சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (5): திரு. ரோஸாரியோ ஜோஸப் அவர்களின் இறை அனுபவங்கள்.
![]() |
ரோஸாரியோ ஜோசப் [Rozorio Joseph] |
குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
- MITல் (Madras Institute of Technology, Chromepet, Chennai) B.Tech மூன்றாம் ஆண்டு நிறைவில், எனது தேடல் தீவிரமடைகின்றது. நண்பர்களுடன் பல ஆங்கில நாவல்கள் படித்து வந்த நான், மெல்ல தத்துவம், ஆத்திகம் என்று எனது தேடல், அகம் சம்மந்தப்பட்டவையாக மாறியது. பல மேதைகளின் புத்தகங்கள், அதிலும் குறிப்பாக, இயன் ராண்ட், ப்ரெட்ரிக் நீட்ஷே, ஒஷோ, என அது விரிந்து தேடலை இன்னும் தீவிரமடைய செய்கின்றது. இப்படி எந்த தேடலிலும் அகப்படாத ஒன்றை நோக்கி, விரக்தியுடன், வாழ்வியல் சுகத்திலும், கேளிக்கைகளிலும் லயித்தவாறு சில வருடங்கள் கழிக்கின்றேன். பின், 2005 கடைசியில் முன்னிருந்த அதே தேடல் படு தீவிரம் அடைகின்றது. எப்படியாவது அதை உணர வேண்டும் என்ற முயற்சியில் எந்த புத்தகமும் உதவாமல், கடைசியாக, கந்த சஷ்டி கவசத்தில் “நிஷ்டையும் கைகூடும்” என்று சொல்ல, அதை வாங்கி படிக்கின்றேன். மூன்று முறை படித்தேன், அன்று மூன்றாவது நாள். எதுவும் உணர முடியவில்லை. வெறுப்பும், விரக்தியும் மட்டுமே எஞ்சியது. கந்த சஷ்டி கவச புத்தகத்தை தூக்கி எரிந்து விட்டு, அறையில் (தி. நகர்) ஒரு மூலையில், புகை பிடித்தவாறு தலையை சாய்த்தேன். என்னை அறியாமல், எந்த ஒரு முயற்சியும் இன்றி மனம் உள் ஒடுங்கியது. என்னை அறியாமல் முதுகின் அடிப்பாகத்திலிருந்து, ஓர் உருண்ட, திரண்ட ஒளி, ஏதோ ஒரு முடிச்சிலிருந்து அவிழ்க்கப்பட்டு, வேகமாக உச்சந் தலையை நோக்கி சென்று முட்டியது. அன்று தான், எனது முதல் சமாதி நிலையை அனுபவிக்கின்றேன்.
- பின்னர் ஒரு முறை, ஆழ் நிலை தியானத்தில், முதுகு தண்டை போல், உடம்பின் மத்தியிலிருந்து கிளைகளாக, பளிச் என்று எங்கும் ஓடிக் கொண்டிருக்கும் சக்தியின் ஓட்டத்தை காண்கின்றேன். இவை எந்த மேதை எழுதிய புத்தகங்களிலும் குறிப்பிட வில்லையே என்ற வருத்தம் மேலோங்க, அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள, நமக்கு ஓர் குரு தேவை என்ற எண்ணம் மிக ஆழமாக விதைக்கப்படுகின்றது. அன்றே தொடங்கியது எனது குரு தேடல், பதினெண் சித்தர்களில் ஆரம்பித்து, கடைசியாக அன்பர் ஒருவர் மூலம், சித்தர் அய்யா பிள்ளையிடம் அது என்னை அழைத்து செல்கின்றது. சித்தரின் தொடர்பு கிட்டியும், அவரை நேரில் காண ஆறு மாத காலங்கள் ஆனது.
- ஒரு வழியாக, அவரின் உத்திரவின் படி 2006ல், சுயம்பு சக்தியாக, சித்தர் அய்யா பிள்ளையை நேரில் காண, அதே நண்பருடன் நாகவிளாகம் செல்கின்றேன். அவர் ஒரு ஓடையை காட்டி குளித்து விட்டு வர சொன்னார். அங்கு சென்று பார்த்த பின்னரே தெரிந்தது, அது நீரோட்டம் இன்றி, அழுக்கு படிந்த, கணுக்கால் அளவு தண்ணீர் கொண்ட குட்டை என்று. அன்றைய காலக்கட்டங்களில், நான் புற சுத்தத்தை (Hygenic) வெகுவாய் நேசித்தேன். அந்த பாசி படிந்த, தேங்கிய குட்டையில் காலை வைக்க எனக்கு கூசியது. திரும்பி சென்று விடலாமா என்று கூட யோசித்தேன். ஆனால், என்னை ஏதோ ஒரு சக்தி உந்த, மெல்ல குட்டையை நோக்கிச் சென்றேன். முதல் முறையாக, மனம் உவந்து கீழ்ப்படிந்தேன். குட்டையில் கால் வைத்த அடுத்த நொடி, அது வரை வெறித்திருந்த வானம் மழையாக பொழிந்தது. அன்று நான் குட்டையில் குளிக்கவில்லை. மழையில் ஆசை தீர நனைந்தேன். உஷ்ணம் தணிந்தது. ஒரு நாழிகை நீடித்திருக்கும். மனமும் அமைதியானது. உள்ளார்ந்த களிப்புடன் சித்தரின் இல்லத்திற்கு சென்றோம். அவரும் எங்களோடு பேச காத்திருந்தார், அன்று ஆரம்பித்தது எனது இறை பயணம், அதில் சித்தரிடம் கிட்டிய அனுபவங்கள் பின்வருமாறு: [2006]
- சென்னையின் ஓர் அன்பரின் வீட்டில், இரவு சத்சங்கம். திரு. ஆறுமுகன் ரூபமாக கூத்துக்கட்டுதல் இனிதே ஆரம்பித்தது. அவர் “கந்தனே வழியென்று, கருனை முகத்தானே வழியென்று” என்று ஒரு பாடலை கம்பீரமாக, சப்தமாக பாட, என்னை அறியாமல், எனது கண்களில் நீர் ததும்பியது. வெளியே வந்து விழுந்துவிடுமோ என்ற அளவிற்கு இதயம் வேகமாய் துடித்தது. எதிரில் உச்சி வெயில் சூரியனை ஒத்த, பிரகாசமான ஒளி என் முன் தென்பட்டது. திரு. ஆறுமுகனின் கழுத்திலிருந்து முகம் வரை அது மறைத்து நிற்க, எனக்கு, பிரணவ சப்தத்துடன், சக்கர சப்தமும் கேட்டது. அப்படி ஒரு பிரமாண்டமான ஒலி—ஒளி தரிசனம் அன்று எனக்கு கிட்டியது. அன்று என் மூலமாக, முதல் முறையாக வாலையும் பேசியது, “ஆடுபவனும் அவனே, ஆட்டுவிப்பவனும் அவனே”. அத்துடன் சத்சங்கமும் நிறைவுற்றது. [2006-2007]
- இது இவ்வாறு இருக்க, அதே நாள், அதே நிகழ்வில், ஒரு கோப்பை தண்ணீரில், அதே ஆத்ம நிலையில், என்னை தண்ணீரை உற்று நோக்க சொல்லி, திரு. ஆறுமுகன் [விபூதி சித்தர்] கட்டளையிடுகின்றார். எனக்கு முதல் முறையாக, வட்ட வட்டமாய் நெற்றி பொட்டிலிருந்து பச்சை, நீல, வெள்ளை ஒளி வட்டம் தோன்றுகின்றது. அது தண்ணீரில் தெரிந்தது. [2006-2007]
- ஒரு முறை சித்தர் அய்யா பிள்ளை சொன்ன புத்தகத்தை படித்து, அதிலிருந்த குறிப்பை, “சோ ஹம்” என்ற மந்திரத்தை, விளையாட்டாக, குறிப்பிட்ட முறையில் ஜெபிக்க, அன்று இரவு, சையனத்தில் விழிப்புணர்வு ஏற்பட, அதே மந்திரத்தை, அதே முறையில், ஆழ் மனம் சொல்லிக் கொண்டிருந்தது, அப்படி சொல்லிக் கொண்டிருக்க, உடம்பினுள், நெஞ்சினில், சோதி ஒன்று கிளம்பி பிரம்மத்தை நோக்கிச் சென்றது. பயத்தில் எழுந்து அமர்ந்து விட்டேன். அதுவே எனது முதல் சோதி (உள்ளொளி) தரிசனம். [2007-2008]
- ஓர் ஹோமத்தின் போது, நாகவிளாகத்தில் சித்தர் அவர் தம் இல்லத்தில், முன் அறையில், திண்டின் மேல் படுத்தவாறு சயனித்திருக்க, பிரம்மத்தின் ஊடே, சுடரானது (சோதி), ஆண் குறி, யோனியை புணர்வதை போல், மெல்ல, மிருதுவாய், இலகுவாய், சுகமாய் புணர்ந்து வெளி வர, அதை திரும்பவும், உள் இழுத்துக் கொள்கின்றேன். இந்த நிகழ்வை எண்ணியவாறு வியப்பில் படுத்திருக்க, சித்தர் அய்யா பிள்ளை உள் அறையிலிருந்து வெளியே வந்து, எனது மன ஓட்டத்தை உணர்ந்து, “என்னடா ரோஸு, பொறுமையாக அனுபவிக்கலாமா…” என்று கூற, எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அன்று எனக்கு கிடைத்த அனுபவத்தை விட, சித்தர் எனது மன ஒட்டத்தையும், எனது ஆத்ம அனுபவத்தையும், எந்த அளவிற்கு உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகின்றார் என்பதே, என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. [2007-2008]
- 2008ல் தில்லை நடராஜர் கோவில் நீராடல் போது, ஒவ்வொருவராய் சித்தர் நீராட்டி விட்டு, மெல்ல என் அருகே வர, என் உடல் துடிக்க ஆரம்பித்து விட்டது. உள்ளிருந்து ஏதோ ஒன்று வெகு வேகமாய் கழன்று, நாபி துடிக்க, மேல் நோக்கி நகர்ந்தது, தன்னை விடிவித்துக் கொள்ள துடித்தது. அவர் “ஓம்” என்று உச்சரித்தவாறு என் அருகில் வர, அவர் கண்களை நான் உற்று நோக்க, உள்ளிருந்த கழன்ற ஒன்று, முழுவதுமாய் கழன்று, பிரம்மத்தை (உச்சந் தலை—அண்டவுச்சி) நோக்கி நகர்ந்தது, வலது கண் பிரகாசமாய் சூரியனை ஒத்த நிலையில் பிரகாசிக்க, இடது கண் நிலவை போல் பிரகாசித்து, இரண்டும் நெற்றிப் பொட்டுக்கு மேல், சேரும் இடத்தில் மின்னல்கள் வெட்ட, அதையும் தாண்டி, பிரம்மத்தையும் தாண்டி, சர சர வென்று, விட்டால் போதும் என்பது போல், எனது உயிரும், அதனுள் அடங்கிய உணர்வும், சக்கரம் சுற்றியாட, பரப்பிரம்மம் நோக்கி, அதி வேகத்தில் சென்றது. கால்கள் தரையில் நிற்கவில்லை, உடல் சித்தரின் மேல் சாய்ந்தவாறு கிடக்க, கணுக்கால்களை அன்பர் ஒருவர் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார். சித்தர் முதுகில் மூன்று முறை தட்ட, உடலை விட்டு சென்று கொண்டிருந்த எனது உயிர் திரும்பவும் உடலுக்குள் இறங்கியது, வற்றிய நுரையீரலில் காற்று திரும்ப உள்புக, இருமிக் கொண்டே சித்தரை, கிழ் இறக்கி விட்டதற்காக பாதி கோபத்துடனும், பாதி பிரம்மிப்புடனும் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நிகழ்வுக்கு பின், ஒரு நாழிகைக்குள், கைகளில் தோல் உரித்தாற் போல், எனக்கு, அன்று, முதுகு தண்டில் தோல் உரிந்தது. இந்த அனுபவத்தை பிற்காலத்தில் சித்தர் காக புஜண்டர் பாடலில் படித்த போது நல்ல தெளிவு கிட்டியது.
- மேலும், பல முறை, என்னை யோகத்தில் தள்ளியுள்ளார். கால்கள் பின்னும், முட்டி போட்டவாறு, முதுகு பின்னோக்கி வளைந்து, நாபியிலிருந்து விடுபட்ட உயிர் பிரம்மத்தை முட்டி நிற்கும். எதுவுமே செய்யாமல் வாசி கும்பகித்த நிலை, அவரது அருகாமை எனக்கு கிடைத்தருள செய்தது. சில சமயம் பிரம்மத்தை விட்டும் உயிர் பிரிந்து சென்றது.
- அனைத்தையும் விட, அவர் அருகாமையில், அவர் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள் பாட, நமக்கு மனம் உள்ளடங்கி, ஆத்ம சுகம் கிட்டும். இப்படி ஆத்ம போதையில் பல நாழிகைகள் கழித்தது உண்டு.
- ஒரு முறை ஹோமத்தின் போது, சித்தர், ஒளி விளக்கை, என்னையும், அன்பர் ஒருவரையும் பிடித்து வர சொல்ல, கண்கள் கூட திறக்க முடியாத அளவிற்கு அப்படி ஓர் ஆத்ம போதை கிடைத்தது. திரு. ஆறுமுகன் அவர்கள் கூட, நாங்கள் மது தான் அருந்தி விட்டு ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றோம் என்ற சந்தேகத்துடன் தான் பார்த்தார். அந்த அளவிற்கு எங்களுக்கு ஆத்ம போதை கிட்டியது. இதை அவரே எங்களிடம் பின்னர் தெரிவித்தார்.
- சென்னையில், சித்தருக்கு மிகவும் வேண்டிய ஓர் அன்பர் வீட்டில், சித்தர் யாருக்கும் செய்யாத ஒரு விஷயத்தை என்னையும், மற்றும் ஒரு அன்பரை வைத்து செய்து முடித்தார். செய்வினை அன்று அகற்றினோம். அது என்னை பதம் பார்த்து விட, அலுவலகம் சென்ற நான் உடனே திரும்ப வந்து விட்டேன். கண்களுக்குள் கரப்பான் பூச்சி கால் நுனி மாட்டிக் கொள்ள நான் துடியாய் துடித்தேன். இது எவ்வாறு நடந்தது என்று சற்றும் அறிகிலேன். மேல் அறையில் வலியுடன் படுத்திருக்க, மெல்ல சித்தர் என் அருகே வந்து, “வலிக்குதா, உன் உயிரை பணையம் வைத்து செய்தேன், குரு நாதர் காப்பாற்றி விட்டார், பொறுத்துக் கொள்”. என்றார். எனது வாழ்க்கையில், அது மறக்க முடியாத ஓர் நிகழ்வு. சித்தர் என் மேல் வைத்திருந்த நம்பிக்கை, மது அருந்திக் கொண்டும், சிகரெட் பிடித்துக் கொண்டும், ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டும், விளையாட்டு போக்காய் இருந்த என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்தது. அன்று முதல் அவருடனான உறவு அசைக்க முடியாத பலம் வாய்ந்த ஒன்றாய் மாறியது. [2009-2010]
- பின்னர் பல நேரங்களில் தேர்ந்தெடுத்த புத்தகங்களை அவருக்கு படித்து காட்ட, அதற்கான விளக்கங்களை அவர் அனுபவ ரீதியாக சொல்வது வழக்கம். இப்படி அவரது அறிவும், அனுபவமும், எனக்கு மெல்ல மெல்ல கிடைக்க ஆரம்பித்தது. [2009-2010]
- மேலும் தியானத்தில் காட்சிகள், விழிப்பு நிலையில் சக்கரங்களை காணுதல், அதிர்வு நிலைகளை உணர்தல், ஆழ் நிலை தியானம், உள்ளொடுங்கிய சமாதி நிலை, பரகாய பிரவேசம் என பல நிலைகளை உணர்ந்தேன். இன்றளவும் அவைகளை அனுபவித்துக் கொண்டு தான் வருகின்றேன்.
- சித்தர் விரும்பி செல்லும், திருவான்மியூர், சக்கரத்தம்மாள் கோவிலில் காலை சில நாட்களாக தியானம் செய்து வந்தேன். ஒரு முறை ஆழ் நிலை தியானத்தில், வட்ட வட்ட ஒளியினூடே பிரவேசம் அடைய, பயணத்தின் முடிவில், வேறு ஒரு இடத்தில், யாரோ ஒருவர் பூசை செய்ய, அவர் (ஆணின் குரல்) ஓதும் மந்திரம், “வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி…” எனக்கு தெள்ளத் தெளிவாக கேட்டது. இதை சித்தரிடம் சொல்ல, அவர் முதலில் கூறியது, “அவளை தொந்தரவு செய்யாதே” என்று தான். அன்றிலிருந்து, அங்கு சென்று தியானம் செய்வதை நிறுத்தி விட்டு, அந்த பக்கம் செல்லும் போதெல்லாம் சித்தர் சக்கரத்தம்மாள் சமாதிக்கு சென்று விட்டு வருவதை மட்டும் வழக்கமாக கொண்டேன். [2008-2009]
- ஒரு ஹோமத்தின் போது மழையை நிறுத்திக் காட்டினார், அன்று அவர் என்னிடம் கூறியது, நாம் ஸ்தம்பம் செய்தால் இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் மாற்றலாம், இயற்கையையும் கட்டுப்படுத்தலாம், ஆனால், அதற்கு முதலில் குருவின் உத்திரவு பெற வேண்டும், அதற்காக தான் ஊர்வலம் ஆரம்பிக்கும் முன், உத்திரவு கிடைக்கும் வரை மன்றாடினோம் என்றார்.
- அவர் பல ஆத்மார்த்தமான மற்றும் தனிப்பட்ட விஷயங்களை என்னுடன் பகிர்ந்துக் கொண்டார். அதில் எனக்கு மிகவும் கவர்ந்தது, அவர் வறுமை தாள முடியாமல், புளியங் கொட்டையை வேகவைத்து உண்டது. வறுமை தாளாமல் மூன்று முறை தற்கொலை செய்து கொல்ல முயற்சித்து தோல்வி அடைந்தது. சித்தர்கள் அவரை காபாற்றுவது, என சராசரி மனிதனின் உணர்வுகளையும் அனுபவித்து, பல துரோகங்கள் இழைக்கப்பட்ட பின்னரும், தனது வேலைகளை செவ்வனே செய்து வந்து, குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றி, ஆத்ம ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் விடுதலை பெற்றதே. இது சித்தர் மரபில் வரும் அனைவருக்கும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.
- அவருடன் பல பயணங்களில் பங்கேற்று, அருவி, மலை, காடு, குடும்ப நிகழ்வுகள் என ஊர் ஊராய் சுற்றி வருதல். ஒவ்வொரு யாத்திரா பயணத்திலும், கூட வரும் அனைவரையும் உட்கார வைத்து, பிரம்மத்தில் நீர் வார்த்து குளிப்பாட்டுவது அவரது வழக்கம். ஒவ்வொரு முறை அவர் பிரம்மத்தில் நீர் ஊற்றும் போதும், மனம் சொக்கி நிற்கும். அவை நான் ஆத்ம ரீதியாக இன்புற்று வாழ்ந்த காலங்கள். [2006-2011]
- ஒரு முறை என்னை ஓர் பண்டிகை காலத்தில், நாக விளாகத்திற்கு அழைத்து, வெள்ளை சட்டையும், பச்சை வேட்டியும், சில நாணயங்களுடன் தாம்பூலத்தில் வைத்து தர, அதை வாங்கிய அடுத்த நொடி, முழுவதுமாய், உயிர் (வாசி), பிரம்மத்தின் வழியாக, என்னை விட்டு அதிவேகத்தில் பிரிந்து, சற்று நேரம் அந்தரத்தில் இருந்து விட்டு, சில நொடிகள் கழித்து, பிரம்ம சக்கரத்தை பார்த்தவாறு உடலுக்குள் இறங்கியது. நான் விழித்த பார்த்த போது எனது உடல் கிழே கிடந்தது, சித்தர் எனது அருகில் நின்றுக் கொண்டு என்னை எழுப்பிக் கொண்டிருந்தார். அன்று தான் யாம் அறிந்துக் கொண்டோம், வாசியின் வீரியத்தையும், வேகத்தையும்.[2009-2010].
- ஒரு முறை மகாபலி்புரத்தில், அன்பர் ஒருவர் வீட்டில் வழிபாடு முடித்து விட்டு, திரும்ப சென்னை நோக்கி பேரூந்தில் வந்து கொண்டிருந்த போது, மனம் முழுவதுமாய் அடங்கி, உள்ளோடும் இரு கலைகளின் ஓட்டத்தை, தெளிவாக கண்டு, அதில் லயித்து கிடந்தேன். வலது நாசியும் வலது கண்ணம் சேரும் இடத்தில், பச்சை நிற ஒளியின் ஓட்டமும், இடது நாசியும், இடது கண்ணம் சேரும் இடத்தில் நீல நிற ஒளி ஓட்டமும், மேல் நோக்கி ஆக்ஞையில் கூடி, பின்னி, பின் ஒர் பிரகாசமான வெண்மை நிற ஒளியாய் மேல் நோக்கி சென்றது. இந்த அனுபவத்தில் குறிப்பிட வேண்டிய நுணுக்கமான விஷயம் என்னவென்றால், சுவாசிக்க வேண்டும் என்ற உணர்வு கூட அற்று போய், அதற்காக சிறிது அளவு கூட மெனக்கெடாமல், அந்த சுவாசிப்பையே வேறொரு, தனக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத, முழுவதுமாய், வேறொரு நிகழ்வாக பார்க்கும் நிலை, அந்த அளவிற்கு மனம் உள்ளார அடங்கி, கலையின் ஓட்டங்களை கவனித்தவாறு இருந்தேன். [2009-2010]
- பம்மல் திரு. கடற்கரையாண்டி குடும்பத்தினர் குடியிருந்த வாடகை இல்லத்தில், அன்பர் ஒருவர் உதவியுடன், சித்தர் அய்யா பிள்ளைக்கு எண்ணெய் தேய்து, உடம்பில் உள்ள தசை நார்களை வருடி, நாடிகளை தட்டி, பதத்துடன் இலவாகமாய், வாசியை மேல் ஏற்றி கும்பிக்க செய்து, பிரம்மத்தை தீண்டி, பர நிலை கிட்ட செய்தேன். இதனால் மிகவும் மகிழ்வுற்ற சித்தர், நான் யார் என்று உணர்ந்துக் கொள் என்று கூறி, தனது முழு சக்தியை என் மேல் பாய்ச்சினார், அவர் அருகே செல்ல முயன்றும் என்னால் ஒரு அடி கூட அருகில் எடுத்து வைக்க முடியவில்லை. என்ன செய்தும் அவரை நெருங்க முடியவில்லை. அந்த அளவிற்கு அவர் உடம்பில் இருந்து, ஜீவ காந்த சக்தி என் மேல் வேகமாய் பாய்ந்தது. என்னை அவரை நெருங்க முடியாமல் தடுத்தது. பின்னர், இருவரும் சிரித்துக் கொண்டே சகஜ நிலைக்கு திரும்பினோம். அதன் பின், அந்த நிகழ்வை பற்றி அலைபேசியில், என்னை அழைத்து, அதன் சுட்சமத்தையும், அது எனக்கு, சித்தர் திருமூலர் மூலமாக கிடைத்திருப்பதையும் தெரிவித்துக் கொண்டார். பின்னர், அவர் அனுபவித்த அந்த சுகத்தை அவரது மனைவியிடம் கூட அனுபவித்தது இல்லை என்று கூறி தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திக் கொண்டார். [2009]
- பின் ஒரு நாள் இந்தோனேஷியா சென்று விட்டு திரும்பிய நேரத்தில், அவர், என்னை மகாபலிபுரத்தில், ஓர் அன்பர் வீட்டிற்கு அழைத்து, ஒரு பாக்கேட் சிகரெட்டும், பக்கத்து அறையில் இருந்த ஜெர்மனியர் இடமிருந்து ஒரு பாட்டில் பீர் வாங்கி வரச் சொல்லி அதில் ஒரு கோப்பையை எனக்கு கொடுத்து அருந்துமாறு சொன்னார். காதல் முறிந்த வலியால் மிகவும் ஒடுங்கிப் போன நிலையில் இருந்த எனக்கு, அது தேவ அமிர்தமாக இருந்தது. அப்பொழுது என்னிடம் அவர் கூறியது இதில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள், ஏன் விபச்சாரியிடம் கூட செல், தற்கொலை மட்டும் செய்து கொள்ளாதே என்று ஆறுதல் கூறினார். அந்த இழப்பிலிருந்து வெளியே வர பல மாதங்கள் ஆகின, அதிலும் குறிப்பாக, நான் வேலை செய்த இடத்தில் இருந்த சில பெண் நண்பர்கள் மூலமாகவும், சித்தர் அய்யா பிள்ளை நேசித்த, பல குருமார்கள் அருளாலும், மெல்ல புகை பழக்கத்தையும், பின்னர் குடி பழக்கத்தையும் விட்டு, எழுதுகோலை கையில் எடுத்தேன். [2010]
- பின்னர், மேற்சொன்ன அதே நிகழ்வின் போது, நாங்கள் இருவரும் மது அருந்தியவாறு பேசிக் கொண்டிருக்க, அவரை ஒரு பெண் அலைபேசியால் அழைத்து, அழாத குறையாக தனது இன்னல்களை முறையிட்டாள். தீடிரென்று, அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்த போதே, என்னை அழைத்து, அவர் எதிரில் நிற்க சொல்லி, சித்தர் சிவவாக்கியர் பாடல்கள் பாட, எனது வாசி கும்பித்து, பர நிலை அடைந்தேன், வெளி சக்கரத்தையும் கண்டேன். நான் அப்பொழுது, அனுபவித்துக் கொண்டு இருந்த நிலையை, என் மூலமாக, அலைபேசியில் அந்த பாடலை கேட்டுக் கொண்டிருந்த அம்மையாருக்கும் கிட்டச் செய்தார். பின்னர் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டது, அந்த அம்மையாருக்கு, என் மூலமாக கிடைத்தாக இருக்க கூடாது, அதனால் தான் உன் மூலமாக தந்தேன் என்றார். [2010]
- முதல் சந்திப்பில் அவருடன் பேசிக் கொண்டு இருந்த போது, நான் காட்டுக்கு சென்று சமாதி நிலையை அடைய விரும்புகின்றேன் என்று சொன்ன போது, நீ காட்டுக்கு சென்றாலும், அங்கு மலை வாழ் மக்கள் மாலை சார்த்தி உன்னை சாமியாக்கி, உனக்கு திருமணமும் செய்து, வாழ்வியலில் தள்ளி விடுவார்கள், நீ அங்கு மரம், செடி, கொடி, பறவைகளுக்கு நன்மை செய்வதை விட, மக்களோடு மக்களாக, வாழ், மக்களக்கு நன்மை செய், உன் மூலமாக நான் செயல்படுவேன் என்று கூறினார். பின், வீட்டினோடு இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்ததை நான் சொல்லாமலே, அவரே உணர்ந்து, முதலில் அதனை புதுப்பித்துக் கொள் என்றும் கட்டளையிட்டார், அதன் பின்னரே, மெல்ல, உலக வாழ்க்கையிலும், வீட்டினோடும், தொடர்பு ஏற்படுத்திக் கொண்டேன். [2006]
No comments:
Post a Comment