சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (15): திரு. மணிசாமி. பெ அவர்களின் இறை அனுபவங்கள்.
![]() |
மணிசாமி. பெ. (Manisamy) |
நேர்காணல் விவரம்:
இடம்: மதுரை, திரு. மணிசாமி. பெ அவர்களது வசிப்பிடம்
நாள்: வைகாசி 13, 2018 ஞாயிற்றுக்கிழமை [05/27/2018] மதியம்
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]
குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
- 37 வருட சதுரகிரி பயணமும். 37 வருட சபரி மலை பயணமும் மேற்கொண்ட இவர், முதல் முறை சித்தர் அய்யா பிள்ளையை சந்தித்தது சதுரகிரி மலையில், ஒரு அமாவாசை இரவு, சதுரகிரி சுந்தர மகாலிங்க சாமி சன்னிதியில், சுவாமி அபிஷேகத்தின் போது. தேவாரம், திருவாசகம் முழங்க, சுவாமிக்கு பூஜைகள் நடந்து கொண்டு இருக்க, நூறு—நூற்றி ஐம்பது பேர் சுற்றி வழிபாடு செய்ய, சித்தரின் உடம்பில் இருந்து ஒரு ஒளி பயணித்து சென்று லிங்கத்தை மோதியிருக்கின்றது. பூசாரி யாரையும் படம் பிடிக்க கூடாது என்று சொல்லி விட்டு திரும்ப, இரண்டாவது முறையாக ஒரு ஒளி சித்தரின் உடம்பில் இருந்து பயணித்து சென்று லிங்கத்தை தடவுகின்றது, இந்த முறையும் பூசாரி சந்தேகித்து சோதிக்க, யாரும் படம் எடுக்க வில்லை என்று தெரிய வருகின்றது. பிறகு, வழிபாடு தொடர, சித்தரின் உடம்பில் இருந்து சென்ற ஒளி லிங்கத்தை ஆர தழுவி இருக்கின்றது. இந்த நிகழ்வை கண்ட திரு. மணிசாமி, யாரோ பெரியவர் வந்திருக்கின்றார் என்று எண்ணிக் கொண்டு, அன்று இரவு கூட்ட நெரிசலில் பேச இயலாமல் விலகி சென்று இருக்கின்றார். இந்த நிகழ்வின் போது அய்யாவுடன் இருந்தவர்கள், சித்தரை சதுரகிரி அழைத்து வந்த ஒரு உயர் போலீஸ் அதிகாரி மற்றும் சாப்டூர் ஜமீன். திரு. மணிசாமியுடன் திருவாசகம் தேவாரம் பாடகர்களும் ஒரு அம்மையாரும் உடன் இருந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அடுத்த நாள் காலை பிலாவடி கருப்புசாமி கோவில் அருகே வழக்கமாக குளிக்கும் யானை பள்ளம் அருகில், திரு. மணிசாமி குளித்துக் கொண்டு இருக்க, சித்தர் அவரை நோக்கி வருகின்றார். திரு. மணிசாமி, அவர்களை ‘சாமி’ என்று வணங்க, சித்தர் “நீ யாருப்பா?” என்று வினவி இருக்கின்றார். திரு. மணிசாமி அவர்களும், தான் மதுரையில் இருந்து வருவதாக சொல்ல, சித்தர் உடனே, “டேய், உன்னதாண்ட பாக்கனுமுனு இருந்தேன்” என்று சொல்லி இருக்கின்றார். அறிமுகமே இல்லாமல் தன்னை இப்படி உரிமையுடன் அழைத்தை புன்முறுவலுடன் பகிர்ந்து கொண்டார். சித்தர் அவரை அடிவாரத்தில் இருந்து தான் பூசைகள் செய்வதை கவனித்து வந்ததாகவும், அவரை சந்திக்கும் படி சொல்லியதாகவும், இப்பொழுது சந்தித்து விட்டதாகவும் கூறியுள்ளார். அந்த தொடர்பிற்கு பிறகு, அவருடன் பல யாத்திரா பயணங்கள் சென்று வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
- இப்படி யாத்திரா பயணங்களில் இரவு ஒன்று, இரண்டு, மணிக்கு பார்க்கும் போது, ஆதிசேஷன் மேல் படுத்திருப்பது போல் இருக்கும் என்றும், சிறிது நேரம் கழித்து பார்த்தால் திரும்பவும் மனித உருவத்தில் இருப்பார் என்று வியக்கின்றார். இந்த மாதிரி பல நிகழ்வுகள் அவருடன் அனுபவித்தாக பகிர்ந்து கொள்கின்றார்.
- ஸ்ரீசைலத்தில் இருவரும் லிங்கத்தை பிடித்து வழிபடும் போது, ஒரு ஜோதி லிங்கத்தை மோதி விட்டு சென்றதாக சாட்சி கூறியுள்ளார்.
- துங்கபத்திரா ஆற்றங்கரையில், காளி சன்னிதியில் அமர்ந்திருக்கும் போது, சித்தர் நாக்கில் கற்பூரம் ஏற்றுமாறு உத்தரவிட, திரு. மணிசாமி அவர்களும், நாக்கில் கற்பூரம் ஏற்றுகின்றார், அப்பொழுது அந்த ஒளி, கோவில் கற்பக்கிரகத்தினுள் சென்று காளி மேல் அடித்தாகவும், அந்த நிகழ்வு அவருக்கும் நடுக்கத்தை கொடுத்தாகவும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
- நந்தியால், உமாமகேஸ்வர மலை பயணம் முடித்து, இரவு நேரம், காலை உண்ட உணவோடு, பசியில், ஒரு கடையின் அருகில் இருந்திருக்கின்றார். அங்கு சித்தர் அரங்கேற்றிய சில ஆத்ம வெளிப்பாடுகளை பார்த்து, அந்த கடைக்காரர் சித்தரின் காலில் விழுந்திருக்கின்றார். தன் மனைவிக்கு திருமணமான காலத்திற்கு முன் இருந்து ஆவி பிடித்திருக்கின்றது என்றும், அது அவளை உருக்கி எடுத்துவிட்டது என்றும், குணப்படுத்துமாறு மன்றாடி இருக்கின்றார். சரி என்று அவரும் ஏற்றுக்கொண்டு, சித்தருக்கு தெலுங்கு மொழி தெரியவில்லை எனினும், அருகில் இருந்த அன்பர் ஒருவரின் உதவியோடு, ஆவியிடம் பேச ஆரம்பித்திருக்கின்றார். அதுவும் தலை விரி கோலத்தில் பேசி இருக்கின்றது. அது கேட்டது, ஒரு படி கைகுத்தல் அரிசி, ஒரு சேவல், இரண்டு கிலோ இருக்கும், இரண்டு லிட்டர் ஈச்சங் கல்லு, மற்றும் கண்ணாடி சில இதர பொருட்கள். அதனை செய்து கொடுத்ததும் இரண்டு கிலோ சேவலை கடித்து தின்று, ஒரு படி அரிசியையும் உண்டு, இரண்டு லிட்டர் கல்லையும் குடித்து விடுகின்றது. உடலை குலுக்கி விட்டு, வாக்கு கொடுத்தன் பெயரில், அந்த ஆவி விலகிக் கொண்டது. அதன் பின் முடியை அறுத்து, பனை மரத்தில் வைத்து ஆணி அடித்து விட்டு வருகின்றனர். குணமான பெண்ணோ, உடனடியாக எழுந்து, வந்தவர்களுக்கு சமையல் செய்துவிட்டு இரவு ஒரு மணிக்கு உணவு பரிமாறுகின்றார்.
- இந்த சம்பவத்தின் பிறகு, சுமார் 7அடி உயரம் உள்ள சித்தர் ஒருவர், தும்பை பூ நிறத்தில் பளிச்சென ஒளி பொருந்திய வெள்ளை நிற ஆடையுடன், தாங்கள் இருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தூரத்தில் பாலத்தின் மேல் வந்து அமருகின்றார். இரவு முழுவதும், “சிவ ஹோம்”, “சிவ ஹோம்”, என்று சொல்லி பாடிக்கொண்டே, “ஒருத்தன் இங்கிருந்து வந்திருக்கான், ஒருத்தன் காளி அவதாரம் எடுத்து வந்திருக்கான், ஒருத்தன் சிற்பியா வந்திருக்கான்…” என்று அங்கு கூடியிருந்தவர்களை பற்றி சொல்லுகின்றார். ஒரு சித்தன் வந்திருக்கான், அவன் காளி அவதாரம் பிடிச்சவன், இங்க இந்தந்த விஷயங்கள் செஞ்சிருக்கான், இவன் இந்த அவதாரம் பிடிச்சு வந்திருக்கான் என்று, முன்பின் அறியாத அவர்களை பற்றி சொல்லுகின்றார். “சிவஹோம், நமசிவாய, சிவஹோம்…” என்று இரவும் முழுவது சொல்லிக் கொண்டே இருந்திருக்கின்றார். சரியாக பிரம்ம முகூர்த்தம் ஆரம்பிக்க அவர் எங்கு போனார், எங்கு மறைந்தார் என்றே தெரியவில்லை. அவர் மேல் இருந்த ஒளி கூடி இருந்தவர்கள் கண்ணை பரிக்க, அய்யா, யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று உத்தரவிடுகின்றார். அவர்களும் உள்ளிருந்தவாறு அந்த நிகழ்வை அனுபவித்திருக்கின்றனர்.
- தனுஷ்கோடியில் ஒரு வழிபாடு செய்யும் போது, சித்தர் தண்ணீருக்குள் கால் மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தவாறு இருந்திருக்கின்றார். அனைவரும் ஆனந்தமாய் நீராடிக் கொண்டிருக்க, அதனை கவனிக்காமல் போய் விடுகின்றனர். பதறிப் போய், திரு. மணிசாமி சித்தரை தேட, அவர் நீரினுள் அமர்ந்திருப்பதை காண்கின்றார். அவர் நீரினுள் இட்ட பத்மாசனத்தை பிரிக்க இயலாமல், போராடி, பிரித்து, அவரை நீரை விட்டு பெரும் பாடுபட்டு வெளியே கொண்டு வருகின்றனர். ஒரு சமயம் அமர்ந்தவாறே மறைந்து திருவிளையாடல் நிகழ்த்தி இருக்கின்றார். இப்படி சுமார் இருபத்தி அய்ந்து வருடங்கள் சித்தருடன் பின்னிப்பிணைந்து, பல யாத்திரா பயணங்கள் உடன் சென்று, பல நல்ல, அபூர்வமான இறை அனுபவங்கள் கிடைக்கப்பெற்று இருக்கின்றார். சுமார் 1985ல் இருந்து சித்தருடன் நெருங்கி பழகி இருக்கின்றார்.
- திரு. மணிசாமி அவர்கள், இதனை பதிவு செய்த காலம் முதல் இருபத்தி ஓர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இந்த குறிப்பில் சொல்ல காரணம், அந்த கர்வம் துளியும் இன்றி சித்தரிடம் பெற்று தனது இறை அனுபவங்களை, அவரின் பால் மிக்க பணிவுடன் பகிர்ந்து கொண்டதே! பல பெரிய மனிதர்கள் வளர்ந்த பின்னும் குருவிடம் பணிந்து இருப்பதும் இன்றைய காலகட்டத்தில் இறை அனுபவங்களுக்கு ஒத்த அதிசயமாக காண்கின்றேன்.
- ஆரம்ப காலத்தில் ஒரு பெளர்ணமி இரவு, தாள விருச்சத்தில், அம்பாளுக்கு பொங்கல் வைக்கின்றனர். ஓலை அனைத்தும் அம்பாள் வடிவமாய், ஜோதிர்மயமாய் தெரிய, அதற்கு நேர் மேலே, வானத்திலும் ஜோதி பிரகாசித்துக் கொண்டு இருந்திருக்கின்றது. இதனை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், அன்பர் ஒருவர் பார்த்திருக்கின்றார்—தாள விருச்சத்திற்கு மேல், வானத்தில் அனாதியாய் ஜோதி பிரகாசித்து கொண்டு இருப்பதை. இந்த ஜோதி தரிசனத்தை அன்பர் ஒருவர் தூரத்தில் பார்த்து கொண்டு இருக்க, இங்கு, தாள விருச்சத்திற்கு கீழ் சித்தர் கண்கள் மூடி படுத்துக் கொண்டு இருக்கின்றார், அவர் வந்தவுடன், அங்கிருந்தே ஜோதி தரிசனம் கண்டாயா என்று வினவி அனைவரையும் ஆச்சிரியப்பட வைத்திருக்கின்றார்.
- பாப் அய்யா சித்தர் கோவிலில் நாக பிரதிஷ்டை செய்த போது, பட்டப்பகலில் பன்னிரெண்டு மணிக்கு விண்ணில் ஜோதி உருவாகி இருக்கின்றது.
- அய்யா அவர்களின் முதல் மனைவி மற்றும் மாமியார் இருவரும் ஒரே நாள் காலமான போதும், அவரது கண்ணில் ஒரு துளி தண்ணீர் வரவில்லை, மாறாக, எப்பொழுதும் போல ஆனந்தமாய், ஆன்மீகத்தைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்திருக்கின்றார். இவ்வாறு எந்நிலையிலும் பற்றற்று தனது கடமையை மிகவும் நெருடலான சூழ்நிலைகளிலும் முழுமையாக பற்றற்று செய்து வந்திருக்கின்றார்.
- ஒரு சதுரகிரி பயணத்தின் போது, வனத்திற்குள் போக வேண்டும் என்று சொல்லி, பெரிய மகாலிங்கம் செல்கின்றனர், பின்னர் அங்கிருந்து, தவசி பாறை சித்தர் காலங்கிநாதர் குகைக்கு செல்கின்றனர். அங்கும் அன்று இரவு யாகம் நடத்திக் கொண்டு இருந்த போது, ஒரு பெரிய ஜோதி, மலையே மின்னும் அளவிற்கு பெரிய மகாலிங்கம் சன்னிதியிலிருந்து கிளம்பி மறைந்ததை கண்டுள்ளுனர். இந்த தேடலின் நிமித்தும் ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் கோர பசியில் இருந்திருக்கின்றனர். இப்படி சாப்பாடு நீர் இன்றி தேடியவர்களும் உண்டு. இப்படி பசியில் துவண்டு போய் கிடந்தவர்களுகு, சுமார் காலை 5.30 மணியளவில், வனத்தில், மலையின் உச்சியில், சுட சுட இட்லி, வடை, பொங்கலுடன் மூன்று நபர்கள் வந்து உணவு தந்து விட்டு செல்கின்றனர். அதுவும் சுட சுட, அனைவருக்கும் போதும் என்ற அளவிற்கு கொடுத்து அருளுகின்றனர். தங்களுக்கு நீரும், ஆகாரமும், சாதாரண மனிதர்கள் போல வந்து பசியாற தந்து விட்டு சென்றவர்களை பத்தடி தாண்டி பார்க்க இயலவில்லை. வந்த வழியே மறைந்திருக்கின்றார்கள். ஒரு நாள் பட்டினிக்கு பிறகு தேவாமிர்தம் என்று சொல்லலாம்!
- மாவூத்திலிருந்து, பெருமாள் மண்டைக்கு, சென்றவர்கள், திரும்ப மகாலிங்கத்திற்கு வர வழி தெரியாமல் அடர்ந்த வனத்தில் மாட்டிக் கொள்கின்றார்கள், இரண்டு நாட்கள் பக்கம் சாப்பாடு இல்லாமல் மிகவும் தொய்வுற்று இருந்திருக்கின்றனர். மழை பெய்ய ஆரம்பித்து விடுகின்றது. சித்தர் அய்யா பிள்ளை அவர்களுக்கு வயிற்று போக்கால் அவதி பட, நீர் இல்லாமல் இருக்க, வேட்டியை கிழித்து தனது ஆசன வாயிலை சுத்தம் செய்திருக்கின்றார். இருட்ட ஆரம்பிக்க, எங்கு பார்த்தாலும் புலி சப்தமும், யானை சப்தமும் கேட்கின்றதே, இதில் எங்கிருந்த நாம் தப்பிக்க போகின்றோம் என்று திரு. மணிசாமியிடம் தனது அய்யத்தை தெரியப்படுத்திருக்கின்றார். அவர்கள் மாட்டிக் கொண்ட இடத்தை யமனின் காவு என்று விவரிக்கின்றார் திரு. மணிசாமி. இதனிடையில் அவர்களை அழைத்து வந்த ‘மருந்து சாமி’, என்பவர் உடலில் நடுக்கம் அதிகமாகி விடுகின்றது. குளிர்ந்து காற்று. மழை. வனம். இருட்டு. மிருகங்கள் சப்தம், என உயிரை பிடித்து சென்ற தேடல் பயணமாகி விட்டது. பெரும் பள்ளங்கள் ஏறி இறங்க, களைப்பு போட்டி வாட்டி எடுக்க, புதர் மேல் கால் வைத்தால் அது தொடை வரை சொல்ல, என கடுமையான பயணமாகி விடுகின்றது. ஒரு வழியாக, திரு. மணிசாமி அவர்கள், யாரோ அப்பொழுதிட்ட மனித மலத்தை கண்டு, ஆள் நடமாட்டம் இருப்பதை உணர்கின்றார். சப்தம் எழுப்பியவாறு தேடி செல்கின்றார். ஒரு மலைவாசி அவர் சப்தத்தை கேட்டு குசுகுசுப்ப, ஒரு வழியாக அந்த அடர்ந்த வனத்தில், இரவில், தங்க வைக்க, வழிகாட்ட, ஒரு ஆள் கிடைக்கின்றது. அவருக்கு தமிழ் சரியாக வரவில்லை குசுகுசுப்பாக பேச, எப்படியோ புரியவைத்து, ஒரு குகையின் இடுக்கில் ஓய்வெடுக்க, கொஞ்சம் இடம் பெற்றுக் கொள்கின்றனர். கடுமையான பசி, ‘உணவு’ என்று கையேந்த, அந்த மலைவாசியும், கொட்டும் மழையில், நெருப்பு பத்த வைக்க இயலாத சூழ்நிலையிலும் நெருப்பை மூட்டி, காட்டு மிளகாய் கிள்ளிப்போட்டு ஆளுக்கு ஒரு சோற்று உருண்டை தந்து உயிரை காப்பாற்றி விடுகின்றார். அவர்களும் அதனை உண்டு, காலை நன்றாக நீட்டி படுக்க கூட இயலாத நிலையில், மழை நீர் மேலெல்லாம் ஒழுக, கடும் நடுக்கம் தரும் குளிரில், ஆட்டு மூத்திரம் மேல் பட ஒடுங்கி படுத்திருக்கின்றனர். மூத்திரம் வந்தால் கூட எழுந்து நிற்க இயலாத நிலை, அப்படியே போய் கொள்ள வேண்டிய அளவிற்கு சன்னமான இடுக்கு அது. சித்தருக்கு கொஞ்சம் மேலாக படுக்க இடம் கிடைத்திருக்கின்றது. அந்த மலைவாசி குடும்பம் குகையினுள் படுத்துக் கொண்டது. அவர்களிடம் இரண்டு ஆடு, ஒரு நாய் அந்த குகையில் இருந்தது. காலை அவர்களே அழைத்து வந்த சந்தன மகாலிங்க சன்னிதியில் கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். இந்த சம்பவத்தை சித்தர் என்னிடம் பகிர்ந்து கொள்ளும் போது, இரண்டு முக்கியமான சம்பவங்களை சொன்னார். ஒன்று, அவர்களுக்கு உணவு சமைக்கும் போது, சூடான கஞ்சியை கரண்டியை விட்டு கிண்டாமல், கையை விட்டு கிளறினார் என்றும், அந்த கஞ்சியின் சுவை அற்புதமாக இருந்தது என்றும், இது வரை அப்படியொரு சுவையை அவர் அனுபவித்தில்லை என்றும் கூறினார். இரண்டாவதாக, இளம் வயது சித்தர் ஒருவர் (குரு நாதர்) தோன்றி, இந்த அடர்ந்த வனத்தில், ஒரு விஷ ஜந்து, வன விலங்கு உங்கள் பாதையில் வராமல் இது வரை அழைத்து வந்தது நான் தான் என்று கூறி அவர்கள் இருப்பதை வெளிப்படுத்தி கொள்வது.
- இது நந்தியாலில், கருடா நந்திக்கு, வனத்தின் வழியாக சென்ற பயணம். சித்தர் அய்யா பிள்ளையும், திரு. மணிசாமி, இருவர் மட்டுமே செல்லுகின்றார்கள். சுடும் வெயிலில், பாதங்கள் கொப்பளித்து இரத்தம் கொட்ட ஆரம்பித்து விடுகின்றது. இரத்தம் சொட்ட சொட்ட செல்ல, அங்கு செல்லும் வழியில், மூங்கில் வெட்டுபவர்கள், சோற்றை வடித்து காடா துணியில் கட்டி வந்து, ஆளுக்கு ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து உண்ண ஆரம்பிக்கின்றார்கள். ஒவ்வொருவரும், ஒரு படி சோற்றை உண்டு கொண்டிருந்தனர். அந்த அளவு உழைப்பு. அந்த அளவு பசி. இவர்களை உணவு அருந்த அழைத்த போது, சித்தர் வேண்டாம் என்று சொல்லி விடுகின்றார். அந்த அசதியிலும், களைப்பிலும், இலக்கு ஒன்றே குறியாக இருந்திருக்கின்றது. அதற்கு பின் அங்கிருந்து ஸ்ரீ சைலம் செல்கின்றனர். இப்படி தேடல்கள் படு தீவரமாக இருந்திருக்கின்றது.
- கஞ்ச மலையில், இரவு மலை உச்சியில் தங்க நேரிடுகின்றது. நள்ளிரவு நேரம் அனைவரும் குளிரில் நடுங்கி கொண்டு இருக்க, சித்தர் ஒருவர் வெள்ளை வேட்டியில் வந்து, அருகில் இருந்த செடி கொடிகளை உடைத்து நெருப்பூட்டி, சில செய்துகளை சொல்லிவிட்டு, அப்படியே மறைந்திருக்கின்றார்.
- 2004 பக்கம் காசி செல்கின்றனர், ஹரிசந்திர மயானத்திற்கு செல்ல சொல்லி மூவரை தேர்ந்தெடுக்கின்றார் சித்தர் அய்யா பிள்ளை. அதில் திரு, மணிசாமி ஒருவர். சித்தர் சொன்ன விதம், திரு. மணிசாமி வழிகாட்ட, ஆயிரம் பேர் போக, ஆயிரம் பேர் வர, அங்கு தியானம் செய்ய சென்றவர்களை நோக்கி, கங்கை ஆற்றங்கரை பக்கமாக ஒருவர் நடந்து வருகின்றார், வெள்ளை வேட்டி வெள்ளை துண்டுவுடன். கையில் சுருக்குப் பை போல ஒரு முடியில் எதனையோ கட்டிக்கொண்டு, அவர்களை நோக்கி, வானத்தை பார்த்து சிரித்தவாறே வந்திருக்கின்றார். முடியை அவர் நீட்ட, திரு. மணிசாமி அவர்களும் அதனை பெற்று கொள்ள முன் வருகின்றார். அதனை வாங்க விடாமல் கூட இருந்தவர்கள் தட்டி விடுகின்றார்கள். அவரும் அதே போல் சிரித்துக் கொண்டே வந்த வழி திரும்ப செல்கின்றார், நாலடி தாண்டி காற்றுடன் காற்றாக மறைந்து விடுகின்றார். இந்த நிகழ்வு இங்கு ஹரி சந்திர மயானத்தில் நடக்க, அப்பொழுது குமரகுரு சாமி மடத்தில் தங்கியிருந்த சித்தருக்கு அது தெரிந்து விடுகின்றது, இப்படி வாங்காமல் வருகின்றார்களே என்று கோபப்பட்டிருக்கின்றார், அதில் பல இரகசியங்கள் இருக்கின்றதே, இப்படி கைக்கு வந்ததை தட்டி விட்டு வருகின்றார்களே என்ற ஆதங்கப் பட்டிருக்கின்றார்.
- சித்தர் எந்த சமாதி சென்றாலும் அந்த சமாதிக்கு உரிய ஆன்மா சித்தர் மேல் பிரவேசமாகி பேசுவது வழக்கம். இது திருவாரூர் அண்ணன் சமாதியில் அண்ணன் சுவாமிகள், பாப் அய்யா சித்தர் பீடத்தில் பாப் அய்யா சித்தர், கோரக்கர் சித்தர் பீடத்தில் சித்தர் கோரக்கர், திருவண்ணாமலையில் இடைக்காடர், என பல இடங்களிலும் இந்த அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றது.
- காசி கங்கையில், காசி விசுவநாதருக்கு புறக்கரையில், திரு. மணிசாமி பாதத்தை எடுத்து, சித்தர் அவரது சிரசின் மேல் வைத்து தீட்சை தந்துள்ளார். அந்நேரத்தில் ஜீவ காந்த சக்தி தன் மேல் இறங்கியதை திரு. மணிசாமி உணர்ந்துள்ளார். இதேபோல துங்கபத்ரா, அயோத்தி என ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு விதமாக தீட்சை அருளியுள்ளார்.
- 2011 ஆடி கடை வெள்ளி முடித்து, வியாழக்கிழமை அன்று இரவு பதினொரு மணி அளவில், திரு. மணிசாமி சித்தரை சந்திக்கின்றார், அவரை சந்தித்து, பேசும் போது, சித்தர், “டேய் எப்படா எனக்கு நாள் குறிச்சிருக்க?” என்று கேட்க, அவரும் கணித்து பார்த்து, சமாதியாகும் காலம் வந்துவிட்டது என்று கூறியிருக்கின்றார். பத்து நாள் கால அவகாசம் இருப்பதாகவும் அதற்குள் என்ன தெளிவு செய்து கொள்ள வேண்டுமோ அதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனை சொல்லி எட்டாவது நாள் அவர் உயிர் பிரிந்து விடுகின்றது. இப்படி கூட்டை விட்டு உயிர் கிளம்ப போகின்றது என்பதை முன்னதே சித்தரும் அறிந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.