சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (14): திரு. இராமலிங்கம் சு. மற்றும் திரு. காசி இரா. அவர்களின் இறை அனுபவங்கள்.
![]() |
திரு. இராமலிங்கம். சு (Ramalingam) |
நேர்காணல் விவரம்:
இடம்: நாகை, திரு. இராமலிங்கம் அவர்களது வசிப்பிடம்
நாள்: வைகாசி 12, 2018 சனிக்கிழமை [05/26/2018] மதியம்
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]
குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
- திரு. இராமலிங்கம் அவர்கள் சித்தர் அய்யா பிள்ளையை சந்திக்கும் போது அவரது இரு குழந்தைகள், ஒரு பெண், ஒரு ஆண், இருவருக்கும் மூன்று, ஐந்து, வயது இருந்திருக்கும், சித்தர் அவரிடம் முதலில் பேசிய வாக்கியம், “இதோ வந்திருக்கான் மச்சான்” என்பதே! இந்த உறவு முறை திருமணம், இரத்த உறவை பொருத்தில்லை, மாறாக ஆத்ம பந்தத்தை பொருத்து, என்பதை இங்கு பதிவு செய்து கொள்கின்றேன். பட்டறைக்கு வந்த ஒருவர் சொல்ல, சித்தரை பார்க்க வேண்டி நான்கு ஐந்து முறை தேடி சென்றிருப்பார். ஒவ்வொரு முறையும் காலை சென்று மாலை வரை காத்திருந்து, சந்திக்க இயலாமல் ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்துடன் திரும்ப, கடைசி முறை சந்திப்பு கிட்டி இருக்கின்றது. அந்த சந்திப்பின் போது அவர் வாழ்க்கையில் சொல்ல முடியாத, அளவு கடந்த கஷ்டங்கள் அனுபவித்து வந்ததாகவும், சாப்பாட்டிற்கே இல்லாத நிலையில் இருந்ததாகவும், அந்த தருணத்தில், “மச்சான்” என்று அய்யா உறவு பாராட்ட, அது அவருக்கு தீயிட்ட வடுவின் மேல் மயில் இறகால் குளிர்ந்த பச்சை ரசத்தை தடவி விட்டாற் போல உணர்ந்திருக்கின்றார், ஏக நிறைவுடன் இந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டார். பிறகு அங்கே அவருக்கு உணவு பரிமாறி, அவரை பற்றியும் அவரது தொழிலைப் பற்றியும் மேலும் அறிந்து கொண்டு, தன்னை மாதம் ஒரு முறை வந்து பார்க்குமாறு உத்தரவு தருகின்றார். “நல்லாயிருப்பே”, ”கூடவே இருப்பேன்”, “எதற்கும் கவலைப்பட வேண்டாம்” என்று வாக்கும் தருகின்றார். அந்த நிகழ்விலிருந்து, திரு. இராமலிங்கம் அவர்கள், சுமார் இருபது, இருபத்தியந்து வருடங்களாக சித்தருக்கு தொடர்ந்து சேவை செய்து வந்திருக்கின்றார்.
- ஆரம்ப காலத்தில், அதாவது இருபது, இருபத்தியந்து வருடங்களுக்கு முன், பெரும் கஷ்டம் அனுபவிக்க, அதன் பொருட்டு இரவு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவுடன், பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அன்று, தக்க நேரத்தில், சித்தர் யதார்த்தமாக அவரே, அழையாத விருந்தாளியாக வீடு தேடி வருகின்றார். அன்று சித்தர் வரவில்லை எனின் அடுத்த நாள் காலை உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள் என்பதை நன்றி உணர்வுடன் பகிர்ந்து கொள்கின்றார்.
- சித்தரை காணும் முன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தவர். அவருடன் நெருங்கி பழக பழக, ஏன் ஆரம்ப காலங்களில் அவரிடமே பணம் வாங்கி மது அருந்தி இருக்கின்றார், இன்று குடி பழக்கத்தில் இருந்து முழுவதுமாய் விடுதலைப் பெற்று இருக்கின்றார். கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக மது அருந்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- அவரிடம் வருபவர்களுக்கு, தன்னை (சித்தரை) மனதில் வைத்து நீ மண்ணை எடுத்து தந்தாலும் குணம் பெறுவர் என்ற வாக்கின் படி, திரு. இராமலிங்கம் அவர்களும், விஷ கடி, தீய சக்தி உபாதைகள், உடல் நல குறைவு, என்று வருபவர்களுக்கு, விபூதி தந்திருக்கின்றார். அவர்களும் அதனை வாங்கிக் கொண்டு நலம் பெற்றிருக்கின்றனர் என்ற செய்தியையும் இங்கு பதிவு செய்துள்ளார்.
- சுமார் பதினெட்டு வருடங்கள் சபரி மலை பயணம் முடித்து, குரு சாமி என்று பட்டமும் பெற்றுவிட்டாயே… மகர ஜோதி தரிசனம் கண்டுள்ளாயா? என்று சித்தர் வினவ, தான் பார்த்ததில்லை என்று திரு. இராமலிங்கம் பதில் அளித்திருக்கின்றார். அதனோடு நிறுத்தாமல், எனக்கு இங்கேயே ஜோதி தரிசனம் காட்டினால் தான், நான் மலையேறுவேன் என்று முரண்டு பிடித்துள்ளார். இங்கேயே பார்க்கலாமா என்று கேட்க, சித்தரும் பார்க்கலாம் என்று ஆமோதித்திருக்கின்றார். அதன்படியே சித்தரும் அவரை பூஜை அறை அழைத்து சென்று, அவரை முன்னிலைப்படுத்தி வழிபாட்டை ஆரம்பிக்கின்றார், அன்று அதன் நிகழ்வில் நான் பங்கேற்றதால் எனது அனுபவத்தையும் இதனுடன் சாட்சியாக பதிவு செய்து கொள்கின்றேன். திரு. இராமலிங்கம் அவர்களை கண்ணாடி முன் நின்று வழிபட சொல்கின்றார். அனைவரும் சப்தம் எழுப்பி வழிபாடு செய்கின்றோம், நான் அவருக்கு பின் வலது பக்கம் நிற்க, சித்தர் அய்யா பிள்ளை அவருக்கு பின் இடது பக்கம் நின்று கொண்டு இருந்தார். இப்படி வழிபாடு நடந்து கொண்டிருக்க, இடையில் திடீரென்று, திரு. இராமலிங்கத்தை பார்த்தாயா என்று வினவ, அவர் இல்லை என்று கூற, சித்தர் அவரது முதுகு கீழ் தண்டை தீண்டுகிறார், பாதத்தால் தீண்டினாரா இல்லை கைவிரலால் தீண்டினாரா என்று எனக்கு ஞாபகமில்லை, திரு. இராமலிங்கத்தின் கூற்றின் படி, சித்தர் காலால் அழுத்தினார் என்று அறிய வருகின்றோம். அந்த தீண்டலின் பிறகு, அவருக்கு ஒளி தரிசனம் அகத்தினுள் கிடைத்திருக்கின்றது. சுமார் பத்து நிமிடங்கள் அதே நிலையில் இருந்ததாக சாட்சி அருளியுள்ளார். அதன் பின்னரே முடி கட்டுவதற்கு ஆயுத்தமாகின்றார். அதுவே முதல் முறை, அவர் அகத்தினுள் ஒளி தரிசனம் காண்பது. இந்த மாதிரி பல அனுபவங்கள் சித்தரிடம் நேரிடையாக அனுபவித்துள்ளதாக பதிவு செய்துள்ளார்.
- தனது பெண்ணின் திருமணத்தின் போது ஒரு லட்சத்து அறுபதனாயிரம் பணம் கிடைக்கப்பெற்று திருமணத்தை நல்ல விதமாக நடத்தியும் இருக்கின்றார், அவ்வளவு பணம் எப்படி கிடைத்தது, என்று புரியவுமில்லை, அது கடனாக தரப்படவில்லை என்பதே இதில் குறிப்பிடத்தக்கது. சித்தர் கொடுத்த வாக்கின் படி காசே இல்லாமல் ஆரம்பித்தும், திருமணத்தை நல்லபடி முடித்து வைத்திருக்கின்றார்.
- ஹோமம் முடிந்த கையுடன் நாகவிளாகத்தில் திருக்குரான் ஓத, திரு. இராமலிங்கம் அவர்கள், அங்கிருந்து கிளம்பி விடுகின்றார், வீட்டிற்கு வந்த சற்று ஓய்வு எடுக்க, சயனத்தில், அய்யா வந்து முல்லை பூவும், பூந்தியும் தருகின்றார், அந்த உணர்வு கிடைத்து விழித்த உடனே கிளம்பி நாகவிளாகம் வந்து விடுகின்றார். தாள விருச்சத்திலும் இப்படி பல இறை அனுபவங்கள் கிடைத்திருக்கின்றது.
திரு. காசி. இரா (Kasi) - திரு. இராமலிங்கம் அவர்களின் மகன், திரு. காசி அவர்கள் தனது ஆரம்ப வாழ்க்கைக்கு, செய்தி சொல்லி வழி நடத்தியுள்ளார்கள். சித்தர் பாடும் போது, மெய் மறந்த நிலைகளை அனுபவித்துள்ளார், மேலும் அந்நிலையில் அவர்களுக்கு கை கால் அமுத்தி விடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கின்றார்.
குறிப்பு: நேர்காணல் செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.
No comments:
Post a Comment