சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (11): திரு. டேவிட் மீ. அவர்களின் இறை அனுபவங்கள்.
![]() |
டேவிட். மீ. (David. Mi) |
நேர்காணல் விவரம்:
இடம்: நாகை, திரு. ஆனந்த்/ராஜா அவர்களின் வசிப்பிடம்.
நாள்: வைகாசி 11, 2018 வெள்ளிக்கிழமை [05/26/2018] மதியம்
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]
குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
- சித்தர் அய்யா பிள்ளை அவர்கனின் சயனத்தில் கிடைத்த உந்துதலின் காரணமாக, சித்தர் காகபுஜண்டர் நாடியை தேடி கொண்டு இருந்த பருவத்தில், அன்பர் ஒருவர் மூலமாக திரு. அருள் செல்வன் டேவிட்டை சந்திக்க நேரிடுகின்றது, திரு. டேவிட் அவர்களும், அக்காலகட்டத்தில் தேடலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல சாமியார்களை அதற்கு முன் சந்தித்து விட்டு இவரை மட்டும் பார்த்து என்னாக போகின்றது என்ற யதார்த்த மனநிலையில், முதல் சந்திப்பு, நாகவிளாகத்தில் நிகழ்கின்றது. அந்த சந்திப்பு நாடி பார்க்க அழைத்து செல்வதற்காக என்றாலும் அந்த முறை அது சாத்தியப்படவில்லை.
- இரண்டாவது முறை, இதே பயணத்தின் பொருட்டு அழைத்து செல்ல முற்படும் போது, சித்தர் அவர்களை, தேவூரில் அன்பர் ஒருவர் வீட்டில் சந்திக்க நேரிடுகின்றது. அப்பொழுது அவர், திரு. டேவிட் அவர்களை என்ன நட்சத்திரம், என்ன ராசி என்று வினவுகின்றார். எப்பொழுதும் தன் ஜாதகத்தை தன் கையில் வைத்து இருந்த திரு டேவிட் அவர்கள், அய்யா ராசி, நட்சத்திரம், கேட்டதும் ஜாதகத்தை எடுத்து நீட்டுகின்றார். சித்தரும் ஜாதகத்தை வாங்கிக் கொண்டு, நான் ஒரு பாட்டு பாடுகின்றேன் கேட்கின்றாயா என்று கேட்டுள்ளார்? அதற்கு திரு. டேவிட் அவர்களும் ஆமோதிக்க, சித்தர் சிவபுராணம் பாடுகின்றார். ஆரம்ப காலத்தில், மாரியம்மன் தாலாட்டு, சிவ புராணம் பாடுவது அவரது வழக்கம். சித்தர் சிவ புராணம் பாட பாட உடனிருந்த அன்பருக்கு உடல் ரீதியான ஒரு மாற்றம், அதாவது ‘முதிய தோற்றம்’ ஏற்படுகின்றது.
- சித்தர் சிவபுராணம் பாடிய பின், திரு. டேவிட் அவர்களின் ஏட்டை, எடுத்துக் கொண்டு, தனி ஒரு இடத்தில் போய் படுத்துக் கொள்கின்றார். நிலைமாறிய அன்பர் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கின்றார், அவர் திரு. டேவிட் அவர்களிடம் அவர்கள் வீடு எப்படி இருக்கும், அவர்கள் வீட்டிற்கு அருகாமையில் என்ன இருக்கம் என்று செய்தி சொல்லுகின்றார். கோவில், கோவில் பக்கத்தில் குளம், குளத்திற்கு எதிராக முதல் வீடு, பழைய காலத்து இரண்டு முற்றம் உள்ள ஓட்டு வீடு, என்று ஞானத்தில் உணர்ந்த பொருள்தமையினை அந்த அன்பரும் திரு. டேவிட் அவர்களிடம் பகிர்ந்து கொள்கின்றார். அதனை தொடர்ந்து, திருமணம் இல்லை, இந்த வயதில் செல்வ செழிப்பு எல்லாம் கூடும் என்று சொல்லிக் கொண்டு வருகின்றார்… இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இங்கு இவர் பேசுவதை, கேட்க முடியாத இடத்தில், வெளியில் சித்தர் அய்யா பிள்ளை இருந்திருக்கின்றார், இருந்தும், இங்கு உள்ளே என்ன சொல்லப்பட்டதோ, அதனையே சித்தர் அய்யா பிள்ளையும் திரு. டேவிட் அவர்கள் ஏட்டில் வயது வாரியாக, எழுதிக் கொடுத்திருக்கின்றார். 2002 இந்த நாள் நேரத்துடன் யார் யார் விவாதித்தது என்று கையெழுத்து இட்டும் தந்துள்ளார்கள். அவர்கள் எழுதி தந்த விஷயங்கள் எல்லாம் இது வரை திரு. டேவிட் அவர்களுக்கு நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- அதற்கு பிறகு, திரு. டேவிட் அவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி நாகவிளாகம் சென்று வருவது வழக்கம், அதனால் என்னவோ அவருக்கு எந்த ஏமாற்றமும் இது வரை இருந்ததில்லை. மேலும் அங்கு சென்றால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நல்ல உத்வேகம் கிடைக்கப்பெறுகின்றது என்பது அவரது கூற்று.
- 2003ல், ஒரு குழந்தைக்கு புத்தகம் வாங்க சென்னை ஹிக்கின் பாதம்ஸ் செல்கின்றனர், அங்கு தான், ‘சித்தர் பாடல்கள்’ ’குரு யார்’, என்ற புத்தகத்தை எடுத்து தருகின்றனர், சித்தரும் அதனை பெற்றுக்கொண்டு யார் யார் வாங்கி கொடுத்தார்களோ அவர்கள் பெயரை எழுதி தருமாறு கேட்டுக் கொள்கின்றார், அவர்களும் அதன் படி பெயர்களை எழுதி புத்தகத்தை தருகின்றனர். பின்னர், அவருக்கு இதெல்லாம் எனக்கு படிக்க தெரியாது, நாலு நாலு வரியாக படித்து சொல்லுமாறு கேட்டுக்கொள்ள அவர்கள் படித்து சொல்ல இவர் அதனை உள்வாங்கி பாடலாக பாடுவது வழக்கம். இதில் காரில் பயணம் செய்யும் போது நடக்கும், இந்த பரஸ்பரம் திரு. டேவிட் அவர்களுக்கு சித்தருடன் நடந்த சம்பாஷனைகளில் மிகவும் பிடித்தமையில் ஒன்று. அவை அவருக்கு மகிழ்ச்சி கொடுத்த நாழிகைகள்.
- அறுவடை முடிந்த சில காலங்களில், இரவு நேரத்தில், சுமார் 7.30—9.00 மணியளவில், வயலில் தார்ப்பாய் போட்டு, வெட்டவெளியில் சத்சங்கம் அரங்கேற்றம் செய்துள்ளனர்—சித்தர் கதை சொல்லுவதும், இந்த நட்சத்திரத்தை பாரு என்பதும், அதைப்பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்வதும், அதனை பார்க்கும் போது ஒரு வித இனம் புரியாத மகிழ்ச்சி கிடைப்பதுமாக அந்த அரங்கேற்றங்கள் நடந்தேறியுள்ளன.
- அய்யா, திரு. டேவிட், மற்றும் திரு. டேவிட் அவர்களது நண்பர் ஒருவரும், மகாபலிபுரத்தில், திரு. மகாபலிபுரம் ரவி அவர்களது இல்லத்திற்கு செல்கின்றனர். அங்கு, திரு. மகாபலிபுரம் ரவி அவர்கள், ஜெர்மனிய அன்பர் போலி, என்பவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சித்தரையும் அவருடன் வந்தவர்களையும், அங்கு அழைத்து செல்கின்றார். திரு. போலி அவர்களுக்கு காலில் கட்டியிருந்திருக்கின்றது. அங்கு சென்ற சித்தர், தரையில் அமர்ந்து கொண்டு, காலை நீட்ட சொல்கின்றார். திரு. போலி அவர்களும் காலை நீட்ட சித்தர் அந்த கட்டியை தன் விரலால் தொடுகின்றார். இதனை திரு. டேவிட் பார்க்கும் போது, திரு. போலி அவர்களின் கட்டியிலிருந்து, வெள்ளையாக ஏதோ ஒரு நூல் வெளியாவதை காண்கின்றார், இதனை செய்யும் தருவாயில், இடையில், சித்தரிடம் சொல்ல, உனக்கு தெரிகின்றது அல்லவா, நீயும் வைத்து பார், உன்னால் அதனை உணர முடியும் என்று கூறுகின்றார். அவரும் தொட, அந்த கட்டியிலிருந்து, ஊசி குத்துவதை போல ஏதே ஒன்று வெளியாவதையும், அதன் வலியையும் உணர்கின்றார். மாலை 6.00 மணி அளவில் இந்த சம்பவம் நிகழ, அடுத்த நாள், திரு. போலி அவர்களிடம் அவர் உடல் நலத்தைப்பற்றி வினவுகின்றனர். அவரும் வலி குறைந்திருக்கின்றது என்று சொல்லியிருக்கின்றார். இந்த அனுபவமே சித்தர் அய்யா பிள்ளையிடம் சக்தியுள்ளது என்பதை திரு. டேவிடுக்கு உணர்த்த செய்து இருக்கின்றது. மேலும் அவர் அந்த கட்டியிலிருந்து, ‘சுருக்’, ’சுருக்’ என்று குத்திய வலியை உணர்ந்த பின்பு தான், இது உண்மையா, இல்லை மாயையா என்று வினவ ஆரம்பித்திருக்கின்றார், அந்த சம்பவத்தை ஆய்வு செய்திருக்கின்றார், பிறகு அதனை சித்தரிடம் வினவ, சித்தரும் உன் சரீரத்தில் அந்த தன்மையுண்டு என்று மொழிந்திருக்கின்றார்.
- ஒரு ஆடி கடை வெள்ளி சமயம், ஹோமம் முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு, அன்பர்கள் கூடி இருக்க, திரு. டேவிட் அவர்கள் ஒரு அய்யத்தை எழுப்புகின்றார்: அருள் நிலையில் ஆட்கொள்ளப்பட்டு நடந்து வரும் போது ஏன் எலுமிச்சம் கனியை பாதத்திற்கு கீழ் வைத்து, அதனை மிதித்து நடந்து வருகின்றீர்—அப்படி வைத்து மிதித்தால் தான் உங்களால் நடக்க இயலுமா? அது உங்களுக்கு மட்டும் தானா? சித்தரும், இந்த கேள்விகளுக்கு பதிலாக அவரையே அதனை அனுபவிக்க சொல்லுகின்றார்: அமர சொல்லுகின்றார். பாடலை கேட்க சொல்கின்றார். பாடிய பிறகு காலை பிரிக்க சொல்லுகின்றார். திரு. டேவிட் அவர்களால் பிரிக்க இயலவில்லை. சரி தூக்குங்கள் என்கின்றார். இரு பக்கமும், இரு அன்பர்கள் தூக்குகின்றார்கள். தூக்கி காலை நிமிர்த்த பார்க்கின்றார்கள். திரு. டேவிட் அவர்களால் நடக்க இயலவில்லை. பிறகு இரண்டு பாதங்களுக்கு கீழும் எலுமிச்சம் கனியை வைக்கின்றார்கள். பிறகே, அவரால் அதனை அழுத்தி, உடைத்து நகர இயலுகின்றது. இதற்கு சித்தர் சொன்ன காரணம் பின் வருமாறு: பூமியில் இருக்கம் சக்தி, அந்நிலையில் தன்னை இழுத்துக்கொள்வதால், அந்த தடையை நீக்க, எலுமிச்சம் கனியை பலியாக வாங்கிக் கொண்டு சந்தோஷமாக முன் தள்ளி விடுகின்றது. காலால் அந்த எலுமிச்சம் பழத்தை அழுத்தி உடைத்தால் ஒழிய அது உன்னை நகர விடாது.
- சில சமயம் அவரது உடம்பில் இருந்து பேசுவது அவரா, இல்லை வெளியில் இருந்து இறங்கிய சக்தியா என்பதனை அறிந்து கொள்ள சில சோதனைகளை பலமுறை செய்துள்ளனர். பொதுவாக அவர் பின் ஒரு பக்கம் அமர்ந்திருக்கும் அவர், சித்தர் ஆட்கொண்டு பேசும் போது, கிள்ளி பார்ப்பது, ஊக்கு வைத்து குத்திப்பார்ப்பது என சோதித்தும் உள்ளார். அத்தருணங்களில், அவரது உணர்வு நிலைக்கு அப்பாற்பட்டு இருப்பதையும் கண்டு அறிந்து, அவர் மூலம், அந்த கூட்டினுள் இருந்து பேசுவது வெளியே இருந்து இறங்கிய ஒரு அபூர்வமான சக்தி என்று அறிந்து உணர்ந்து இருக்கின்றார்.
- அந்த இறங்கும் சக்தி எதிரில் இருப்பவருக்கு ஏற்றாற் போல தான் பதில் சொல்லும் என்றும் மொழிந்திருக்கின்றார். சில சமயம், அது ஏமாற்றும் விதமாகவும் சொல்வதையும் உணர்ந்திருக்கின்றார். மன்னிக்கவும், இந்த வாஞ்சைக்கு, ஒரு ஆசிரியராக என்னால் பதில் செல்ல இயலவில்லை. திரு. டேவிட் கூறுவது போல, முதல் முறை பார்க்கும் போது என்ன விஷயம் பேசுகின்றதோ அது மட்டும் தான் விஷயம், அது மட்டும் தான் நமக்கு என்று கூறுகின்றார். அவருக்கு சொன்னதில், அதிகமாகவே நடந்துள்ளது என்றும், அதில் எதுவும் தவறவில்லை என்றும், அவர் சொன்னதில் இருந்து எதுவும் மாறவில்லை என்றும் கூறியுள்ளார். அவர் சொன்னது போல கோவில் கும்பாபிஷேகமும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அன்பர் ஒருவர் தன் மனைவியின் உடல் நிலை சரியில்லை என்று வந்தபோது, இனி செலவு செய்ய வேண்டாம், வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று முடிவை முன்னதாகவே சொல்லிவிடுகின்றார். அதற்கு பிறகு, சித்தர் அய்யா பிள்ளையும், இருமுறை பக்கம், அவர்களை சென்று பார்த்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
- திரு. டேவிட் அவர்கள், திருவீதி உலா செல்லும் போது, கால்கள் பின்னி, மயக்க நிலையடையும் போது, தன்னைத்தானே அதிலிருந்து விடுவித்துக் கொள்வார், இதனால், இதுவரை, மெய்மறந்து ஆடியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
- தீர்த்தமலையில் உடல் நிலை சரியில்லாத ஒரு அன்பருக்கு வீட்டுக்கு சென்று விட்டு, அதன் பிறகு இன்னும் ஒரு அன்பர் வீட்டில் தங்குகின்றனர். அங்கு, சாமியார் வந்திருக்கின்றார் என்று அனைவரும் விபூதி பூச வருகின்றனர். அப்பொழுது ஒரு அம்மையார் வரும் போது நடுக்கம் ஏற்படுகின்றது, நடுக்கம் வந்தவுடன் விபூதியை கையில் கொடுக்க செல்கின்றார், அது அவர்கள் கையில் வாங்க மறுத்து பூசி விட சொல்கின்றார்கள். அதற்கு சித்தர் அருகில் இருந்த அன்பரக்ளை சப்தம் எழுப்ப சொல்லுகின்றார், அவர்களும் சப்தம் எழுப்புகின்றனர். முட்டிப்போட்டு அமர்ந்த நிலையிலேயே அந்த அம்மையார் ஆட ஆரம்பிக்கின்றார். நீ யார் என்று அய்யா வினவ ஆட்கொண்ட விஷயம் பேசவில்லை, சரியென்று ஒரு எலுமிச்சம் கனியை இரண்டாக பிளந்து வாயினுற் தள்ளுகின்றார், அதன் பிறகு அந்த அம்மையாரை ஆட்கொண்ட சக்தி பேச ஆரம்பிக்கின்றது. ஆட்கொள்ளப்பட்ட பெண்ணுடன் வெகு நாட்களாக இருப்பதாகவும், அந்த பெண்ணை அது மூன்று முறை அழைத்து செல்ல முயற்சித்ததாகவும், அதன் குழந்தையை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கவும், ஒரே குழந்தையாக இருப்பதாலும் விட்டுவிட்டேன் என்று சொல்லியிருக்கின்றது. பிறகு அது யார், என்ன என்று வினவ, அது தன்னைப்பற்றியும் சொல்லி இருக்கின்றது. ஒரு நாள் இரவு முழுவதும் அதனை வழியனுப்பி வைக்க பார்த்திருக்கின்றனர். இயலவில்லை. அடுத்த நாள், அந்த ஊர் மக்கள், தங்கள் கிராமத்தில் எருக்கங்குச்சி வைத்து அடிப்பார்கள் என்று சொல்லி எருக்கங்குச்சி எடுத்து வர, அதனை சித்தர் புறம்தள்ளி விட்டு, அடிப்பது எல்லாம் எதுவும் இல்லை, சப்தம் எழுப்பி பார்ப்போம், என்று திரும்பவும் முயற்சி செய்து இருக்கின்றனர். அவர்கள் அங்கிருந்து கிளம்பும் வரை அந்த கூட்டை பிடித்திருந்த ஆன்மா விடவில்லை. இவர்களும் கிளம்பி விட்டனர். பின் அந்த ஊர் மக்கள் எங்கோ அழைத்து சென்று விலக்கியுள்ளனர் என்ற செய்தி தெரியவந்திருக்கின்றது.
- ஒரு முறை, வெளியிடத்தில் ஒரு ஆன்மீகவாதியின் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்திருக்கின்றார், அங்கு ஒரு ருத்திராட்சம் வாங்கி அணிந்து கொண்டு இருக்கின்றார். அதுனுடன் சித்தர் அய்யா பிள்ளையை காண வந்திருக்கின்றார். அவரும் எங்கு இத்தனை நாட்கள் ஆளை காணவில்லை என்று வினவ, அவரும் நடந்ததை சொல்லியிருக்கின்றார். அதற்கு சித்தர், ஒரு தகாத வார்த்தையை சொல்லி, “நாங்க சும்மா, ‘எல்லாம் இருக்குனு’ சொல்லிக்கொடுத்தா ஏத்துக்க மாட்டிங்க காசு கொடுத்து தான் கத்துக்குவிங்க, உனக்கெல்லாம் காசு வாங்கிட்டு தான் கத்து தரனுமுடா”, என்று சொல்லிவிட்டு, “எதுக்கு கழுத்துல மாட்டிருக்க உனக்கு இது தேவையே இல்லாத விஷயமே” என்று சொல்லியிருக்கின்றார். அவரும் “அங்கு வித்தது அதான் வாங்கி மாட்டிருக்கேன்” என்று சொல்லியிருக்கின்றார். பிறகு அதனுடன், ஆற்றில் சென்று குளிக்கும் போது, அந்த ஆற்றோடு அந்த மாலையும் அடித்து சென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- எயிட்ஸ் நோயால் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டது என்று ஒரு அன்பரை திரு. டேவிட் அவர்கள் அழைத்து வருகின்றார். அவரை கண்கள் மூட சொல்லிவிட்டு சித்தர் ஒரு பாடல் பாடுகின்றார், பாடிய பின், அவரின் வீட்டிலிருந்து யாராவது ஒருவரை அழைத்து வருமாறு கூறுகின்றார். பின்னர் அவருக்கு உணவு அளிக்கின்றனர், அவர் வேண்டாம் என்று சொல்ல, சித்தர் இது உனக்கு உணவல்ல மருந்து என்று சொல்லி உண்ணுமாறு கட்டளையிட்டிருக்கின்றார். அவரும் உணவு அருந்துகின்றார். பிறகு ஒரு நாள், சொன்னது போல, அவர் தாயாருடன் வருகின்றார், சிறிது நேரம் நலம் விசாரித்துவிட்டு, சித்தர் செய்தி சொல்ல ஆரம்பிக்கின்றார், இது உனக்கு வியாதியல்ல, பெண் வழியாக, கடற்கரை ஓரத்தில் உள்ள ஒரு கோவிலில் செய்திருக்கின்றனர், நீ அங்கு சென்று வந்தால் உனக்கு விலகிவிடும் என்று கூறுகின்றார். அதாவது வெட்டுடையாள் காளி கோவிலுக்கும், அருகில் உள்ள சிங்கமாகாளி கோவிலுக்கும் சென்று வர சொல்லுகின்றார். முதலில் சிங்கமாகாளி கோவிலுக்கு சென்றுவிட்டு, பிறகு வெட்டுடையாள் காளி கோவிலுக்கு செல்லுமாறு உத்தரவிடுகின்றார். வெட்டுடையாள் காளி கோவிலுக்கு சென்று வேறு எதுவும் செய்ய வேண்டாம், யாராவது ஏதேனும் விசாரித்தால், எதுவும் சொல்ல வேண்டாம், குளத்தில் குளித்துவிட்டு, ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, இவ்வாறு சங்கல்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றார், “என்னை பிடித்திருக்கின்ற விஷயங்கள் என்னால் இனி மேல் தூக்கி சுமக்க முடியாது, நீ தூர விலகிக்கோ” என்று! அந்த சம்பவத்திற்கு பிறகு அவர் இரண்டு வருடம் நலமாக இருந்திருக்கின்றார், திரும்பவும் அதேபோல் செய்ய அவர் இறந்து விடுகின்றார்.
- சில சமயம் இரவு 2 மணி அளவில் வீட்டு திண்ணையில் படுத்திருக்கும் போது சப்தங்கள் கேட்கும், அதனை உணரவும் வைத்திருக்கின்றார், இப்படி ஒரு முறை இரவு இஸ்லாமிய மந்திரம் ஓதும் சப்தம் சித்தருக்கு கேட்டு இருக்கின்றது, அருகில் படுத்திருந்தவர்களை உங்களுக்கு கேட்கின்றதா என்று கேட்டு இருக்கின்றார், பதிலுக்கு, “எங்குளுக்கு எங்க கேக்குது?” என்பது போல கூறுவார்கள், சித்தர் அவரை தட்டி விட்டு கேட்கின்றதா என்று வினவ அவர்களும் அந்த சப்தத்தை கேட்டு அனுபவித்திருக்கின்றனர்.
- சித்தர் குணப்படுத்திய பல நிகழ்வுகளில் திரு. டேவிட் அவர்கள் சான்றாக இருந்திருக்கின்றார், ஒரு சில நிகழ்வுகளில் பங்கேற்றும் இருக்கின்றார்.
- தீர்த்தமலை பயணத்தின் போது, அன்பர் ஒருவர் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கு, அவரை அடிவாரத்தில் அமர வைத்துவிட்டு மலையேறுகின்றனர். அந்த நபரால் ஏற முடியவில்லையெனினும், எப்படியோ முயற்சி செய்து, அதுவும் உட்கார்ந்து ஏறாமல் நேராக ஏறி வந்ததை நினைவு கூறுகின்றார்.
- தாள விருச்சத்தில், மின்னல் மாதிரி ஒளி கீற்று கிடைக்கப்பெற்று இருக்கின்றது.
- திரு. டேவிட் அவர்களின் கூற்றின் படி, உடல் பிணியை நீக்குவதில் சித்தர் அய்யா பிள்ளை மிகவும் கைதேர்ந்தவர். அதேபோல் நயந்து ஒருவர் வருகையில் வாக்கு பலித்தமும் சொன்னது சொன்னதுபோல நடந்திருக்கின்றது.
No comments:
Post a Comment