்று என் மூலமாக, முதல் முறையாக வாலையும் பேசியது, “ஆடுபவனும் அவனே, ஆட்டுவிப்பவனும் அவனே”. அத்துடன் சத்சங்கமும் நிறைவுற்றது. [2006-2007]
    2. இது இவ்வாறு இருக்க, அதே நாள், அதே நிகழ்வில், ஒரு கோப்பை தண்ணீரில், அதே ஆத்ம நிலையில், என்னை தண்ணீரை உற்று நோக்க சொல்லி, திரு. ஆறுமுகன் [விபூதி சித்தர்] கட்டளையிடுகின்றார். எனக்கு முதல் முறையாக, வட்ட வட்டமாய் நெற்றி பொட்டிலிருந்து பச்சை, நீல, வெள்ளை ஒளி வட்டம் தோன்றுகின்றது. அது தண்ணீரில் தெரிந்தது. [2006-2007]
    3. ஒரு முறை சித்தர் அய்யா பிள்ளை சொன்ன புத்தகத்தை படித்து, அதிலிருந்த குறிப்பை, “சோ ஹம்” என்ற மந்திரத்தை, விளையாட்டாக, குறிப்பிட்ட முறையில் ஜெபிக்க, அன்று இரவு, சையனத்தில் விழிப்புணர்வு ஏற்பட, அதே மந்திரத்தை, அதே முறையில், ஆழ் மனம் சொல்லிக் கொண்டிருந்தது, அப்படி சொல்லிக் கொண்டிருக்க, உடம்பினுள், நெஞ்சினில், சோதி ஒன்று கிளம்பி பிரம்மத்தை நோக்கிச் சென்றது. பயத்தில் எழுந்து அமர்ந்து விட்டேன். அதுவே எனது முதல் சோதி (உள்ளொளி) தரிசனம். [2007-2008]
    4. ஓர் ஹோமத்தின் போது, நாகவிளாகத்தில் சித்தர் அவர் தம் இல்லத்தில், முன் அறையில், திண்டின் மேல் படுத்தவாறு சயனித்திருக்க, பிரம்மத்தின் ஊடே, சுடரானது (சோதி), ஆண் குறி, யோனியை புணர்வதை போல், மெல்ல, மிருதுவாய், இலகுவாய், சுகமாய் புணர்ந்து வெளி வர, அதை திரும்பவும், உள் இழுத்துக் கொள்கின்றேன். இந்த நிகழ்வை எண்ணியவாறு வியப்பில் படுத்திருக்க, சித்தர் அய்யா பிள்ளை உள் அறையிலிருந்து வெளியே வந்து, எனது மன ஓட்டத்தை உணர்ந்து, “என்னடா ரோஸு, பொறுமையாக அனுபவிக்கலாமா…” என்று கூற, எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அன்று எனக்கு கிடைத்த அனுபவத்தை விட, சித்தர் எனது மன ஒட்டத்தையும், எனது ஆத்ம அனுபவத்தையும், எந்த அளவிற்கு உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகின்றார் என்பதே, என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. [2007-2008]
    5. 2008ல் தில்லை நடராஜர் கோவில் நீராடல் போது, ஒவ்வொருவராய் சித்தர் நீராட்டி விட்டு, மெல்ல என் அருகே வர, என் உடல் துடிக்க ஆரம்பித்து விட்டது. உள்ளிருந்து ஏதோ ஒன்று வெகு வேகமாய் கழன்று, நாபி துடிக்க, மேல் நோக்கி நகர்ந்தது, தன்னை விடிவித்துக் கொள்ள துடித்தது. அவர் “ஓம்” என்று உச்சரித்தவாறு என் அருகில் வர, அவர் கண்களை நான் உற்று நோக்க, உள்ளிருந்த கழன்ற ஒன்று, முழுவதுமாய் கழன்று, பிரம்மத்தை (உச்சந் தலை—அண்டவுச்சி) நோக்கி நகர்ந்தது, வலது கண் பிரகாசமாய் சூரியனை ஒத்த நிலையில் பிரகாசிக்க, இடது கண் நிலவை போல் பிரகாசித்து, இரண்டும் நெற்றிப் பொட்டுக்கு மேல், சேரும் இடத்தில் மின்னல்கள் வெட்ட, அதையும் தாண்டி, பிரம்மத்தையும் தாண்டி, சர சர வென்று, விட்டால் போதும் என்பது போல், எனது உயிரும், அதனுள் அடங்கிய உணர்வும், சக்கரம் சுற்றியாட, பரப்பிரம்மம் நோக்கி, அதி வேகத்தில் சென்றது. கால்கள் தரையில் நிற்கவில்லை, உடல் சித்தரின் மேல் சாய்ந்தவாறு கிடக்க, கணுக்கால்களை அன்பர் ஒருவர் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார். சித்தர் முதுகில் மூன்று முறை தட்ட, உடலை விட்டு சென்று கொண்டிருந்த எனது உயிர் திரும்பவும் உடலுக்குள் இறங்கியது, வற்றிய நுரையீரலில் காற்று திரும்ப உள்புக, இருமிக் கொண்டே சித்தரை, கிழ் இறக்கி விட்டதற்காக பாதி கோபத்துடனும், பாதி பிரம்மிப்புடனும் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நிகழ்வுக்கு பின், ஒரு நாழிகைக்குள், கைகளில் தோல் உரித்தாற் போல், எனக்கு, அன்று, முதுகு தண்டில் தோல் உரிந்தது. இந்த அனுபவத்தை பிற்காலத்தில் சித்தர் காக புஜண்டர் பாடலில் படித்த போது நல்ல தெளிவு கிட்டியது.
    6. மேலும், பல முறை, என்னை யோகத்தில் தள்ளியுள்ளார். கால்கள் பின்னும், முட்டி போட்டவாறு, முதுகு பின்னோக்கி வளைந்து, நாபியிலிருந்து விடுபட்ட உயிர் பிரம்மத்தை முட்டி நிற்கும். எதுவுமே செய்யாமல் வாசி கும்பகித்த நிலை, அவரது அருகாமை எனக்கு கிடைத்தருள செய்தது. சில சமயம் பிரம்மத்தை விட்டும் உயிர் பிரிந்து சென்றது.
    7. அனைத்தையும் விட, அவர் அருகாமையில், அவர் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள் பாட, நமக்கு மனம் உள்ளடங்கி, ஆத்ம சுகம் கிட்டும். இப்படி ஆத்ம போதையில் பல நாழிகைகள் கழித்தது உண்டு.
    8. ஒரு முறை ஹோமத்தின் போது, சித்தர், ஒளி விளக்கை, என்னையும், அன்பர் ஒருவரையும் பிடித்து வர சொல்ல, கண்கள் கூட திறக்க முடியாத அளவிற்கு அப்படி ஓர் ஆத்ம போதை கிடைத்தது. திரு. ஆறுமுகன் அவர்கள் கூட, நாங்கள் மது தான் அருந்தி விட்டு ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றோம் என்ற சந்தேகத்துடன் தான் பார்த்தார். அந்த அளவிற்கு எங்களுக்கு ஆத்ம போதை கிட்டியது. இதை அவரே எங்களிடம் பின்னர் தெரிவித்தார்.
    9. சென்னையில், சித்தருக்கு மிகவும் வேண்டிய ஓர் அன்பர் வீட்டில், சித்தர் யாருக்கும் செய்யாத ஒரு விஷயத்தை என்னையும், மற்றும் ஒரு அன்பரை வைத்து செய்து முடித்தார். செய்வினை அன்று அகற்றினோம். அது என்னை பதம் பார்த்து விட, அலுவலகம் சென்ற நான் உடனே திரும்ப வந்து விட்டேன். கண்களுக்குள் கரப்பான் பூச்சி கால் நுனி மாட்டிக் கொள்ள நான் துடியாய் துடித்தேன். இது எவ்வாறு நடந்தது என்று சற்றும் அறிகிலேன். மேல் அறையில் வலியுடன் படுத்திருக்க, மெல்ல சித்தர் என் அருகே வந்து, “வலிக்குதா, உன் உயிரை பணையம் வைத்து செய்தேன், குரு நாதர் காப்பாற்றி விட்டார், பொறுத்துக் கொள்”. என்றார். எனது வாழ்க்கையில், அது மறக்க முடியாத ஓர் நிகழ்வு. சித்தர் என் மேல் வைத்திருந்த நம்பிக்கை, மது அருந்திக் கொண்டும், சிகரெட் பிடித்துக் கொண்டும், ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டும், விளையாட்டு போக்காய் இருந்த என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்தது. அன்று முதல் அவருடனான உறவு அசைக்க முடியாத பலம் வாய்ந்த ஒன்றாய் மாறியது. [2009-2010]
    10. பின்னர் பல நேரங்களில் தேர்ந்தெடுத்த புத்தகங்களை அவருக்கு படித்து காட்ட, அதற்கான விளக்கங்களை அவர் அனுபவ ரீதியாக சொல்வது வழக்கம். இப்படி அவரது அறிவும், அனுபவமும், எனக்கு மெல்ல மெல்ல கிடைக்க ஆரம்பித்தது. [2009-2010]
    11. மேலும் தியானத்தில் காட்சிகள், விழிப்பு நிலையில் சக்கரங்களை காணுதல், அதிர்வு நிலைகளை உணர்தல், ஆழ் நிலை தியானம், உள்ளொடுங்கிய சமாதி நிலை, பரகாய பிரவேசம் என பல நிலைகளை உணர்ந்தேன். இன்றளவும் அவைகளை அனுபவித்துக் கொண்டு தான் வருகின்றேன்.
    12. சித்தர் விரும்பி செல்லும், திருவான்மியூர், சக்கரத்தம்மாள் கோவிலில் காலை சில நாட்களாக தியானம் செய்து வந்தேன். ஒரு முறை ஆழ் நிலை தியானத்தில், வட்ட வட்ட ஒளியினூடே பிரவேசம் அடைய, பயணத்தின் முடிவில், வேறு ஒரு இடத்தில், யாரோ ஒருவர் பூசை செய்ய, அவர் (ஆணின் குரல்) ஓதும் மந்திரம், “வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி…” எனக்கு தெள்ளத் தெளிவாக கேட்டது. இதை சித்தரிடம் சொல்ல, அவர் முதலில் கூறியது, “அவளை தொந்தரவு செய்யாதே” என்று தான். அன்றிலிருந்து, அங்கு சென்று தியானம் செய்வதை நிறுத்தி விட்டு, அந்த பக்கம் செல்லும் போதெல்லாம் சித்தர் சக்கரத்தம்மாள் சமாதிக்கு சென்று விட்டு வருவதை மட்டும் வழக்கமாக கொண்டேன். [2008-2009]
    13. ஒரு ஹோமத்தின் போது மழையை நிறுத்திக் காட்டினார், அன்று அவர் என்னிடம் கூறியது, நாம் ஸ்தம்பம் செய்தால் இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் மாற்றலாம், இயற்கையையும் கட்டுப்படுத்தலாம், ஆனால், அதற்கு முதலில் குருவின் உத்திரவு பெற வேண்டும், அதற்காக தான் ஊர்வலம் ஆரம்பிக்கும் முன், உத்திரவு கிடைக்கும் வரை மன்றாடினோம் என்றார்.
    14. அவர் பல ஆத்மார்த்தமான மற்றும் தனிப்பட்ட விஷயங்களை என்னுடன் பகிர்ந்துக் கொண்டார். அதில் எனக்கு மிகவும் கவர்ந்தது, அவர் வறுமை தாள முடியாமல், புளியங் கொட்டையை வேகவைத்து உண்டது. வறுமை தாளாமல் மூன்று முறை தற்கொலை செய்து கொல்ல முயற்சித்து தோல்வி அடைந்தது. சித்தர்கள் அவரை காபாற்றுவது, என சராசரி மனிதனின் உணர்வுகளையும் அனுபவித்து, பல துரோகங்கள் இழைக்கப்பட்ட பின்னரும், தனது வேலைகளை செவ்வனே செய்து வந்து, குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றி, ஆத்ம ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் விடுதலை பெற்றதே. இது சித்தர் மரபில் வரும் அனைவருக்கும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.
    15. அவருடன் பல பயணங்களில் பங்கேற்று, அருவி, மலை, காடு, குடும்ப நிகழ்வுகள் என ஊர் ஊராய் சுற்றி வருதல். ஒவ்வொரு யாத்திரா பயணத்திலும், கூட வரும் அனைவரையும் உட்கார வைத்து, பிரம்மத்தில் நீர் வார்த்து குளிப்பாட்டுவது அவரது வழக்கம். ஒவ்வொரு முறை அவர் பிரம்மத்தில் நீர் ஊற்றும் போதும், மனம் சொக்கி நிற்கும். அவை நான் ஆத்ம ரீதியாக இன்புற்று வாழ்ந்த காலங்கள். [2006-2011]
    16. ஒரு முறை என்னை ஓர் பண்டிகை காலத்தில், நாக விளாகத்திற்கு அழைத்து, வெள்ளை சட்டையும், பச்சை வேட்டியும், சில நாணயங்களுடன் தாம்பூலத்தில் வைத்து தர, அதை வாங்கிய அடுத்த நொடி, முழுவதுமாய், உயிர் (வாசி), பிரம்மத்தின் வழியாக, என்னை விட்டு அதிவேகத்தில் பிரிந்து, சற்று நேரம் அந்தரத்தில் இருந்து விட்டு, சில நொடிகள் கழித்து, பிரம்ம சக்கரத்தை பார்த்தவாறு உடலுக்குள் இறங்கியது. நான் விழித்த பார்த்த போது எனது உடல் கிழே கிடந்தது, சித்தர் எனது அருகில் நின்றுக் கொண்டு என்னை எழுப்பிக் கொண்டிருந்தார். அன்று தான் யாம் அறிந்துக் கொண்டோம், வாசியின் வீரியத்தையும், வேகத்தையும்.[2009-2010].
    17. ஒரு முறை மகாபலி்புரத்தில், அன்பர் ஒருவர் வீட்டில் வழிபாடு முடித்து விட்டு, திரும்ப சென்னை நோக்கி பேரூந்தில் வந்து கொண்டிருந்த போது, மனம் முழுவதுமாய் அடங்கி, உள்ளோடும் இரு கலைகளின் ஓட்டத்தை, தெளிவாக கண்டு, அதில் லயித்து கிடந்தேன். வலது நாசியும் வலது கண்ணம் சேரும் இடத்தில், பச்சை நிற ஒளியின் ஓட்டமும், இடது நாசியும், இடது கண்ணம் சேரும் இடத்தில் நீல நிற ஒளி ஓட்டமும், மேல் நோக்கி ஆக்ஞையில் கூடி, பின்னி, பின் ஒர் பிரகாசமான வெண்மை நிற ஒளியாய் மேல் நோக்கி சென்றது. இந்த அனுபவத்தில் குறிப்பிட வேண்டிய நுணுக்கமான விஷயம் என்னவென்றால், சுவாசிக்க வேண்டும் என்ற உணர்வு கூட அற்று போய், அதற்காக சிறிது அளவு கூட மெனக்கெடாமல், அந்த சுவாசிப்பையே வேறொரு, தனக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத, முழுவதுமாய், வேறொரு நிகழ்வாக பார்க்கும் நிலை, அந்த அளவிற்கு மனம் உள்ளார அடங்கி, கலையின் ஓட்டங்களை கவனித்தவாறு இருந்தேன். [2009-2010] 
    18. பம்மல் திரு. கடற்கரையாண்டி குடும்பத்தினர் குடியிருந்த வாடகை இல்லத்தில், அன்பர் ஒருவர் உதவியுடன், சித்தர் அய்யா பிள்ளைக்கு எண்ணெய் தேய்து, உடம்பில் உள்ள தசை நார்களை வருடி, நாடிகளை தட்டி, பதத்துடன் இலவாகமாய், வாசியை மேல் ஏற்றி கும்பிக்க செய்து, பிரம்மத்தை தீண்டி, பர நிலை கிட்ட செய்தேன். இதனால் மிகவும் மகிழ்வுற்ற சித்தர், நான் யார் என்று உணர்ந்துக் கொள் என்று கூறி, தனது முழு சக்தியை என் மேல் பாய்ச்சினார், அவர் அருகே செல்ல முயன்றும் என்னால் ஒரு அடி கூட அருகில் எடுத்து வைக்க முடியவில்லை. என்ன செய்தும் அவரை நெருங்க முடியவில்லை. அந்த அளவிற்கு அவர் உடம்பில் இருந்து, ஜீவ காந்த சக்தி என் மேல் வேகமாய் பாய்ந்தது. என்னை அவரை நெருங்க முடியாமல் தடுத்தது. பின்னர், இருவரும் சிரித்துக் கொண்டே சகஜ நிலைக்கு திரும்பினோம். அதன் பின், அந்த நிகழ்வை பற்றி அலைபேசியில், என்னை அழைத்து, அதன் சுட்சமத்தையும், அது எனக்கு, சித்தர் திருமூலர் மூலமாக கிடைத்திருப்பதையும் தெரிவித்துக் கொண்டார். பின்னர், அவர் அனுபவித்த அந்த சுகத்தை அவரது மனைவியிடம் கூட அனுபவித்தது இல்லை என்று கூறி தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திக் கொண்டார். [2009] 
    19. பின் ஒரு நாள் இந்தோனேஷியா சென்று விட்டு திரும்பிய நேரத்தில், அவர், என்னை மகாபலிபுரத்தில், ஓர் அன்பர் வீட்டிற்கு அழைத்து, ஒரு பாக்கேட் சிகரெட்டும், பக்கத்து அறையில் இருந்த ஜெர்மனியர் இடமிருந்து ஒரு பாட்டில் பீர் வாங்கி வரச் சொல்லி அதில் ஒரு கோப்பையை  எனக்கு கொடுத்து அருந்துமாறு சொன்னார். காதல் முறிந்த வலியால் மிகவும் ஒடுங்கிப் போன நிலையில் இருந்த எனக்கு, அது தேவ அமிர்தமாக இருந்தது. அப்பொழுது என்னிடம் அவர் கூறியது இதில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள், ஏன் விபச்சாரியிடம் கூட செல், தற்கொலை மட்டும் செய்து கொள்ளாதே என்று ஆறுதல் கூறினார். அந்த இழப்பிலிருந்து வெளியே வர பல மாதங்கள் ஆகின, அதிலும் குறிப்பாக, நான் வேலை செய்த இடத்தில் இருந்த சில பெண் நண்பர்கள் மூலமாகவும், சித்தர் அய்யா பிள்ளை நேசித்த, பல குருமார்கள் அருளாலும், மெல்ல புகை பழக்கத்தையும், பின்னர் குடி பழக்கத்தையும் விட்டு, எழுதுகோலை கையில் எடுத்தேன். [2010] 
    20. பின்னர், மேற்சொன்ன அதே நிகழ்வின் போது, நாங்கள் இருவரும் மது அருந்தியவாறு பேசிக் கொண்டிருக்க, அவரை ஒரு பெண் அலைபேசியால் அழைத்து, அழாத குறையாக தனது இன்னல்களை முறையிட்டாள். தீடிரென்று, அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்த போதே, என்னை அழைத்து, அவர் எதிரில் நிற்க சொல்லி, சித்தர் சிவவாக்கியர் பாடல்கள் பாட, எனது வாசி கும்பித்து, பர நிலை அடைந்தேன், வெளி சக்கரத்தையும் கண்டேன். நான் அப்பொழுது, அனுபவித்துக் கொண்டு இருந்த நிலையை, என் மூலமாக, அலைபேசியில் அந்த பாடலை கேட்டுக் கொண்டிருந்த அம்மையாருக்கும் கிட்டச் செய்தார். பின்னர் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டது, அந்த அம்மையாருக்கு, என் மூலமாக கிடைத்தாக இருக்க கூடாது, அதனால் தான் உன் மூலமாக தந்தேன் என்றார். [2010]
    21. முதல் சந்திப்பில் அவருடன் பேசிக் கொண்டு இருந்த போது, நான் காட்டுக்கு சென்று சமாதி நிலையை அடைய விரும்புகின்றேன் என்று சொன்ன போது, நீ காட்டுக்கு சென்றாலும், அங்கு மலை வாழ் மக்கள் மாலை சார்த்தி உன்னை சாமியாக்கி, உனக்கு திருமணமும் செய்து, வாழ்வியலில் தள்ளி விடுவார்கள், நீ அங்கு மரம், செடி, கொடி, பறவைகளுக்கு நன்மை செய்வதை விட, மக்களோடு மக்களாக, வாழ், மக்களக்கு நன்மை செய், உன் மூலமாக நான் செயல்படுவேன் என்று கூறினார். பின், வீட்டினோடு இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்ததை நான் சொல்லாமலே, அவரே உணர்ந்து, முதலில் அதனை புதுப்பித்துக் கொள் என்றும் கட்டளையிட்டார், அதன் பின்னரே, மெல்ல, உலக வாழ்க்கையிலும், வீட்டினோடும், தொடர்பு ஏற்படுத்திக் கொண்டேன். [2006]

Wednesday, March 22, 2017

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (4): திரு. முருகன். பா அவர்களின் இறை அனுபவங்கள்.


சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (4): திரு. முருகன். பா அவர்களின் இறை அனுபவங்கள். 

 

முருகன் பா [Murugan P]
நேர்காணல் விவரம்:
இடம்: நடேசன் பார்க், தி. நகர், சென்னை.
நாட்கள்: பங்குனி 4, 2017 வெள்ளிக்கிழமை [03/17/2017 ] மாலை 3.52 முதல் 4:10 வரை [3:52 PM to 4:10 PM]

இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
  1. திரு. முருகன் அவர்கள், திருமணத்திற்கு முன்னரே, அமெரிக்காவில் இருந்து வந்த பின், சித்தர் அய்யா பிள்ளையை சில அன்பர்கள் மூலம், ஹோம காரியங்களுக்காக, நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டுகின்றது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், திரு. முருகன் அவர்களுக்கு பிராமணர்கள் எழுப்பும் யாகத்தில் உடன்பாடு இருந்தது இல்லை. இருப்பினும் சித்தர் அத்தகையவர் இல்லை என்று அறிந்து, அவரை சந்திக்க மனம் உவந்து முன்வருகின்றார். அதற்கேற்ப அவரை நேரில் சந்தித்ததும், அவர் மேல் நம்பிக்கையும், பிரியமும் ஏற்படுகின்றது.
  2. அதன் பின், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அதுவும், குறிப்பாக, வெளிநாடு சென்று திரும்பி வந்த போதெல்லாம், சித்தர் அய்யா பிள்ளையை நேரில் சந்தித்து வருகின்றார்—சென்னையிலும், நாகவிளாகத்திலும். மெதுவாக அவர் நடத்திய ஹோமத்திலும் பங்கேற்று, அங்கு நடக்கும் நல்ல விஷயங்களிலும், சித்தர் தம் சமநோக்கு நிலையையும் கண்டு பெருமிதம் கொள்கின்றார். இதை குறிப்பிட காரணம், சித்தர்கள், ஒருவருக்கு ஒரு விஷயத்தில் உடன்பாடு இல்லையெனினும், அதன் மூலமாகவே, அதன் நன்மைகளை அனுபவமாக கொடுத்து, எவ்வாறு அவர்களை ஆட்கொள்கின்றனர் என்பதற்கு சான்று.
  3. திரு. முருகன் அவர்களக்கு, சித்தர் அய்யா பிள்ளை, ஓர் தந்தையைப் போல் நல்லது, கெட்டது விலக்கி, அவரது வேலை முதற் கொண்டு, அவரின் அனைத்து குடும்ப நிகழ்வுகளையும் ஆலோசனை செய்து, வழி நடத்தி வருகின்றார். இவரது விஷயத்தில், வாழ்வியலிலும், சிறந்த ஓர் வழிகாட்டியாக விளங்குகின்றார்.
  4. அதேபோல், அவரது அறிவுரை படி நடக்கு, வேலைக்காக, வெறும் ரூபாய் பத்தாயிரத்துடன், 2006ல் ஆஸ்திரேலியா சென்றவருக்கு, அங்கே குடி உரிமை கிடைத்து, சொன்ன படி மூன்றே மாதங்களில், சொந்தமாக உணவகம் திறந்து, வியாபாரம் நடத்தும் அளவிற்கு, நல்ல, ஏதுவான சூழல் உருவாகுகின்றது. இது திரு. முருகன் அவர்கள், சித்தர் மேல் வைத்திருந்த நம்பிக்கைகும், கீழ்ப்படிதலுக்கும் (ஏதுவான சூழலை உருவாக்க) ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.
  5. சித்தரின் வாக்கின் படி, சொன்னது போல், மூன்று மாதங்களில், ஆஸ்திரேலியாவில், வியாட்நாம் நன்பர் ஒருவர் தனது உணவகத்தை நடத்த முடியவில்லை என்றும், அந்த பொறுப்பை திரு. முருகன் அவர்களுக்கு கொடுத்து, நீ வாடகை மட்டும் தந்தால் போதும் எனக்கு எதுவும் தேவையில்லை என்று ஒப்படைத்து விட்டு, அந்நேரத்தில் பணம் ஏதும் இல்லாத திரு. முருகனிடம், ஆயிரம் டாலர் தந்து, தேவையான மளிகை பொருட்களையும் வாங்கி கொடுத்து விட்டு, வேலையை ஆரம்பிக்குமாறு சொன்னதை நினைவுகூர்ந்து, சித்தரின் வல்லமையை உணர்ந்து அகமகிழ்கின்றார். ஆறு மாதங்களில், திரு. முருகன் அவர்கள், அந்த கடையை, விலைக்கு வாங்கி, சொந்த கடையாக்கி கொள்கின்றார். முன்னரே, சித்தர் சொன்ன மாதிரி, சொந்த வீடும் ஆஸ்திரேலியாவில் வாங்குகின்றார்.
  6. ஒரு யாகத்தின் போது, சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன், (இந்த குறிப்பு எழுதிய காலத்திலிருந்து) அனைவரும் யாகம் முடிந்து, உத்தரவு வாங்கி செல்லும் போது, திரு. முருகன் அவர்களை இன்னும் ஒரு நாள் இருந்து விட்டு செல்லுமாறு உத்திரவு தருகின்றார். அதன்படி அவர்களும் தங்க, மேலும் சில அன்பர்களுடன் (திரு. ஆறுமுகன் அவர்கள் கூட இருக்க) வேளாங்கண்ணி சென்று வருமாறு உத்திரவு இடுகின்றார். அங்கு சென்றிருந்த போது, மீன் இறைச்சி உண்ண விரும்புகின்றனர். அதன் படி அவர்களும் உண்டு, சித்தர் அவர்களுக்கும், வஞ்சரம் மீன் வாங்கி வருகின்றனர். என்றும் மீன் விரும்பி சாப்பிடுபவர், அவர்கள் சென்ற நேரம் யோக நிஷ்டை ஆட்கொள்ள அன்று அவருக்காக வாங்கி வந்த மீன் இறைச்சியை உண்ணவில்லை. எனவே அதை வீண் செய்யாமல், அவர்களே உண்ணும் பொருட்டு, இரவு இரண்டிலிருந்து மூன்று மணி அளவில், ஐவர் சேர்ந்து, பாலத்தின் மேல் (நாகவிளாகம்), கீழே சலசலவென ஆறு ஓட, சற்று தியானம் செய்து விட்டு உண்ணலாம் என்று அமரும் போதே, அனைவருக்கும் எங்கிருந்தோ “ஓம்” என்ற பிரணவ சப்தம் கேட்கின்றது. அதை கேட்ட நிமிடம், திரு. முருகன் அவர்களுக்கு மெய் சிலிர்க்கின்றது. பின் கொண்டு வந்த மீன் இறைச்சியை, அங்கிருந்த அனைவருக்கும் பிரித்து தருமாறு, திரு. ஆறுமுகன் அவர்களிடம் தருகின்றனர். ‘சரவணபவ’ என ஆறு பேர் இருக்க, இங்கு ஜவர் மட்டும் தானே இருக்கின்றோம், என்று திரு ஆறுமுகன் அவர்கள் சற்று தாமதிக்க, நள்ளிரவு நேரத்தில், அங்கு ஒர் பைரவர் அவர்களை தேடி வருகின்றது. அதன் பின்னரே, அவரும், ஆழ்ந்த நிலை சென்று, அதே நிலையில், அதை அனைவருக்கும் பிரித்து கொடுக்கின்றார். பைரவர் உடன்; ஐவரோடு, ஆறு பேராக, இயற்கைக்கும், ஆன்மாவிற்கும், படைத்த (சிவா அர்ப்பணம் செய்த பின்) மீன் இறைச்சியை உண்டு மகிழ்கின்றனர். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், திரு. ஆறுமுருகன் அவர்கள் எதார்த்தமாக மீன் இறைச்சியை உடைத்த தர, சதை பகுதி மனிதர்களுக்கும், எலும்பு பகுதி பைரவருக்கு கிடைக்கின்றது.
  7. ஒரு யாகத்தின் போது, இரவு சயனத்தில், என்ன என்ன காட்சி கண்டனர் என்று வினவ, திரு. முருகனின் மனைவி அவர்களுக்கு, சித்தர் அய்யா பிள்ளை கிணற்றில் தவம் இருப்பது போல் காட்சி தந்ததையும், அதை அனைவரும் ஆச்சிரியத்துடன் கேட்டதையும், தனக்கு அதன் விளக்கம் தெரியவில்லை என்பதையும் நினைவு கூறுகின்றார்.
  8. வேலை நிமித்தமாக, சில வருடங்களாக, புறத்தில் சித்தர் அய்யா பிள்ளையை விட்டு திரு. முருகன் அவர்கள் விலகி இருக்க, தனது உடல் பிரியும் ஒரு வாரத்திற்கு முன், தன்னை வந்து பார்க்குமாறும், அந்த ஹோமத்தில் கலந்துக் கொள்ளுமாறும் உத்திரவிடுகின்றார். அதேபோல், திரு. முருகன் அவர்களும், அதற்கேற்றாற் போல வர, சித்தர் அவர்களது கடைசி ஹோமத்திலும், இறுதி சடங்கிலும், கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப் பெறுகின்றார்.
  9. சித்தர் அவர்கள் உடம்போடு இருந்த போதே, திரு. முருகன், அவர்களது மனைவி தம் கனவுகளில் சில குறிப்புகள் தந்து சென்றதையும் நினைவு கூறுகின்றார்.

குறிப்பு: நேர்காணல் பதிவு செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.

Wednesday, March 15, 2017

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (3): திரு. குணசீலன். பா அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (3): திரு. குணசீலன். பா அவர்களின் இறை அனுபவங்கள்.

திரு. குணசீலன். பா [Gunaseelan P]

நேர்காணல் விவரம்:
இடம்: பாட்ஷா தோட்டம், மயிலாப்பூர், சென்னை.

நாட்கள்:
மாசி 28 2017 ஞாயிற்றுக்கிழமை [03/12/2017 Sunday] மாலை 3.14 முதல் 3:47 வரை [3.14 PM to 3:47 PM]

இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
  1. திரு. குணசீலன் அவர்களுக்கு, சித்தர் அய்யா பிள்ளையை நேரில் சந்திக்கும் முன்னரே எண் கணிதம், விநாயகர் வழிபாடு, சிவன் வழிபாடு இவைகளின் மூலம், ஆத்ம அனுபவங்கள் பல கிடைக்கப் பெறுகின்றது. சுயம்பு சக்தியாக வெளிப்பாடும் ஆகின்றது. அவற்றை தொடர்ந்து, குரு தேடலின் நிமித்தம், ஓர் அன்பரின் மூலமாக, சில தடைகளுக்கு பின், வேறொரு அன்பருடன், சித்தர் அவர்களை நேரில் காணும் வாய்ப்பும் இயற்கையாகவே கிடைக்கப் பெறுகின்றது.
  2. சாமியார் என்றாலே, ஏமாற்று பேர்வழிகள், திருடர்கள், என்ற மன நிலையுடன், சித்தர் அய்யா பிள்ளையை, அன்பர் ஒருவர் வீட்டில் நேரில் காணுதல்.
  3. இப்படி சில சந்திப்புகளுக்கு பின், ஒரு முறை சித்தர், திரு. குணசீலன் அவர்களை எதிரில் அமரச் சொல்லி, ’என்ன தெரிகின்றது’, என்று கேட்க, அவருக்கு கருப்பு, வெள்ளை ரூபம் தெரிகின்றது என்று கூற, சித்தர் அதை சிவ சக்தி ரூபம் என்று சொல்லி, உமக்கு நான் எதுவும் சொல்வதற்கு இல்லை, நான் என்ன நிலையில் இருக்கின்றேனோ (அக்காலகட்டத்தில்) அந்த நிலையில் தான் நீயும் இருக்கின்றாய், நீயும் நானும் ஒரே இடத்தில் அமரக் கூடாது என்றும் சொல்லி, அவரின் ஆன்மாவின், உயரிய, பூர்வீக சித்த நிலையை பற்றியும் சொல்லி முடிக்கின்றார். மேலும் அவர் மூலமாக, ஆத்ம விஷயங்கள் பலருக்கு கிடைக்கப் போவதையும், செய்திகள் (முக்காலம் உணர்ந்து) சொல்லப் பட போவதையும், முன்னதே கூறுகின்றார்.
  4. இவ்வாறாக, அவருடன் பல சந்திப்புகள், திரு. குணசீலன், அவர்களுக்கு கிடைக்கப் பெறுகின்றது. மேலும் சித்தருடன் பேசும் போது, அனைத்தும் மறந்த, ஆனந்த நிலை கிடைக்கப் பெறுவதையும் குறிப்பிட்டுள்ளார்.
  5. இப்படி ஆழ்ந்து பழக பழக, ஆத்திகத்தை பற்றி, பல குறிப்புகள் அவருக்கு கிடைக்கின்றது. அவருக்கு விநாயகர் வழிபாடு தேவையில்லை என்றும், நேராக சிவனையே வழிபடவும் சொல்கின்றார். இது திரு. குணசீலன் அவர்களுக்கு சற்று கடிணமாக இருந்தது, ஏனெனில், அவருக்கு ஆத்திகத்தின், முதல் ஈடுபாடே விநாயகர் என்றும், அவர் விநாயகரை, “விநாயகர் அப்பா” என்றே கூறி வந்ததையும், நினைவு கூறுகின்றார்.
  6. ஆத்திகத்தில் இருந்தும், வேலைக்கு சென்று வந்து, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமையை செய்து வந்தும், இருந்த அவருக்கு, திருமணத்தில் சற்றும் ஈடுபாடு இல்லாமல் இருந்தது, அத்தருணத்தில், சித்தர் அவருக்கு திருமணம் உண்டு என்றும், மேலும் இரு மகசு உண்டு என்றும், திருவாய் மொழிகின்றார். அதற்கேற்ப அவருக்கு இனிதே திருமணம் நடந்து, ஓர் ஆண் குழந்தையையும் பிறக்கின்றது.
  7. இப்படி நல்ல சுமூகமான உறவில் அவர்கள் லயித்திருக்க, திடீரென்று ஒரு நாள், சித்தர் அய்யா பிள்ளை, ‘என்னை விட்டு ஒருவன் பிரியப் போகின்றான்’, என்று கூற, அது திரு. குணசீலனுக்கு பதட்டத்தை ஏற்படுத்துகின்றது, அவரும் அது தானா என்று விசாரிக்க, சித்தரும் ஆமோதிக்கின்றார். இது இருவருக்கும் சற்று மனக் கசப்பை தருகின்றது.
  8. திரு. குணசீலன் அசைவ உணவை தவிர்க்கும் நோக்கத்துடன், பால், டீ, என அனைத்தையும், மூன்று வருடங்களாக தள்ளி வைக்கின்றார். அதை உணர்ந்த சித்தர், தான் அசைவம் உண்பதையும், தன்னை பின் தொடர்கின்ற அவர், அவற்றை உண்ணாமல் இருந்தால் எப்படி குரு சீடன் என்று ஏற்றுக் கொள்ள முடியும் என்று கூறி, திரு. குணசீலன் அவர்களை டீ அருந்துமாறு கூறுகின்றார், அதன்படி அவரும் அன்றிலிருந்து, குருவின் உத்தரவின் படி, அசைவ உணவும் உட்கொள்ள ஆரம்பிக்கின்றார். அங்கு, அவரை மட்டும், மதுவை, அவ்வப்பொழுது தீர்த்தமாக அருந்துமாறு கூறுகின்றார். பொதுவாக, மருத்துவ ரீதியாக அல்லாமல், இப்படி ஒருவரின் உணவு பழக்க வழக்கங்களில் தலையிடாத சித்தர் அய்யா பிள்ளை அவர்கள், திரு. குணசீலன் அவர்களுக்கு பிரத்தியேக கட்டளையிட்டது, அவர்களின் ஆத்ம வளர்ச்சிக்காகவும், ஆத்ம நிறைவுக்காகவும் என்பது, தெள்ளத்தெளிவாக புரிகின்றது.
  9. முன்னதே, அவர்கள் இருவரும் பிரியப் போகின்றோம், என்று கூறிய தருணத்தில், திரு. குணசீலன் அவர்களுக்குள் லிங்கம் பிடித்து வழிபட வேண்டும் என்ற விதையை, மிக ஆழமாக பதிய வைத்து விடுகின்றார். இன்று வரை, லிங்கம் பிடித்து வழிபாடு செய்வதை, தொடர்ந்து செய்து வருகின்றார். சமீபத்தில், இந்த குறிப்புகளை சேகரிக்க சென்ற பொழுது, இயற்கையோடு ஒன்றித்த, மக்கள் சங்கமிக்க, மனம் ஒருமித்த நிலையில், பரிபூரணமாக அது செய்யப்படுவதை காணும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது. அனைவரும் கூடி, பாகுபாடு இன்றி, ஒன்றுபட்டு, ஹோமம் அரங்கேற்றியது எனக்கு தனிப்பட்ட விதத்தில் மிக்க மகிழ்ச்சியை தந்தது. அவர்கள் பிரிந்தது பலரின் நன்மைக்காகவும், திரு. குணசீலன் அவர்களின் வளர்ச்சிக்காவும், என்பது திண்ணமாக புரிந்தது. பொதுவாக, சீடர்கள் வளர்ந்த பின், குருவானவர் தன்னுடன் அவர்களை வைத்துக் கொள்வதில்லை என்பதற்கு, இந்த நிகழ்வு, ஓர் எடுத்துக்காட்டு. இது, குருவை நிந்தனை செய்ததால், குரு விலக்கி வைத்த நிலையல்ல.
  10. லிங்கம் பிடித்து வழிபாடு செய்ததன் மூலம், பல ஆத்ம அனுபவங்கள் அவருக்கு கிடைக்கப் பெற்றதோடு, ஆத்ம சங்கடங்கள் நீக்குதல், தீய சக்திகளை விலக்குதல், என பல நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றன.
  11. திரு. குணசீலன் அரங்கேற்றிய சில நிகழ்வுகளுக்கு பின், யாராவது கெடுதல் செய்தாலும், யாரையும் ஆத்ம ரீதியாக தாக்க வேண்டாம் என்ற உத்தரவும் சித்தர் அய்யா பிள்ளை மூலம் அவருக்கு கிடைக்கின்றது. அதன்படி, அவர் இன்றளவும் அவ்வண்ணமே நடந்து கொள்கின்றார்.
  12. திரு. குணசீலன் அவர்கள், திருமணம் செய்த பெண்ணுக்கு, சித்தர் அய்யா பிள்ளையும், திரு. ஆறுமுகன் என்பவரும், இருவரும் சேர்ந்து, திருமணத்திற்கு முன், காட்சியளித்து, அவர்களது திருமணத்தை பற்றியும் சொல்லி, சந்தோஷமாக வாழ ஆசிர்வாதமும் செய்கின்றனர். இதில் விந்தை என்னவென்றால், வந்தது யார் என்று, அந்த பெண்மணிக்கு, பின்னரே, அதுவும் திரு. குணசீலன் அவர்களின் அலைபேசியில், சித்தரின் புகைப்படம் பார்த்த பின்னரே தெரிகின்றது.
  13. கணவுகளில் காட்சி தந்து, தர வேண்டிய உணர்வையும், கருத்தையும், தேவையான நேரத்தில், மனதில் பதிய வைத்தல்.
  14. ஆத்ம விசேஷங்கள் மூலம், நிகழ் காலத்தில் நடக்கும் காட்சி கிடைத்தல். சூச்சும சரீரத்துடன் காட்சி தருதல், என பல ஆத்ம அனுபவங்களை திரு. குணசீலன் அவர்கள் அனுபவித்தல்.
  15. விலகி, அவர்தம் வேலைகளை செய்து வந்தாலும், சித்தர் அய்யா பிள்ளை அனுக்கிரகத்தால் செவ்வனே நடந்து வந்த, மகிஷாசுரமர்த்தினி கோயில் விசேஷங்களான, வருடாந்திர பால் குடம், வருடாந்திர ஹோமம், என அவற்றில் கலந்து கொண்டு, உறவு விட்டுப் போகாமல், அவருடனான ஆத்ம உறவை நிலை நாட்டிக் கொள்கின்றார். அவர்தம் இருதி சமாதியிலும் கலந்து கொள்கின்றார்.

குறிப்பு: நேர்காணல் பதிவு செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.

Monday, March 6, 2017

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (2): திரு. கடற்கரையாண்டி. நா (Late) குடும்பத்தினர் அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (2): திரு. கடற்கரையாண்டி. நா (Late) குடும்பத்தினர் அவர்களின் இறை அனுபவங்கள்.

கடற்கரையாண்டி. நா (Late) [Kadarkaraiyandi N (Late)]

நேர்காணல் விவரம்:
இடம்: திரு. கடற்கரையாண்டி (Late) அவர்களின் மனைவி திருமதி. வீரலஷ்மி கடற்கரையாண்டி அவர்களின் இல்லம். பம்மல்.

நாட்கள்:
  1. மாசி 18 2017 வியாழக்கிழமை [03/02/2017 Thursday] காலை 9.18 முதல் 9:53 வரை [9.18 AM to 9:53 AM]
  2. மாசி 18 2017 வியாழக்கிழமை [03/02/2017 Thursday] காலை 10.10 முதல் 10:20 வரை [10.10 AM to 10:20 AM]
  3. மாசி 19 2017 வெள்ளிக்கிழமை [03/03/2017 Thursday] காலை 9.19 முதல் 9:33 வரை [9.19 AM to 9:33 AM]
  4. மாசி 19 2017 வெள்ளிக்கிழமை [03/03/2017 Thursday] காலை 7.56 முதல் 8:56 வரை [7.56 AM to 8:56 AM]
  5. மாசி 20 2017 சனிக்கிழமை [03/04/2017 Thursday] காலை 9.30 முதல் 9:37 வரை [9.30 AM to 9:37 AM]
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:

  1. திரு. கடற்கரையாண்டி அவர்களின் மூத்த மகன் திரு. சிதம்பரகுமார் அவர்கள், சித்தர் அய்யா பிள்ளையை சந்திக்கும் முன், பல துன்பங்களினால், வாழவே பிடிக்காத நிலையில், வறுமையில் உழன்று வந்தார். கோயில் குளம் என்று, அங்கும் இங்கும், அலைந்தும் திரிந்தும், அவ்வப்பொழுது கிடைக்கும் ஆறுதலில், மனதை தேற்றி வாழ்ந்து வந்தாலும், அவருக்கு முழுமையான மனநிறைவு கிடைக்கவில்லை. அத்தருணத்தில், அவர்கள் குடும்பத்தினருக்கு, திரு. கடற்கரையாண்டி அவர்களின் இரண்டாவது மகன் (கடைசி) திரு. தெய்வசூடாமணி அவர்களின் மூலமாக சித்தர் அய்யா பிள்ளையை, மற்றும் ஓர் அன்பர் வீட்டில், நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த சந்திப்பின் போது, அவரிடம் சித்தர் கேட்டது, “நான் என்ன மாலையா போட்டிருக்கேன், கொட்டையா போட்டிருக்கேன், என்னடா தேடி வந்த?”
  2. சித்தர்கள், மகான்கள், போன்று எதுவும் அறியாத காலக்கட்டத்தில், திரு. சிதம்பரகுமார் அவர்களுக்கு, அதுவும் அவரது மூத்த மகன் திரு. சிவ ஜெயக்குமார் பிறந்த பின்னரே, சித்தர் அய்யா பிள்ளையின் நேரடி தொடர்பு கிட்டுகின்றது. முதல் சந்திப்பில் அங்கு சபையில் இருந்த அனைவரின் முன்னிலையிலும், “இவன் எனக்காக எதையும் செய்வான்” என்று திருவாய் மொழிந்தார். அந்த வாக்கின்படி அவரையும் சித்தர் பிற்காலத்தில் வெகுவாய் ஆட்கொண்டு அந்த நிலைக்கு அழைத்து சென்றார். அவரை அதை உணரவும் வைக்கின்றார்.
  3. சித்தர் அய்யா பிள்ளை, திரு. கடற்கரையாண்டி அவர்களுடன் நெருக்கமாக பழகி வந்தார். ஒருமுறை அவர்களின் குலதெய்வமான சிதம்பரத்தாண்டவர், சித்தர் மேல் இறங்கி, திரு. கடற்கரையாண்டி அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி, அவரும் அதை ஏற்றுக் கொண்டு, தன்னை திருத்திக் கொள்ளும் வண்ணம் அனுகூலமான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கின்றார். அவர்களது குலதெய்வம் இறங்கி பேசியது அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
  4. அதே நாள், திரு. சிதம்பரகுமார், அவர்களது காலமான சித்தப்பா பற்றி வினவ, அவர்களின் ஆன்மாவும், சித்தர் மேல் இறங்கி, தான் பட்ட இன்னல்களை எல்லாம் சித்தர் குடிகொண்ட உடம்பின் மூலம் அனுபவமாக தர, அவர் தம் கடைசிக்காலத்தில் பட்ட துன்பத்தை (கை கால்கள் பின்னி மிக்க துயருற்ற நிலையை) அங்கிருந்த அனைவரும் கண்கூடாக காணும் வண்ணம் வாங்கி அனுபவித்தார். இவ்வாறு தான் அவர் இறந்தார். இவ்வாறு தான் அவர் உயிருடன் கொல்லாமல் கொல்லப்பட்டார் என்பதை வெளிப்படையாக உணர்த்தினார்.
  5. நாகவிளாகத்தில் நடந்த ஓர் ஹோமத்தின் போது, இரவு சத்சங்கத்தில், அனைவருக்கும் விபூதி பூச, திரு. சிதம்பரகுமார் அவர்கள் மேல் பூசும் போது, நெற்றியில் கைவைக்க, ஒருவித ஈர்ப்பு சக்தியால் சித்தர் ஆட்கொள்ளப்பட்டு, கைகள் நெற்றியில் ஒட்டியவாறு சில தருணங்கள் செல்ல, திரு. சிதம்பரகுமார் சித்தரின் முகத்தை பார்க்க, சித்தர் ஓர் புலியாக அவருக்கு காட்சித் தந்தருளினார்.
  6. திரு. சிதம்பரகுமார் அவர்களின் உள்ளார்ந்த விருப்பத்திற்கு ஏற்ப, ஒரு சில மாதங்களிலேயே, சித்தர் அய்யா பிள்ளை அவருடன் நெருங்கி பழகும் தருணங்களை கிடைத்தருளச் செய்கின்றார். அந்த ஈர்ப்பு, அவர் ஒரு சித்தர் என்பதால் வாராமல், முதற் காதல் போல், காரணமில்லாமல் வெகுவாய் ஈர்க்கப்பட்டு ஆட்கொள்ளப்படுகின்றார்.
  7. சித்தருடன், திரு. சிதம்பரகுமார் சென்ற முதல் யாத்திரா பயணம் ஷீர்டி. அங்கு பாபாவின் சமாதியின் மேல், மூன்று முறை ஒளி பளிச் பளிச்சென்று மின்னியதை அனைவரும் கண்டு அகமகிழ்ந்தனர்.
  8. ராகவேந்திரர் சமாதி, துங்கபத்தராவில் முதல் முறை திரு. சிதம்பரகுமார் அவர்களுக்கு பிரம்மத்தில் நீரை வாரி இறைத்தல். அந்நிலையில் பிரம்மம் செவ்வானமாய், பிரகாசமாய் (நெருப்பாய்) அவருக்கு தெரிகின்றது. தனக்குள் உள்ள பேராற்றலை உணர்தல். கால்களை மடக்கி முட்டிப் போட முடியாத அளவிற்கு அது அவரை இருக்கி மேல் எழுப்புகின்ற நிலை. வாசி மேல் எழும்புகின்ற நிலை.
  9. தலைக்காவிரி, காசி, கயா போன்ற யாத்திரா பயணங்களில் அவருடன் சென்று வருதல். பல வித வழிபாடு முறைகள், சத்சங்கங்கள், என அனைத்திலும் பங்கு கொள்தல்.
  10. கயாவில், பித்ரு பூஜைக்காக வாங்கும் பொருட்கள் திரும்ப வாங்கிய கடைக்கே போவதை பார்த்து, சித்தர் சாடுதல். விலைக்கு அவற்றை கேட்டாலும் தர மறுப்பது.
  11. திருவேணி சங்கமத்தில் மூன்று நதிகள் (கங்கா, யமுனா, சரஸ்வதி) சங்கமிக்கும் இடத்தில் நீர் எடுக்கு உத்திரவு இடுகின்றார். ஆற்றினுள் நான்கு பேர் அந்த இடத்தை தேடிச் செல்ல, ஒரு இடத்திற்கு மேல் அவர்களால் போக முடியாத அளவிற்கு அழுத்தம் ஏற்பட, சித்தர் கரையில் இருந்தவாறு அது தான் சங்கமம் என்று குறிப்பிடுதல்.
  12. திரு. சிதம்பரகுமார் அவர்களின் சிறு சிறு ஏக்கங்கள், மனதில் தோன்ற, சின்ன சின்ன தடைகளும், குருவருளால் நீக்கப்பட்டு ஆசைகள் நிறைவேறுவது. அவரையே குருவாக ஏற்றுக் கொண்ட பின், பக்தி மார்க்கத்தில் இருந்து மெல் மெல்ல விலகி அருவமாக வழிபட ஆரம்பிக்கின்றார். அதேபோல் ஜோதிடம் பார்த்தல், குறி கேட்டல், மற்ற குருமார்களை சந்தித்தல் போன்ற அனைத்தையும் தவிர்த்தல்.
  13. சபரி மலை அய்யப்பன் விக்ரஹம் அவருக்கு சித்தர் அய்யா பிள்ளையாக காட்சியளித்தல். அந்த தரிசனத்தால் அவர் மனம் பரவசமடைதல்.
  14. சித்தர் அய்யா பிள்ளையுடன் பழகிய காலகட்டங்களில் அவரின் எளிமை, அரும்பெரும் சக்தி தன்வசம் கொண்டும், அனைவருடன் சக மனிதராய் பழகும் எதார்த்த நிலை, தான் முதலில் அதை உண்டு, அது விஷமா என்று பார்த்த பின் அனைவருக்கும் பரிமாறும் நற்குணம், இவையனைத்தும் அவரை, உண்மையான, கிடைப்பதற்கு அரிய, ஓர் குருவாக, மனம் பரிபூரணமாக திரு. சிதம்பரகுமாரை ஏற்றுக் கொள்ள வைக்கின்றது.
  15. மகாபலிபுரத்தில்* ஓர் அவமானம் அவருக்கு கொடுக்கப்பட்ட பொழுது, அந்த கோபத்தை தன்னுள் அடக்கி, திரு. சிதம்பரகுமாரை அழைத்துக் கொண்டு, வேக வேகமாய், அதீத வேகத்தில், உடல் தெறிக்கும் வண்ணம், மலையை சுற்றி வந்து, ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து, அரை மணி நேரம் கழித்து, சாந்தம் அடைந்த பின், தனது மன வேதனையை அவருடன் பகிர்ந்து கொண்டு, ஒரு பாட்டில் தண்ணீரை அவரிடம் கேட்டு வாங்கி பெற்றுக் கொள்தல்.
  16. ஒவ்வொரு முறையும், திரு. கடற்கரையாண்டி அவர்களின் இருப்பிடத்திற்கு வந்து, ஒரிரு நாட்கள் தங்கி செல்லும் போதெல்லாம், அந்த குடும்பமே மகிழ்ச்சியில் ததும்பும்.
  17. சித்தர் வரும் முன் இருந்த நிலை நீடித்திருந்தால், அவர் குடும்பமே நிர்மூலமாகியிருக்கும் என்றும், இந்த குடும்பம் இன்றளவும் ஜீவித்து இருப்பதற்கு அவரே காரணம் என்றும் நினைவு கூறுதல். அவர் பரிபூரண சரணாகதி நிலையடைந்ததையும், வேறொருவர் அவருக்கு அதை சொல்ல அதையும் அவர் நினைவு கூறுதல்.
  18. திரு. சிதம்பரகுமார் அவர்களின் இரண்டாவது மகன், சிறு வயதில் தலையில் அடிப்பட்டு, கால் கை இயங்காமல் மூச்சுப்பேச்சற்று கிடந்த போது, சித்தர் அய்யா பிள்ளையை அலைபேசி மூலம் தொடர்பு கொள்கின்றார். தலையில் பனி மேகம் போல் படர்ந்து இருக்கின்றது என்று முன்னதே கூறி, அதை சரி செய்து விடலாம் என்று, உடனடியாக ஹாஸ்பத்திரி அழைத்து செல்லுமாறு உத்திரவிடுகின்றார். அதன்படி, அந்த குழந்தையும், சிகிச்சைக்கு பின், முழு குணமடைந்து சித்தருடன் நெருங்கி, ஓர் இனம் புரியாத அன்புடன் பழகி வந்தது.
  19. பிற கோயில்கள் சென்றாலும், திரு. சிதம்பரகுமார் அவர்கள் அங்கு இருக்கும் தெய்வங்களை சித்தர் அய்யா பிள்ளையாகவே காண்கின்றார். அவ்வாறே வழிபடுகின்றார்.
  20. அவருக்கு ஒரு முறை நாகவிளாகம் தாள (?) விருச்சம் அருகில் ஆற்றல் வெளிப்படுகின்றது. அருகில் இருந்த அன்பர் நாபியில் தனது பிரம்மத்தை வைத்து முட்டி, அரவம் போல், அந்த சக்தியை வெளியே தள்ளும் யோக நிலை வசப்படுதல்.
  21. அதேபோல் சித்தர் அய்யா பிள்ளை ஒருமுறை விழித்துக் கொண்டு படுத்திருந்த போது, கால்களை அமுத்தி விட்டப் போது, எதிரில் இருந்தவர் உடம்பில் இரண்டு ஜோதியை காணுதல்.
  22. கர்நாடகா சாமுண்டீஸ்வரி கோவிலை விட்டு வெளியே வர திரு. சிதம்பரகுமார் அவர்களுக்கு, பின்னங்கழுத்தில் உள்ள கட்டி உயிர் போகின்ற வலியை ஏற்படுத்துகின்றது. அதை வருடி பார்த்து, சரியாகி விடும் என்று சொல்லி தடவி விட, அந்த கணமே, வலி அவரை விட்டு விலகுகின்றது. பின்னர் தலைக்காவிரியில் தண்ணீரை எடுத்து, அனைவரின் பிரம்மத்தில் ஊற்றி வர, திரு. சிதம்பரகுமாரை அழைத்து, பின்னங்கழுத்தில் உள்ள கட்டியின் மேல் தண்ணீரை ஊற்றுகின்றார். அந்த வலி, முழுவதுமாய் விலகி ஒரு வித சுகத்தை அவருக்கு அது தருகின்றது.
  23. கர்நாடகா டீ எஸ்டேட்டில் தங்கியிருந்த போது, இரவில், கீழ் தளத்தில் சித்தர் அய்யா பிள்ளை இருக்க, மேல் தளத்தில், மாடியில், வெட்டவெளியில், ஒரு சில அன்போர்களோடு சேர்ந்து திரு. சிதம்பரகுமார் பிரணவ சப்தம் கேட்டல். கீழ் சென்று பார்த்தால் சித்தர் அமைதியாக அமர்ந்திருக்கின்றார்.
  24. அன்று இரவு, ஒவ்வொருவரையும் அவரவர் ஆத்ம நிலைக்கேற்ப, தியான நிலைக்கும், யோக நிலைக்கும் சித்தர் தள்ள, திரு. சிதம்பரகுமார் அவர்களுக்கு ஈரப்பசையால் ஏற்படும் வாசம் கிடைக்கின்றது.
  25. திருமதி. வீரலஷ்மி கடற்கரையாண்டி அவர்கள் குடும்பம், பூர்வீகமான தூத்துக்குடியை விட்டு, வாழ்வாதாரம் தேடி, குழந்தைகளை கூட்டிக்கொண்டு சென்னை வருகின்றனர். ஓர் குடும்பம் சென்னையில் என்ன என்ன கஷ்டங்கள் பட முடியுமோ அவ்வளவு கஷ்டங்களும் பட்டு மீள முடியாத சூழ் நிலையில், முன்னரே கூறிய வண்ணம், அவர்களது இரண்டாவது மகன் (கடைசி) திரு. தெய்வசூடாமணி அவர்களின் மூலமாக சித்தர் அய்யா பிள்ளையை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.
  26. முதல் முறை அவர்களை சந்திக்கும் போது, திருமதி. வீரலஷ்மி கடற்கரையாண்டி, தங்களது குடும்ப கஷ்டங்களை அவரிடம் முறையிட, அவரும் அதற்கு ஆறுதல் கூறி, அவர்களது இரண்டாவது மகனுக்கு திருமணம் முடியும் என்று வாக்குறுதியும் அளிக்கின்றார். சொந்த வீடு அமையும் என்றும் திருவாய் மொழிகின்றார். அதேபோல் அவர்களின் துன்பம் நீக்கி சொன்னவையெல்லாம் பல இன்னல்கள் தாண்டி சித்திக்கவும் செய்கின்றார்.
  27. ஒருமுறை யாத்திரையின் போது, திருச்செந்தூர், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், குலசேகரபட்டினம், என தரிசனம் செய்து விட்டு, தூத்துக்குடி உறவினர் வீட்டில் இரவு தங்குகின்றனர். அன்று இரவு, திரு. கடற்கரையாண்டி அவர்களின் ஆச்சி, சொல்ல பேச்சி, சித்தர் அய்யா பிள்ளையை ஆட்கொண்டு, அவர்கள் மூலம், தான் பட்ட அவமானங்களையும், இன்னல்களையும், கொடுங்துயர்களையும், குடும்ப விஷயங்களையும் பகிர்ந்து கொள்தல். பின் தீய விஷயங்களை இனங்காட்டி கொடுத்து அவைகளில் இருந்து விலக கட்டளையிடுதல். இரு வேலைகளை முடித்து விட்டு, அவர்கள் இல்லத்திற்கே வருவதாகவும் அருள் பாலித்தல். அந்த நிகழ்வு அனைவரையும் மகிழ்வுற செய்தது. அன்று முதல் மூதாதையர் வழிபாட்டை, திரு. கடற்கரையாண்டி குடுமபத்தினர், சொல்ல பேச்சி ஆச்சிக்கு விளக்கு போட்டு, முறையாக செய்து வருகின்றனர்.
  28. ஒருமுறை சொல்ல பேச்சி ஆச்சி உத்தரவு மீறி, குடும்பத்தினர் ஓர் இடத்திற்கு சென்ற போது, அவர்களின் பேரன்மார், குழந்தைகள் இருவரும், வயிற்று போக்கால் அவதியுற்றனர், மூன்று(?) நாட்கள் கழிந்த நிலையில், அவர்கள் எதிர்பாராத வண்ணம், சித்தர் அய்யா பிள்ளை மூலமாக, சொல்ல பேச்சி ஆச்சி தொடர்பு கொண்டு, விவரம் தெரிவித்து, அவர்கள் சொன்னபடி தேனை நாக்கில் வைக்க, வயிற்று போக்கும் நிற்கின்றது.
  29. ஒரு முறை வெளிநாடு செல்லும் முன், கையில் வீக்கம் இருப்பதை திருமதி. வீரலஷ்மி கடற்கரையாண்டி தெரிவிக்க, சித்தர் அய்யா பிள்ளை அதை நீவி விட, அந்த வீக்கம் சித்தர் கைகளுக்கு மாறுகின்றது.
  30. திரு. கடற்கரையாண்டி உடல் உபாதைகளுக்கு, அவர் மேல் வரும் சக்திகளை வைத்தே நிவாரணம் கூறுதல்.
  31. பெண்கள் வீடு தூரமாக இருக்கும் போது அருகில் வராமால் இருப்பதை சாடுதல். உயிருக்கும், இயற்கைக்கும், தீட்டு இல்லை என்று சித்தர் மரபை பறைசாற்றுதல்.
  32. வீட்டில் பிறந்த மூன்று பேரன்களும் ஆண்களாய் இருக்க, அவர்கள் பெண் குழந்தைக்காக மன்றாட, அதுவும் சித்திக்கின்றது.
  33. ஒரு முறை திரு. கடற்கரையாண்டி அவரின் குளிர் காய்ச்சலை தன் மேல் எடுத்துக் கொண்டு நடுங்கி தவித்தல்.
  34. திரு. தெய்வசூடாமணியின் முதல் கரு வித்து, இயற்கையாய் கலைந்து போக, திருவான்மியூர் சித்தர் சக்கரத்தமாள் கோயிலுக்கு சென்று, அங்கு அரை மணி நேரம் தங்கி, மூன்று மாதுளம் பழம் வாங்கி, இரண்டை அங்கு கொடுத்து விட்டு, ஒன்றை உடைத்து வீட்டிற்கு எடுத்து சென்று, அதை இனிப்புடன் உண்டு மகிழ்வுற்று இருக்க கட்டளையிடுகின்றார். அதன்படி செய்ய அவர்களக்கு நல்ல ஓர் ஆண் மகசு கிடைக்கின்றது.
  35. ஒரு முறை திரு. கடற்கரையாண்டி பேத்தி, இரண்டு வயதாய் இருக்கும் போது, சித்தர் அய்யா பிள்ளையின் பிரம்மத்தில், நீர் ஊற்றி மிருதுவாய் வருடி விட, அவர் ஏகாந்த நிலையடைந்து, அதே நிலையில் அப்படியே அமர்ந்து விடலாம் என்று மனம் உவந்து பாராட்டுகின்றார்.
  36. அதே குழந்தை சிறு வயதில் நடக்க சிரம பட்ட போது, இரண்டு காலையும் நன்கு நீவி விட்டு, நடக்க ஆசிர்வதித்தல்.
  37. திரு. தெய்வசூடாமணியிடம், சித்தர் அய்யா பிள்ளை, தான் இந்த பூத உடலுடன் இருக்கும் போது நிறைய காரியங்கள் செய்ய முடியவில்லை என்றும், உடம்பை விட்ட பின் செய்ய முடியும் என்று பகிர்ந்து கொள்கின்றார்.
  38. அவர்களுக்குள் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்தல். அதுவும் குறிப்பாக, அவருக்கு, என்று ஆத்திகத்தில் வர விருப்பம் இருக்கின்றதோ, அன்று தான், அதில் நானே நுழைவேன் என்று ஆத்மார்த்தமான ஒப்பந்தம் போட்டு கொள்தல், என அவரிடமிருந்த சுதந்திரமான எதார்த்தமான உறவை வெளிப்படுத்துகின்றார்.
  39. தான் சமாதியாக போவதை முன்னதே கூறல். மேலும் அது சம்ந்தப்பட்ட, சில காரணத்தையும் பகிர்ந்து கொள்தல்.
  40. சித்தர் அய்யா பிள்ளை தான் தன் குரு என்று மனம் உவந்து கூறல். அனுபவ ரீதியாக அனைத்து ரூபத்திலும் அவரை உணர்வதை வெளிப்படுத்தியுள்ளார்.
* இங்கு மகாபலிபுரம் என்பது இடத்தை மட்டுமே குறிக்கும், மாறாக, அது எந்த ஒரு தனி நபரை பற்றியும் குறிக்கவில்லை, ஏனெனில், அதன் உள் காரணத்தை, சித்தர் அய்யா பிள்ளை திரு. சிதம்பரகுமார் அவர்களிடம் தெரியப்படுத்த வில்லை என்பதையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றோம். அதுவும் குறிப்பாக, மகாபலிபுரம் திரு. ரவி அவர்கள் இல்லத்தில், அந்த சம்பவம் நடக்க வில்லை என்பதையும், அதற்கு, அவரும், அவர்கள் குடும்பத்தினரும் காரணம் இல்லை என்பதையும், இங்கு தெளிவுபடுத்திக் கொள்கின்றோம். அதை, அவரே, இன்று என்னை (20/03/2017) அழைத்து, தெளிவு படுத்தினார். அவர்கள் நேரிடையாக, என்னை கைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, இந்த செய்தியை தெரிவித்துக் கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

குறிப்பு: நேர்காணல் பதிவு செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.

Thursday, March 2, 2017

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (1): திரு ஆறுமுகன் ப அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (1): திரு ஆறுமுகன் ப அவர்களின் இறை அனுபவங்கள்.


ஆறுமுகன் ப [Arumughan P]

நேர்காணல் விவரம்:

பெயர்: ஆறுமுகன் ப [Arumughan P]
இடம் #1: திருவான்மியூர் கடற்கரை [Thiruvanmiyur Beach]
இடம் #2: நடேசன் பார்க், தி. நகர், சென்னை.

நாட்கள்:
  1. மாசி 18 2017 வியாழக்கிழமை [03/02/2017 Thursday] காலை 7.11 முதல் 8:03 வரை [7.11 AM to 8:03 AM]
  2. பங்குனி 4, 2017 வெள்ளிக்கிழமை [03/17/2017 ] மாலை 3.36 முதல் 4:32 வரை [3:36 PM to 4:32 PM]
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
  1. கந்த சஷ்டி படித்த வந்த ஏழாம் நாள், ஒரு வியாழக்கிழமை அன்று வெளிப்பாடு. சுயம்பாக. தொண்டையை கிழித்து கொண்டு எழும்புவது போல் ஒரு சப்தம். பாம்பை போல் பின்னோக்கி ஊர்ந்து செல்லும் யோக நிலை. அதனுடன் கூடிய சமாதி நிலை. வாலை பேசுதல்.
  2. சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில், இராமர், லக்குவன், சீதை, அனுமர், ஷிர்டி சாய் பாபா, புட்டபர்த்தி சாய் போன்றோரின் காட்சிகளை ஆழ்நிலை தியானத்தில் அனுபவித்தல்.
  3. சித்தர் அய்யா பிள்ளை மூலம் கிட்டியவை:
    1. முதல் சந்திப்பில் பரவச நிலையடைந்து, சித்தாடல். வாலை பேசுதல்.
    2. மெய்மறந்த நிலையில் கிடப்பவரை விழிக்கச் செய்தல்.
    3. பிரம்மத்தின் மேல் நீர் வார்த்து இரைக்கும் போது அதில் காந்த சக்தியை உணர்தல். மேலும் அவர் நாபியில் கை வைக்கும் போது சக்கர சுழற்சியை அனுபவித்தல். ஏகாந்த நிலை அடைதல்.
    4. பிறரை எதார்த்த நிலையில், மெய்மறந்த நிலையில் இருந்தாலும், ஆட்கொண்டு தன் வசப்படுத்துதல். பரிபூரண சரணாகதி தத்துவதை உணர்தல்.
    5. ஜீவ காந்த சக்தி மூலம் வலியை நிவர்த்தி செய்தல். ஒரு ஆன்மாவை துன்புறுத்தி வந்த தீய சக்தியை விரட்டுதல்.
    6. தனது ஜீவ காந்த சக்தி மூலம் ஒருவருக்கு பல வருடங்களாக இருந்த வந்த கழுத்து வலியை குணமாக்குதல். அந்த நிலையில் அதிலிருந்து வலிந்து வந்த சக்தி, தன் மேலும் பாயும் போது, அதை நன்கு உணர்ந்து, அனுபவித்து ஏகாந்த நிலையடைதல்.
    7. கருத்தரித்த நிலையை முன்னதே கூறல். அந்த வித்தின் பூர்வீகத்தை பற்றி மொழிதல்.
    8. ஒரு ஹோமத்தின் போது, இயற்கையை தன் வசப்படுத்தி, மழையை நிறுத்த செய்தல்.
    9. 2008ல், சித்தர் அய்யா பிள்ளை, சிதம்பரம் நடராஜர் கோவில் குளத்தில் அனைவரையும் (நாற்பதுக்கு மேற்பட்டோர்), பிரம்மத்தில் நீரை வார்த்து நீராட்டிய சம்பவத்தில், உச்சி காலத்தில், திரு. ஆறுமுகன் அவர்கள் சூரியனை நோக்க, சூரியன் சந்திரனாக, அதுவும் அழகான முழுமதி நிலவாக அவருக்கு தெரிகின்றது, மேலும் சூரியனின் வெப்ப காற்றும் அவர் மேல் படும் போது குளிர்ந்த காற்றாக மாறுகின்றது. ஒரே இயற்கை தன்னிடம் வேறு பரிமாணத்தில் தொடர்பு கொள்ளும் நிலையை எண்ணி வியப்படைகின்றார். ஆத்திகத்தில் உள்ளோருக்கு இந்த அற்புதமான நிலையதன் ஆழத்தை நன்கு உணர்வர். பின்னர் அதே நிலையில், அங்கிருந்தவாறு, அந்த பக்கம் இருந்தோரை நோக்க, அதில் சித்தர் அய்யா பிள்ளையின் முகமும், மேலும் அங்கிருந்த ஒர் பெண்ணின் முகமும், மட்டும் ஊதா நிறத்தில் தென்படுகின்றது. மற்றவர்களிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை.
குறிப்பு: நேர்காணல் பதிவு செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.