சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (7): திரு. அம்மாவாசி ஆ. அவர்களின் இறை அனுபவங்கள்.
![]() |
திரு. அம்மாவாசி. ஆ [Ammavasi A] |
நேர்காணல் விவரம்:
இடம்: இராமர் கொடாப்பு, வாசி மலை அருகில், தொட்டப்பநாயக்கனூர், உசிலம்பட்டி, மதுரை.
நாள்: சித்தரை 21, 2017 வியாழக்கிழமை [05/04/2017 ] காலை 10.59 முதல் மதியம் 12:04 வரை [10:59 AM to 12:04 PM]
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]
குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
- திரு. அம்மாவாசி அவர்களது பத்தாம் வயது மூலம், சுயம்பாக பல இறை அனுபவங்கள் கிடைக்கப்பெற்று, சாமியாடி, வாசி மலையான், மற்றும், அங்கு வீட்டிருக்கும் பிற இறை சக்திகளை நிறைவாய், ஆத்மார்த்தமாய் வழிபட்டு வந்திருக்கின்றார். பின்னர், திரு இராமர் அவர்கள் மூலம், சித்தர் அய்யா பிள்ளையை நேரில் சந்தித்து, அவரது அருளையும் பெற்றிருக்கின்றார். இன்றளவும், அவர், பணம், பொருள், ஏதும் வாங்காமல், மக்களுக்கு இறை சேவை செய்தும், செய்தி சொல்லியும், மக்களுக்கும், ஆடு, மாடு, மற்ற இதர ஜீவன்களுக்கும், விபூதி போட்டு, தகப்பன் வழி கிடைத்த வாசி மலையான் மந்திரத்தை ஓதி, மருந்து கொடுத்து, நோய் விரட்டி, விஷ கடிகளின் விஷத்தையும் நீக்கி, வருகின்றார்.
- இராமர் கொடாப்பில், சித்தர் அய்யா பிள்ளை அவர்கள், அவர் அங்கு விரும்பி கேட்டு உண்ணும் புளித்த கஞ்சியும், வெங்காயமும் உண்ணும் போது, திரு. அம்மாவாசி அவர்களிடம் உரையாட நேர்கின்றது, அந்த உரையாடலின் போது, இதில் நீ வித்தியாசமான ஆளாய் இருக்கின்றாய் என்று கூறி, நீ நினைத்தது எல்லாம் நடக்கும் என்ற வாக்கும் தருகின்றார். பின் அவர்களுடன், தெற்கு மலையோரம், மோர் ஊற்று அருகில், பாண்டி கோவில், பளிச்சியம்மா சந்நிதியில், சித்தர் வழிபாடு செய்கின்றார், அன்றைய வழிபாட்டில், வாசி மலை சித்தர், நாக கண்ணிகள், பாண்டி சாமி, என பல தெய்வங்கள் பக்தர்கள் மேல் இறங்கி அருள் பாலித்தனர்.
- அதன் பின் இராதாமங்கலம் யாகத்தின் போது, யாக குண்டத்தில், அம்பாள் இறங்கும் காட்சி அவருக்கு கிட்டுகின்றது. அந்த காட்சி அவரை பரவசமடைய செய்து, பின்நோக்கி தூக்கி அடிக்கின்றது. சபையில் பின் அமர்ந்திருந்த ஒருவர், பரவசமடைந்த திரு அம்மாவாசி அவர்களை முதுகில் தட்டி, சாந்தப்படுத்தி அமர வைக்கின்றார்.
- திரு அம்மாவாசி அவர்களின் மூன்றாவது இராதாமங்கல யாக காலத்தின் போது, அவரது மூத்த மகனுக்கு அவர்களது ஊரில் திருமணம் நடைபெறுகின்றது. அந்நிகழ்ச்சியில், சித்தர் அய்யா பிள்ளை, தாலி எடுத்துக் கொடுத்து, ஆசிர்வதித்து, தலைச்சன் பிள்ளை ஆண் என்று வாக்கும் தருகின்றார், பிற் காலத்தில் அந்த வாக்கும் இனிதே நிறைவடைகின்றது.
- பின்னர் ஒரு நாள், திரு அம்மாவாசி அவர்கள் இடத்தில் வேப்ப மரத்தில், திரு இராமர், சித்தர் அய்யா பிள்ளை, இன்னும் சிலர் கூடி, அங்கு குடிகொண்டிருந்த இறை சக்தியை பள்ளிகொள்ள செய்து, நிலை நாட்டுகின்றனர். அந்த நிகழ்வின் போது, திரு இராமர் அவர்களின் மைத்துனர் மேல் அந்த இறை சக்தி இறங்கி, பெண்ணாக பிறப்பேன் என்று வாக்கு கூற, அதேபோல் அவர் மூத்த மகனுக்கு, இரண்டாவது குழந்தை, பெண்ணாக பிறக்கின்றது. அந்த வேம்பில் குடிகொண்டுள்ள இறை சக்தியை, கணவின் மூலம் திரு. அம்மாவாசி முன்னரே உணர்ந்து இருக்கின்றார். அங்கு, சித்திரா பெளர்ணமி அன்று, அந்த தெய்வத்துக்கு விஷேச வழிபாடுகள் நடந்து வருகின்றன. அந்த வழிபாடுகள் அனைத்திலும் மலைவாழ் மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து, வஸ்திரம் தந்து, அன்னதானம் அளிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு.
- சித்தர் அய்யா பிள்ளையுடன் சபரிமலை அய்யப்பன் முதல் பயணத்தின் போது, அவர்களுக்கு முன், அய்யப்பன் புலி மேல் செல்லும் காட்சியும் அவருக்கு கிடைத்திருக்கின்றது.
- அதே பயணத்தின் போது சித்தர் அய்யா பிள்ளையிடம் இருந்த ஜீவ காந்த சக்தி கொண்ட உருத்திராட்ச மாலையை திரு. அம்மாவாசியிடம் கொடுத்து உணர சொன்ன போது, அவருக்கு அருளுடன் கூடிய யோக நிலை கிடைத்ததை நினைவு கூறுகின்றார்.
- சித்தர் அய்யா பிள்ளை பர்மா பயணத்தின் போது சில பச்சை நிற கற்களை கொண்டு வந்து அனைவரையும் தொட்டு தருமாறு கேட்கின்றார், அதை அவர்களும் அவ்வாறே செய்கின்றனர். அது அவர்களுக்கு, தங்கள் அனைவருக்கும் அந்த கற்கள் கிடைத்தது போல மன நிறைவை தருகின்றது. திரு. அம்மாவாசி அவர்கள், அந்த கற்களை தொட்ட போது, அதில் விறு விறுவென குளிர்ந்த அதிர்வுகள் தன் மேல் பாய்ந்ததை நினைவு கூறுகின்றார். பிற்காலத்தில் அந்த கற்கள், சித்தர் அவர்களை அடக்கம் செய்யும் போது, அவர் சமாதியில் சேர்த்து புதைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்க ஓர் நிகழ்வு.
- ஓர் ஊர்வலத்தின் போது, சித்தர் அய்யா பிள்ளை, திரு. அம்மாவாசி அவர்களிடம், இனி, நீ தான் தீவட்டி பிடித்து வர வேண்டும் என்று கட்டளையிடுகின்றார். அதேபோல், அந்த ஊர்வலத்தில், அவருக்கு, தலைப்பாகை கட்டி, மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, தீவட்டியை கையில் தருகின்றனர். கொடுத்த கையுடன் அருள் நிலையடைந்த அவர், ஊர்வலம் முடியும் வரை, அதே நிலையில், மெய்மறந்த நிலையில், தீவட்டியை தூக்கி வந்திருக்கின்றார். கடைசியில், பாலத்தின் அருகே வந்த போது, நாக சுழற்சி ஏற்பட்டு, வாசி மேல் எழும்பி இறங்க, யோக நிலையில், சுழற்சிக்கு இசைந்துக் கொடுத்தவாறு, இயற்கையாக ஆடி வந்திருக்கின்றார்.
- ஒரு முறை, ஊர்வலத்தில், சித்தர் அய்யா பிள்ளையை, திரு. ஆறுமுகன் அவர்கள் அருள் நிலையில், தோலில் தூக்கி வைத்து ஆடிய காட்சி, அந்த ஈசனையே தோலில் தூக்கி வைத்து ஆடியது போல இருந்தது என கூறி மெய் சிலிர்த்தார்.
- சித்தர் அய்யா பிள்ளையை நேரில் பார்த்த போது, எல்லாம் தாயாகவே, ஒரு பெண் தெய்வமாகவே, தாம் அவர் மடியில் படுத்திருப்பது போலவே உணர்கின்றார்.
- ஒரு முறை சித்தர் அவர்கள், திரு. அம்மாவாசி அவர்களின் சயனத்தில் காட்சி தருகின்றார், அவர்கள் வீட்டிற்கு வெளியே நிற்க, திரு. அம்மாவாசி அவர்கள், சித்தர் அவர்களை உள் அழைத்து சென்று, சாமியறையில் அமர வைக்க, அமர்ந்த அவரை ஏகாந்த நிலை ஆட்கொள்ள, எழ முடியாமல் தவித்து இருக்கின்றார். இதை உணர்ந்த திரு. அம்மாவாசி அவர்கள், சித்தர் பாதத்தின் மேல் காலை வைத்து அழுத்தி, தூக்கி விடுகின்றார். இந்த காட்சியை, அடுத்த நாள் சித்தர் அவர்களிடம், அலைபேசியில் தொடர்பு கொண்டு விவரிக்க, சித்தர் விளையாட்டாக, நீ அங்கு கனவில் காலை மிதித்து எழுப்ப, எனக்கு இங்கு கால் பொத்து விட்டது என்று கூறி இருக்கின்றார். இவ்வாறாக, எனக்கு இங்கு நடக்கப் போவதை முன்னதாகவே சித்தர் உன்னிடம் தெரிவித்திருக்கின்றார் என்றார். அதேபோல், திரு. இராமர் அவர்கள், மற்றும் சில பெரியவர்கள் சையனத்தில் வரும் போது எல்லாம், அன்று மழை பெய்வதையும், பட்டறிவு மூலம் உணர்ந்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ஆத்திகத்தில், சித்தர் அய்யா பிள்ளையை தாயாகவும், திரு. இராமர் அவர்களை தந்தையாகவும் கருதி, அவர்கள் வழியில் செவ்வனே பின் தொடர்ந்து வந்திருக்கின்றார்.
- முதல் முறை சித்தர் அவர்கள் பஞ்சாச்சரம் சொல்லி நெற்றியில் விபூதி வைத்து குங்குமம் வைக்க, திரு அம்மாவாசி அவர்கள், சித்தர் அருளால் ஆட்கொள்ளப்பட்டு, அவர் மடியில் மெய்மறந்து சாய்ந்து விடுகின்றார். பின்னர் அவர் முதுகை தட்டி எழுப்பி, ஒரு கையை பிரம்மத்தில் மேல் வைத்து “சாந்தம்” என்று சொல்லி மிருதுவாய் அழுத்தி, மற்றொரு கையால், மூன்று முறை, நீர் தருகின்றார். இந்த நிகழ்வு திரு. அம்மாவாசி அவர்களுக்கு ஆத்மார்த்தமான பெரும் மன நிறைவு தருகின்றது.
- ஒரு முறை ஊர்வலத்தின் போது, திரு. அம்மாவாசி அவர்கள் மேளக்காரர்களிடம், விளையாட்டாக, நான் பாட்டு படிக்கின்றேன், நீங்க அடிங்க, என்று கூறியிருக்கின்றார். அங்கில்லாத சித்தர், அதே வாக்கியத்தை, ஊர்வலத்தின் போது, திரு. அம்மாவாசியிடம் கூற, அவரும் ஒரு பாட்டு படிக்கின்றார், பின்னர், அது அவரை, பரவச நிலையடைய செய்கின்றது, நாக சுழற்சி ஏற்பட, வாசி மேல் எழும்பி, இறங்கிய நிலையில், மெய்மறந்து, பலருடன் சேர்ந்து ஆடி வருகின்றார்.
- ஒரு முறை சபரி மலை செல்லும் போது, சுரளி மலையில் தீர்த்ததை பிரம்மத்தின் மேல் விட, அது திரு. அம்மாவாசி அவர்களுக்கு ஈஸ்வரன், ஈஸ்வரி, மேல், அபிஷேகம் செய்வது போல காட்சியை தருகின்றது.
குறிப்பு: நேர்காணல் பதிவு செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.
No comments:
Post a Comment