Search This Blog

Tuesday, July 10, 2018

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (12): திரு. ஆனந்த் பா. மற்றும் திருமதி. ஆனந்த் அவர்களின் இறை அனுபவங்கள்.

சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (12): திரு. ஆனந்த் பா. மற்றும் திருமதி. ஆனந்த் அவர்களின் இறை அனுபவங்கள்.

திரு. ஆனந்த். (Anand. B)

நேர்காணல் விவரம்:

இடம்: நாகை, திரு. ஆனந்த்/ராஜா அவர்களின் வசிப்பிடம்.
நாள்: வைகாசி 11, 2018 வெள்ளிக்கிழமை [05/26/2018] மதியம்
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]

குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:

  1. 1999 ஆம் ஆண்டு, சுமார் ஆறு மாதங்கள் போராட்டத்திற்கு பிறகு, இரு நண்பர்கள் மூலம், சித்தர் அய்யா பிள்ளையை, காரைக்காலில் அன்பர் ஒருவர் வீட்டில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றார். அழைத்து சென்றவர் இருவர் அருகில் அமர, திரு. ஆனந்த் அவர்கள் கடைசி வரிசையில் அமருகின்றார். அனைவருக்கும் கடலை மிட்டாய் தரப்படுகின்றது, அதனை அனைவரும் உண்டும், சித்தர் பேசுவதை கேட்டவாறும் இருக்கின்றனர். திரு. ஆனந்த் அவர்களுக்கும் மட்டும் அதனை உண்ண மனம் வரவில்லை, வாயில் வைப்பதும், எடுப்பதும், எங்கு உண்டால் கவனக்குறைவு ஏற்பட்டு விடுமோ என்ற அய்யத்துடன் சித்தர் சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டு இருந்திருக்கின்றார். இப்படியே இரண்டு மணி நேரம் சென்றிருக்கும், அவருக்கு முன் பார்க்க இருந்த அனைவரும் பார்த்துவிட்டு செல்ல, அவருக்கான வாய்ப்பு வரும் போது, வாங்கிய கடலை மிட்டாயை உண்ணாமல், அதனை உள்ளங்கையில் வைத்தவாறு சித்தர் அருகே செல்கின்றார். சித்தர் கையில் என்னவென்று கேட்க? அவர் கடலை மிட்டாய் என்று பதில் சொல்ல, சித்தர், அனைவரும் உண்டுவிட்டனர், நீ ஏன் உண்ணவில்லை என்று வினவுகின்றார், அவரும் காரணத்தை சொல்லுகின்றார். சித்தர், “ஏன்? என்னாச்சு உனக்கு?” என்று வினவ, திரு. ஆனந்த் அவர்களும் தான் சித்தரை காண வந்ததாகவும், படித்து முடித்து வேலையில்லாமல் இருப்பதாகவும், தன் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வந்ததாகவும் பதில் அளிக்கின்றார். சித்தர் அதனை அமோதித்து, அவரை கடலை மிட்டாயை உண்ணுமாறு சொல்லிவிட்டு, பிறகு கண்களையும் மூடுமாறு சொல்லுகின்றார். திரு. ஆனந்த் அவர்கள் கண்களை மூடி அமர சித்தர் ஒரு பாடலின் இரண்டு, மூன்று வரிகள் மட்டும் பாடுகின்றார். அந்த பருவத்தில் அவர் சிவபுராணம், மாரியம்மன் தாலாட்டு பாடுவது வழக்கம். பாடிய பிறகு இப்பொழுது கண்களை திறந்து பாரு என்கின்றார், திரு. ஆனந்த் அவர்களும் பார்க்க, அந்த நேரம், சித்தர் மீசையை கீழ்நோக்கி தடவி விட, சித்தரின் மீசையை பார்க்க, திரு, ஆனந்த் அவர்களுக்கு சித்தரின் முகம் சிம்ம முகமாக தெரிகின்றது, அந்த முகத்தை தொடர்ந்து பார்க்கமுடியாமல் கண்களை திரு. ஆனந்த் முடிக் கொள்கின்றார். நினைவு திரும்பி, கண் விழித்து பார்க்க, திரு. ஆனந்த் அவர்கள் வீட்டு முற்றத்தில் சித்தரின் காலடியில் கிடக்கின்றார். அந்நிலையில் அவரால் பேச முடியவில்லை, காரணம் தன் வாயில் ஏதோ ஒரு பொருள் இருப்பதை உணர்கின்றார். அதை கவனித்தவாறு சித்தர் அவர் பயத்தை போக்கும் வண்ணம், ஆமோதித்தவாறு, வாயில் இருப்பதை உண்டுவிட்டு எழுமாறு கூறுகின்றார். கடித்த பின்பே அது எலுமிச்சம் கனி என்பதை திரு. ஆனந்த் அவர்கள் உணர்கின்றார். கனியை உண்ட பின், ஆடைகளை களைந்துவிட்டு, குளித்துவிட்டு வருமாறு சித்தர் கூறுகின்றார். இவரும் அவ்வாறு செய்து விட்டு வர, அங்கு, அனைவரும் உணவு உண்ண தயாராக இருக்கின்றனர். இவரையும் அழைத்து செல்கின்றனர். சித்தர் அய்யாபிள்ளையுடன் சேர்த்து ஐந்து ஆறு பேர் அன்று அந்த இல்லத்தில் உணவு அருந்துகின்றனர். அன்று, திரு. ஆனந்த் அவர்கள், அவர்கள் ஐந்து பேர் உண்ட உணவை உண்கின்றார். அந்த இல்லத்தாரும் இரண்டு முறை சோறு வடித்து கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு முடிந்த பின், சித்தர், திரு. ஆனந்த் அவர்களிடம், தன்னை சந்திக்க வந்துவிட்டாய் இந்த நிகழ்வும் நடந்தேறியது எனக்காக நீ என்ன செய்ய போகின்றாய் என்று வினவுகின்றார். அவரும் தன் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்று சொல்ல, சித்தரும் தனக்காக பால் குடம் எடுக்குமாறு கூறுகின்றார். திரு. ஆனந்த் அவர்களும் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றார்.
  2. இரண்டு மூன்று மாதங்கள் கழித்து சொன்னவாறு பால் குடம் எடுக்க இராதாமங்கலம் செல்கின்றார். சித்தரும் பால் குடத்தை தூக்கி வைக்கின்றார். விளையாட்டு தனமான நிலை என்றாலும், அவ்வப்பொழுது கண்கள் மூடி திறக்க அதே நிலையில் வந்து சேருகின்றார். சித்தரே பால் குடத்தையும் இறக்கி வைக்கின்றார். பிறகு மக்கள் அனைவரும் அபிஷேகம் பார்க்க அமர்ந்திருக்க, சித்தர் அம்பாள் கோவில் படியில் அமர்ந்திருக்க, திரு. ஆனந்த் அவர்கள் பலிபீடத்திற்கு முன் அமர்ந்திருக்கின்றார். கோவில் குருக்கள் அம்பாள் விக்ரகத்திற்கு அபிஷேகம் செய்து கொண்டு இருக்கின்றார். அப்பொழுது, சித்தர் பால் குடத்தை எடுத்து, கீறி, உள்ளே தரும் போது, திரு. ஆனந்த் அவர்கள் மனதில் ஒரு எண்ணம் எழுகின்றது, “பாலை கட்டி விட்டது நீ, தூக்கி விட்டதும் நீ, அப்புறம் எதுக்கு அவனை கொடுத்து ஊத்த சொல்லுற நீயே ஊத்த வேண்டியது தானே?” என்று. இதற்கு பதிலாக, பூஜை முடிந்து, பிரசாதம் கொடுத்த பின்பு, சுற்றி விபூதி கொடுத்த வந்த போது, சித்தர், திரு. ஆனந்திடம் சொல்கின்றார், “நீ நினைச்சது சரி தான், ஆனா அத இப்ப செய்ய முடியாது இன்னும் கொஞ்சம் காலம் போகனும், இப்ப நம்ம அத செய்யக் கூடாது, இன்னும் கொஞ்சம் காலம் போனோன நீ சொன்ன மாதிரி செய்யலாம்.” என்கின்றார். இந்த பதில் திரு. ஆனந்த் அவர்களை ஆச்சிரியப்பட வைக்கின்றது, எப்படி நம்ம மனசுக்குள் நினைத்ததிற்கு இவர் பதில் சொல்லுகின்றார், அப்ப சாமி ஏதோ பெரிய விஷயம் செய்து கொண்டு வருகின்றார், என்று எண்ணத்தை அது எழுப்புகின்றது.
  3. 1999 லிருந்து 2006 வரை இப்படி பங்குனி உத்தரத்தில் வருடாந்திர பால் குடம், ஆடி கடை வெள்ளியில் வருடாந்திர ஹோமம், மாதாந்திர பருவ பூஜைகள் என செல்லும் போதெல்லாம், ஒருவருடைய வலி எடுத்தல், ஆவி விரட்டுதல், என பல இறை அனுபவங்களுக்கு சாட்சியாக இருந்திருக்கின்றார். அந்த பருவத்தில், 2006ல், திரு. ஆனந்த் அவர்களுக்கு பெண் பார்க்கின்றனர். அவர் தென்காசியில் இருக்க வீட்டில் பெண் பார்த்து கொண்டு இருக்கின்றனர். வீட்டுடன் சென்று பெண் பார்த்து விட்டு, நிச்சியம் செய்ய குடும்பத்தோடு செல்கின்றனர், திரு. ஆனந்த அவர்கள், சித்தர் அய்யா பிள்ளை அவர்களை அழைத்து வேனில் முன் சீட்டில் அமர வைத்து அழைத்து செல்கின்றார். வேன் உதய சூரியன் போட்டிருந்த பெரிய வீட்டின் வாசல் முன் நிற்கின்றது. அது பெண்ணின் பெரியப்பா வீடு என்பது குறிப்பிடத்தக்கது. அதனை கண்ட சித்தர், மூன்று மாதங்களுக்கு முன் வெளியூர் சென்று இந்த வழியே வந்த போது, எப்படி இந்த ஊரில் இவ்வளவு பெரிய வீடு அதுவும் சூரியன் போட்டு என்று ஆச்சரியப்பட்டதை பகிர்ந்து கொள்கின்றார்? மூன்று மாதத்திற்கு முன்னரே இந்த நொடிக்கான வேலை ஆரம்பித்தாகிவிட்டது என்பதற்கான சான்று அது. நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு, சித்தர் அய்யா பிள்ளையை தனது குருவென்று, தான் நிச்சியம் செய்த பெண்ணிடம், திரு. ஆனந்த் அறிமுகப்படுத்துகின்றார், சொன்ன அடுத்த நொடி, திரு. ஆனந்த் வணங்குவதற்கு முன், அந்த பெண், ஆசிர்வாதம் பெறுவதற்கு சித்தரின் காலில் விழுகின்றார். இந்த நிகழ்வு அவருக்கு மகிழ்ச்சியை தருகின்றது. சொல்லியும் உணராத நிலையில், உணர்த்தும் முன்னரே உணர்ந்தமையை பொருட்டு அந்த நிகழ்வு சித்தருக்கு மகிழ்ச்சியை தந்திருக்கின்றது.
  4. திரு. ஆனந்த் அவர்களுக்கு தெரிந்த அன்பர் ஒருவர், சொரியாசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கு தீர்வாக, காண்ட நாடியில் சொல்லப்பட்டிருந்ததை போல, தென்காசி அருகே, கடனாநதி அணையின் மேற்பக்கம் உள்ள தீர்த்ததில் குளிக்க வருகின்றார். அதன்பொருட்டு அவர்கள் வர… திரு. ஆனந்த் அவர்களும், சித்தர் அய்யா பிள்ளையை அங்கு வரவழைக்கின்றார். சித்தரும் ஒரு சில அன்பருடன் சேர்ந்து மேற்சொன்ன தீர்த்ததில் நீராட வருகின்றார். அங்கு அனைவரும் நீராடுகின்றனர். அந்த நீர் சுவையாக இருந்திருக்கின்றது. அந்த நீரை சித்தர் எடுத்து தலை மேல் ஊற்றும் போது, உடல் வெறும் கூடு போல் இருந்ததையும், ஒரு கல்லின் மேல் நீர் ஊற்றுவதை போல இருந்ததாகவும் உணர்ந்திருக்கின்றார். அதாவது தான் அல்லாத ஒரு கூட்டின் மேல் நீர் வார்த்த உணர்வு அது! அங்கு, நோயுற்ற அன்பரையும் நன்கு குளிப்பாட்டி அழைத்து வருகின்றனர், அவரது உடல் நோயும் அடுத்து இரண்டு மூன்று மாதங்களில் சரியாகி விடுகின்றது.
  5. நீராடலுக்கு பின்பு மலையை விட்டு இறங்கி வரும் போது, ஒரு இடத்தில் திரு. ஆனந்த் அவர்கள், தன்னை அறியாமல் ஒரு சர்பத்தை தாண்டி செல்கின்றார், அவர் தாண்டிய பின், பாதையில் படுத்திருந்த அந்த கருமை நிற சர்ப்பம், அவரின் தோல் உயரத்திற்கு சீறி எழுந்து இருக்கின்றது, அதன் இரு பற்களும் சிங்கத்தின் பற்களை போல இருந்திருக்கின்றன. பின் அது பக்கத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்து அங்கிருந்து சென்று விடுகின்றது. முன் சென்றவர்களுக்கு பயம் தெரியவில்லை, பின் வந்த சித்தர் அய்யா பிள்ளைக்கு இந்த நிகழ்வு பயத்தைக் கொடுத்து, நடுக்கத்தை தந்து விடுகின்றது. இது திரு. இராமர் அவர்களின் குறிப்பில், பதிவு எண் 19வுடன் சம்மந்தப்பட்ட ஒரு நிகழ்வு.
  6. அடுத்ததாக, செம்பகாதேவி அருவிக்கு மேல், சித்தர் அகஸ்தியர் வாழ்ந்த சித்தர எழுத்துக்கள் பொதிக்கப்பட்ட மலைக்கு வனத்துறையினரிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு செல்கின்றனர். குற்றால மெயின் அருவியிலிருந்து ஆறு—ஏழு கிலோமீட்டர் தொலைவில் அந்த அருவியுள்ளது. அந்த பயணத்தில் திரு. ஆனந்த் அவர்களுடன், திரு. இராமர், சித்தர் அய்யா பிள்ளை, வாகன ஓட்டுனர், மற்றும் நோயுற்ற அன்பர் அவரின் உறவினர் என ஐந்து–ஆறு நபர்கள் சென்றுள்ளனர். அங்கு சித்தர எழுத்துக்கள் உள்ள இடத்தில் நீர் குழாய் வழியாக வருவதை போல சிலுசிலுவென நீர் விழுந்திருக்கின்றது. அதன் சுவை கசப்புடையதாக இருந்திருக்கின்றது. அதில் குளித்துவிட்டு நல்ல, சிறப்பானதொரு தூய்மையும், புத்துணர்வும் கிடைக்கப்பெற்றிருக்கின்றனர். வழிபாடெல்லாம் முடித்துவிட்டு மதியம் நான்கு மணியளவில் மலை இறங்குகின்றனர். இறங்கும் போது திரு. இராமர் அவர்களுக்கு வயிற்று போக்கு ஏற்படுகின்றது. பத்து, இருபது அடிக்கு ஒருமுறை அவருக்கு வயிற்று போக்கு ஏற்பட, சித்தர் அவர்களை என்னவென்று வினவுகின்றார். திரு. இராமர் அவர்களும் தனக்கு ஏற்பட்டுள்ள வயிற்றுப்போக்கை பற்றி சொல்லுகின்றார். சித்தர் தனது துண்டை எடுத்துக் கொடுத்து தலையில் கட்டிக்கொண்டு கீழ் இறங்குமாறு சொல்லுகின்றார். மேலும் இங்கு எங்காவது நீ அமர்ந்துவிட்டால் உன்னைத் தூக்கிக் கொண்டு கீழ் இறங்க இயலாது என்பதால் எப்படியாவது முயற்சி செய்து கீழ் இறங்கி விட வேண்டும் என்று பரிவுடன் கட்டளையிட்டு இருக்கின்றார். மிகவும் சிரமப்பட்டு, மல்லுக்கட்டி, திரு. இராமர் அவர்களும் மலையை விட்டு கீழே இறங்கி விடுகின்றார். மாலை சுமார் ஐந்து மணி அளவிருக்கும், அனைவரும் மலை இறங்கிவிட்டனர். திரு. இராமர் அவர்களால் அதற்கு மேல் நடக்க இயலவில்லை.
  7. உடனே திரு. இராமர் அவர்களை ஒரு ஆட்டோவில் ஏற்றி ஒரு தனியார் ஹாஸ்பத்திரிக்கு அழைத்து செல்கின்றனர், அங்கு அந்த மருத்துவர் அவரது மலத்தை சோதித்து பார்த்து காலரா முற்றிப்போய் விட்டது, இனி இவர் பிழைக்க மாட்டார், உடனே அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறி விடுகின்றார். ஆறு, ஆறு-அரை மணியளவில் தென்காசி அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அங்கிருந்த மருத்துவர், இவர் யார்? என்னவென்று? விசாரிக்க, திரு. ஆனந்த் அவர்கள், திரு. இராமர் தனது அண்ணன் என்றும், மலைக்கு சென்று வந்ததில் இப்படி ஆகி விட்டது என்றும் சொல்ல, மருத்துவர் அவரின் உயிருக்கு ஆபத்தாகியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று கெட்ட வார்த்தையில் திரு. ஆனந்தை சாடி தனது நல்லுணர்வை வெளிப்படுத்தி கொள்கின்றார். மேலும், அந்த மருத்துவர், திரு. ஆனந்திடம், இறந்துவிட்டால் தாங்கள் பொறுப்பில்லை என்று அபாய கோப்பில் (Risk File) கையெழுத்து வாங்கிக்கொள்கின்றார். திரு. ஆனந்த் அவர்களும், தனது அண்ணன் என்று கையெழுத்து இட்டு தருகின்றார். சுமார் எட்டு மணியளவில், திரு. இராமர் அவர்களுக்கு இருபக்கமும் செலைன் ஏறிக்கொண்டு இருக்கின்றது. அவருக்கு நினைவு போய் நினைவு திரும்பும் நிலை. இடையில் ஒரு முறை இருபக்கமும் செலைன் ஏறிக்கொண்டு இருக்கும் போதே, “டேய், என்னடா நான் வந்து ஒரு மணி நேரமாச்சு, செலைன கிலைனா போட்டா தாண்டா உடம்பு தெளிவாகும்” என்று கூறியிருக்கின்றார். அந்த அளவிற்கு நினைவு போக்கும் வரவுமாய் இருந்திருக்கின்றது. மேலும், தனது கையில் இருந்த பணம், மோதிரம், கைக்கடிகாரம் என அனைத்து பொருட்களையும் கழுற்றி திரு. ஆனந்திடம் ஒப்படைத்து விடுகின்றார். கூட இருந்தவர்கள் அனைவரும் அறைக்கு சென்று விடுகின்றனர். திரு. ஆனந்த் அவர்களும் அறைக்கு சென்று பச்சை வேட்டியை மாற்றி விட்டு, குழாய் உடுத்தி விட்டு வர சித்தரிடம் உத்தரவு கேட்கின்றார், அதற்கு சித்தர் வேட்டியுடன் இங்கேயே, மருத்துவமனையிலேயே, இருக்குமாறு சொல்லிவிடுகின்றார். மருத்தவமனை உதவியாளர் ஹாஸ்பத்திரியில் இரவு படுக்க கூடாது என்று சொல்ல, சித்தரும், திரு. ஆனந்த் அவர்களும் ஹாஸ்பத்திரிக்கு வெளியில் அமர்கின்றனர். அது மே மாதம் சீசன் நேரம், சாரல் அவர்கள் மேல் விழுந்த வண்ணம் இருக்கின்றது. ஒன்பது, பத்து, பதினொரு மணி, ஆகின்றது, அதற்கு மேல் சாரலில் அமர இயலாமல் மருத்துவமனைக்குள் படுக்க செல்கின்றனர், அதற்குள் மக்கள் அனைவரும் மருத்துவமனையில் படுக்க கூடாது என்பதால் படியோரம் எல்லாம் படுத்துவிடுகின்றனர். அங்கு படுப்பதற்கு இடம் இல்லை. சித்தர் வேறு அறைக்கு போகக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளார். சரி உள்ளே சென்று பார்ப்போம் என்று போக, அப்பொழுது தான் அங்கு வேலையில் இருந்த நர்ஸ் தலை சாய்த்துள்ளார்கள். அமைதியாக இருவரும் உள் செல்கின்றனர். சித்தர், திரு. இராமர் படுத்திருந்த கட்டிலுக்கு கீழ், துண்டை விரித்து படுக்கின்றார். திரு. ஆனந்த் அவர்கள் எதிரில் உள்ள படுக்கையில் படுக்கின்றார். வந்த களைப்பில் உடனே உறங்கியும் விடுகின்றார். காலை ஐந்து மணியளவில் சித்தர், திரு. ஆனந்த் அவர்களை எழுப்பி அறைக்கு அழைத்து செல்கின்றார். அங்கு அறையில், பயணத்திற்கு உடன் வந்தவர்கள் வேலை இருக்கென்று கிளம்பி விடுகின்றார்கள். அதன் பிறகு, திரு. ஆனந்த் அவர்கள் காலை சித்தருக்கு உணவு வாங்கி தருகின்றார். சித்தர், திரு. இராமரை போய் பார்க்குமாறும், அவன் நலமாக இருந்தால் அழைத்து வருமாறு சொல்லி விடுகின்றார். மருத்துவமனையில், பதினொரு மணியளவில், ரெளண்டஸ் பார்க்க வந்த மருத்துவரிடம் திரு. இராமர் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்து உடம்பு சரியான பிறகு தான் செல்வேன் என்று சொல்லியிருக்கின்றார். அதற்கு மாறாக, திரு. ஆனந்த் அவர்களோ பன்னிரெண்டு மணியளவு சென்று, உடல் நலம் பார்த்து விட்டு உடனே கிளம்பலாம் என்று சொல்லி விடுகின்றார். திரு. ஆனந்த் அவர்கள் அழைத்ததும், மறு பேச்சு இல்லாமல், திரு. இராமர் அவர்களும் கிளம்பி விடுகின்றார். முதல் நாள் இரவு இருந்தது போல இல்லாமல், திரு, இராமர் அவர்கள் “புனர் ஜென்மம்” எடுத்தாற் போல தெளிவாக இருந்திருக்கின்றார். இருவரும் சென்று மருத்துவரிடம் நிற்க, அவர் அக்கறையில் நேற்று தான் வந்திருக்கின்றார், எதுவும் சாப்பிடக் கூடாது, பச்சை தண்ணிக் கூட வாய் வைக்க கூடாது, எப்படி அழைத்து செல்வீர்கள் என்று சாடி இருக்கின்றார். அவருக்கு அதற்கும் சம்மந்தமில்லை என்று அபாய கோப்பில் (Risk File) கையெழுத்து இட்டு தருமாறும் மருத்துவர் கூறியுள்ளார். இதனை திரு. ஆனந்த் சித்தரிடம் அலைபேசியின் மூலம் தெரிவிக்க, சித்தரும், “நீ போடுறா கையெழுத்தை..” என்று உத்தரவிட, திரு. ஆனந்த் அவர்களும் கையெழுத்திட்டு திரு. இராமர் அவர்களை அழைத்து வருகின்றார். மருத்துவரின் உத்தரவு படி, மதுரை செல்லும் வரை, திரு. இராமர் அவர்கள் பச்சை தண்ணியை தவிர வேறெதுவும் குடிக்கக்கூடாது. அதற்கு ஏற்றாற் போல் திரு. இராமரை, அறைக்கு அழைத்து வந்து, இரண்டு ஒரு லிட்டர் பிஸ்லெரி வாட்டர் பாட்டில் வாங்கி கொடுத்திருக்கின்றார். சித்தர் அவரே அழைத்து சென்று திரு, இராமர் அவர்களை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவதாக சொல்லி இருக்கின்றார். அதற்கு திரு. ஆனந்த் இருவரையும் தனியாக அனுப்ப மனசில்லாமல், அலுவலகத்தில் விடுமுறை சொல்லி விட்டு உடன் சென்றிருக்கின்றார். சொன்னபடி, மதுரை செல்லும் வரை, திரு. இராமர் அவர்களும் சித்தரிடம் இருந்து வாங்கிய நீரை தவிர வேறெதுவும் அருந்தாமல் உடன் வந்திருக்கின்றார். மதுரை பேருந்து நிலையம் இறங்கியவுடன், அவரை உசிலம்பட்டி கொண்டு போய் விட்டுவிடுவதாக சித்தர் சொன்னவுடன், திரு. இராமர், தான் நன்றாக இருப்பதாகவும், தானே சென்று விடுவதுமாக சொல்லி, டீ குடித்துவிட்டு கிளம்புவோம் என்று சொல்லி இருக்கின்றார். இரவு இறக்கும் தருவாயிற்கு சென்று, அடுத்த நாள் மதியம் உடல் நிலை சரியாகி விடுவதை அதிசயம் என்று சொல்லாமல் என்ன சொல்வது? அங்கு டீ, வடை உண்ட பின், திரு. இராமரிடம் பெற்ற பொருட்களை அவரிடம் திரும்ப கொடுத்து விட்டு, அனைவரும் அங்கிருந்து கிளம்பி விடுகின்றனர். இந்த நிகழ்வை, திரு. இராமர் அவர்கள் குறிப்பில் எண் 20வுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும்.
  8. அவரது முதல் குழந்தை பிறப்பை எதிர்நோக்கி இருந்த தருணம், சித்தரிடம் பேச, அவரும் அலுவலகத்தில் இருந்து இரண்டு நாள் முன்னதே விடுமுறை பெற்று விட்டு வருமாறு சொல்லி விடுகின்றார். அதற்கு ஏற்ப திரு. ஆனந்த் அவர்களும் நான்கு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு மாமனார் வீட்டுக்கு வருகின்றார். சித்தரிடம் செய்தி கேட்க வலி வந்தால் மருத்துவமனையில் போய் சேரு என்று கூறுகின்றார். இரவு பதினொரு மணிக்கு வயிறு வலி ஏற்பட, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அதனை சித்தரிடம் சொல்ல அவரும் விடியற்காலை மூன்று மணிக்கு குழந்தை பிறந்துவிடும் என்று சொல்லுகின்றார். சரி என்று திரு. ஆனந்த அவரும் அங்கு காத்திருக்கின்றார். காலை நான்கு மணியாகியும் குழந்தை பிறக்கவில்லை என்பதால் சித்தரிடம் செய்தி சொல்லுகின்றார், அவரும் இன்னும் இரண்டு மணி நேரம் பொறுத்திருக்க சொல்லுகின்றார், எட்டு மணியாகியும் குழந்தை பிறக்கவில்லை, சித்தரும் அடுத்து அடுத்து இரண்டு, இரண்டரை, மணி நேரம் கால அவகாசம் கொடுத்து வருகின்றார். ஒரு பொழுதில் திரு. ஆனந்த் அவர்கள் சித்தரிடம் ஏன் என்று வினவ, அவர் தான் அதனுடன் பேச முயற்சி செய்வதாகவும் அது உடன்படவில்லை என்றும் சொல்லி, கொஞ்சம் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றார். பொழுதும் சாய்ந்து விடுகின்றது. எட்டு மணி அளவில் மாமனார் தன்னை வீட்டுக்கு அழைக்க, சித்தரிடம் உத்தரவு கேட்கின்றார், அதற்கு சித்தர், சில கெட்ட வார்த்தைகளால் திரு. ஆனந்த் அவர்களை வெகுவாக சாடி, அங்கிருந்து கிளம்பக் கூடாது என்று உத்தரவு தந்து விடுகின்றார். திரும்பவும் பதினொரு மணி வரை கால அவகாசமும் தருகின்றார். அக்கணம், அவரிடம் எட்டரை மணிக்கு வாங்கி வைத்த ஒரு பேக்கட் சிகரெட் மட்டும் இருக்கின்றது. வேறு எதுவும் இல்லை. பதினொரு மணியும் ஆகிவிட்டது. நள்ளிரவு ஆகியும் குழந்தை பிறக்கவில்லை என்று சித்தரை அழைக்க, அவர், “அடப் போடா அது வரட்டுன்டா வரப்ப, அத தூக்கி விட்டு தள்ளுடா, நான் மல்லுக்கட்டுறேன் போக மாட்டுங்கறா..விடுறா பாத்துக்கலாம், அவ வரப்ப வரட்டும், வேலைய பாரு…” என்று சொல்லி விடுகின்றார். சரி வேறெங்கும் போக கூடாது என்று சொல்லிவிட்டதால், அங்கே ஆற்று மனல் மேல் அமருகின்றார், அவருடன் நான்கு ஐந்து பேர் அங்கு அமர்ந்து சிகெரட் பிடித்து கொண்டு இருந்திருக்கின்றனர். இந்நிலையில், அவர் ஒரு சிகெரட்டை எடுத்து பத்த வைக்கின்றார். ஒரு இழுப்பு இழுக்கின்றார், பின் மிக கடுமையான, வாய் பிளக்க கொட்டாவி விடுகின்றார், அதற்கு பிறகு, ‘பொளிச்’ என்று எச்சிலை உமிழ்ந்திருக்கின்றார். அதற்குள் பாதி சிகெரட் காலியாகி இருக்கும். அது முடிந்து, அடுத்த சிகெர்ட பத்த வைக்கின்றார், இப்படியே இது தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் சென்றிருக்கும். இந்த இரண்டு மணி நேரத்தில், அவர் நினைவில் அய்யா அவர்களது வீட்டு வாசலில் படுத்து இருப்பது போலவும் தான் அவரின் வயிற்றை சுற்றி சுற்றி தலையால் முட்டி வருவதாகவும் எண்ண அலைகளில் கலந்திருக்கின்றார். அந்த நினைவில் கலந்தவாறே கொட்டாவி விடுவதும், எச்சில் உமிழ்வதும், சிகெரட் இழுப்பதும், என நேரம் கழிந்து இருக்கின்றது. திருமப் சுய நினைவுக்கு வரும் போது மணி இரண்டரை இருக்கும். சிகெரட்டும் காலியாகி விட்டது. அந்த இரண்டு மணி நேரத்திற்கு முன் வரை, அங்கு அவருடன் பேசிக் கொண்டிருந்த யாரும் அங்கில்லை, சுற்றிப்பார்த்தால் எங்கும் எச்சில் துப்பப்பட்டு, சிகெரட் துண்டுகளாய் கிடந்திருக்கின்றன. மூன்று மணி அளவில் டாக்டர் டீ வாங்கி தருகின்றார். மூன்றரை மணி அளவில் குழந்தை பிறந்து விடுகின்றது. அந்த விஷயம் தெரிந்தவுடன் சித்தரை அழைத்து விஷயத்தை சொல்ல முயல்கின்றார், அது வரை அலைபேசியை நள்ளிரவிலும் எடுத்த சித்தர் அதற்கு பிறகு சுமார் இரண்டு மணி நேரம் அலைபேசியை எடுக்கவில்லை, இவரும் எவ்வளவோ முயற்சி செய்திருக்கின்றார். அவர்கள் நெருங்கிய உறவினர்களுக்கு முதல் செய்தி சொல்லவும் மனம் வராமல் சித்தரின் அலைபேசிக்கே தொடர்ந்து முயற்சி செய்திருக்கின்றார், கடைசியாக ஐந்தரை மணியளவில், திரு. கோவிந்தராஜன் அவர்களின்* (சித்தர் அய்யா பிள்ளை உயிருக்கான பெயர்) மகள் அலைபேசியை எடுக்கின்றார். அவர்களிடம் வினவ, அவர் ஆழ்ந்து தூங்குவதாக சொல்லுகின்றார். திரு. ஆனந்த் அவர்களும் தனக்கு குழந்தை பிறந்துவிட்டது என்ற விஷயத்தை சித்தருக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றார். ஆறேமுக்கால் பக்கம் சித்தரே, திரு. ஆனந்தை அழைத்து குழந்தை பிறந்து விட்டதா என்று வினவி இருக்கின்றார். திரு. ஆனந்த் அவர்களும் நடந்ததையும் தான் அழைத்ததையும் தெரிவித்துக் கொள்கின்றார். அவர் “என்ன குழந்தை” என கேட்க, திரு. ஆனந்த் அவர்கள் என்ன குழந்தை என்று தெரியாது என கூற, சித்தர் கடுமையான வார்த்தைகளில் ஏசியிருக்கின்றார், அவரும் உடனே கையுடன், அலைபேசியை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்று பார்த்துவிட்டு, “பெண் குழந்தை” என்று சொல்லுகின்றார். பிறகு திருமதி. ஆனந்திடம் அலைபேசியை தருமாறு சொல்லி அவருடன் சிறிது நேரம் பேசுகின்றார். சில விஷயங்களை தெரிந்து கொள்கின்றார்.
  9. மருத்துவமனையில் குழந்தைக்கு என்ன பேர் என்று வினவ, திரு. ஆனந்த் அவர்கள் உடனே சித்தரை தொடர்பு கொள்கின்றார். சரியாக அவர் அலைபேசியில் அழைப்பு வந்த நேரம், அவரது தலை மேல், வெட்டவெளியில், வெய்யிலில், சில நீர் துளிகள் விழுகின்றன. சித்தர் அந்த பெண் குழந்தைக்கு, ‘சுபிக்ஷா’ என்று பெயர் வைக்கின்றார்.
  10. 2004ல் அவரது தந்தைக்கு பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றார். அவரது தந்தை வேலை முடித்து விட்டு மதியம் வருகின்றார். உடல் நிலை சரியில்லை எனினும் மருத்துவரை சந்திக்க மறுக்கின்றார். திரு. ஆனந்த் அவர்கள், தந்தையின் உடல் நிலையை அறிந்து கொள்ள சுமார் மூன்று மணியளவில், குளித்துவிட்டு, பூஜை அறையில் அமர்ந்து தன் மனதை அவர் மேல் ஒருமுகப்படுத்தி இருக்கின்றார். அவரது இடது பக்கம் செயலிழப்பதையும், வாய் கோணிக் கொண்டு செல்வதையும், திரு. ஆனந்த் அவர்கள் தனது உடம்பின் மேல் உணர்கின்றார். உடனே சித்தரிடம் அழைத்து தெரிவிக்கின்றார். சித்தரும் உடனே அவரது தந்தையின் வலது பக்க மூளைக்கு செல்லும் நரம்பில் இரத்தக் கட்டு ஏற்பட்டு இருக்கின்றது, இதனால் உயிருக்கு ஏதும் பாதிப்பில்லை எனினும், எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் தஞ்சாவூரில் டாக்டர் வாஞ்சியலிங்த்திடம் அழைத்து செல்கின்றாயோ அவ்வளவுக்கு அவ்வளவு சீக்கிரம் சரியாகி விடும், செலவும் மிச்சம் என்று கூறியிருக்கின்றார். இதனை வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்க, அதெல்லாம் வேண்டாம் நாம் எப்பொழுது பார்க்கின்ற மருத்துவரை பார்த்தால் போதும் என்று சொல்லி விடுகின்றனர். அதேபோல் அங்கு சென்று சேர்த்துகின்றனர். அந்த டாக்டர் சர்க்கரை அதிகமாக ஒரு காப்பி வாங்கி தர சொல்லுகின்றார். டாக்டரும் சோதித்து பார்த்து விட்டு அங்கேயே அனுமதிக்க சொல்லி விடுகின்றார். திரு. ஆனந்த் அவர்களும் சித்தர் சொன்னதை தனிப்பட்ட விதமாக டாக்டரிடம் சொல்லி, உடனடியாக இரத்த கட்டை விரிவுப்படுத்துமாறு விண்ணப்பிக்கின்றார். இதனை கேட்ட டாக்டர் இது யார் உங்களிடம் சொன்னது என்று கேட்க, திரு. ஆனந்த் அவர்கள், தனது குரு நாதர் சொன்னதாக தெரிவித்திருக்கின்றார், டாக்டர் கோபத்தில் தான் ஒரு டாக்டர் என்றும் சாமியார் சொன்னபடியெல்லாம் வைத்தியம் செய்ய இயலாது என்றும் தான் அறிந்தவற்றை வைத்தே வைத்தியம் செய்ய இயலும் என்றும் கூறி விடுகின்றார். இரவு அங்கே தங்க சொல்லுகின்றார். பிறகு எட்டு மாத்திரை வாங்கி வருமாறு மருந்து சீட்டு தருகின்றார். அதில் 4 மாத்திரை கிடைத்தது, 4 மாத்திரை கிடைக்கவில்லை. காரைக்கால், நாகப்பட்டினம் எங்கும் தேடி கிடைக்கவில்லை, உடனடியாக, ஒன்பதரை மணியளவில் டாக்டரிடம் கை இன்னும் இழுத்து கொண்டு செல்கின்றது, மாத்திரை வேறு கிடைக்கவில்லை என்று சொல்லுகின்றார். டாக்டர் அதற்கு பிரச்சனையில்லை நீங்க ஓய்வு எடுங்க, காலையில் வந்து பார்க்கலாம் என்று சொல்லி இருக்கின்றார். இவ்வளவு சொல்லியும் மெனக்கெடவில்லை என்ற நிலையில், திரு. ஆனந்த் கோபத்தில் அவரை சாடி விட்டு, உடனடியாக அவர் தந்தையை அங்கிருந்து விடுவித்து அழைத்து செல்கின்றார். கையில் ஏதும் பணமில்லாத தருணம். மழை தூரிக் கொண்டு இருக்கின்றது. நண்பர் ஒருவரின் ஒரு காரை கேட்டு பெறுகின்றார், அந்த நண்பர் அப்பொழுது தான் ஒரு ஓட்டுனரை போட்டு வண்டியை எடுத்து வந்திருக்கின்றார், மருத்துவமனையில் நிற்க வைத்துவிட்டு, இதற்கு மேல் என்னால் ஓட்ட இயலாது, திரும்ப தஞ்சாவூர் செல்ல இயலாது, என்று அந்த ஓட்டுனர், வர மறுத்து கிளம்பி விடுகின்றார். திரு. ஆனந்த அவர்களும், பேருந்தில் நடத்துனராக, ஏதோ அரைகுறையாக வண்டி ஓட்ட தெரிந்த நண்பர் ஒருவரை அழைத்து கொண்டு, இன்னும் ஒரு நண்பரிடம் பணம் பெற்றுக்கொண்டு, தஞ்சாவூர் புறப்படுகின்றார். சுமார் நான்கு, நான்கரை மணியளவில், தஞ்சாவூர் புது பேருந்து நிலையம் வந்தடைகின்றனர். அங்கு டீக்கடையில் விசாரிக்க எதிரில் இருக்கும் மருத்துவமனை காட்டுகின்றார்கள். உடனே மருத்துவமனையில் சேர்க்க, இரண்டு மணி நேரம் கழித்து, சுமார் 7 மணியளவில், அவருக்கு உணவு ஏதாவது வாங்கி கொடுங்கள் என்று டாக்டர் சொல்லுகின்றார். அந்த இரண்டு மணி நேரத்தில், திரு. ஆனந்த் அவர்களின் தந்தையும் நல்ல குணமடைந்து நினைவு திரும்ப பெற்று விடுகின்றார். சித்தரிடம் தன் தந்தைக்கு உடல் சரியாகி விட்டது என்று சொல்லி, இந்த மாதிரி நீங்க சொன்ன டாக்டரிம் தான் காட்டினோம் என்று சொல்லியிருக்கின்றார் அக்கணமே சித்தர் தான் ஏதும் சொல்லவில்லை என்று மறுத்து விடுகின்றார். இதே நிகழ்வை, திரு. ராஜா அவர்களின் குறிப்பில், பதிவு எண் 3ல் பார்க்கலாம்.
  11. ஒரு பெளர்ணமி வழிப்பாடின் போது சகோதரர்கள் இருவர் வருகின்றனர். அதில் ஒருவருக்கு ஆவி பிடித்திருக்கின்றது. சித்தர் மேலே விபூதி போட்டவுடன் அவர் குப்புற படுத்துக் கொள்கின்றார். இரவு இரண்டு மணி வரைக்கும் அப்படியே படுத்திருந்தவர், பிறகு திண்ணையை சுற்றி வருகின்றார். யாருடனும் பேசவில்லை. மறு நாள் பதினொரு, பன்னிரெண்டு மணியாகி விடுகின்றது!. சித்தர் அழைத்து பேசுகின்றார். பிடித்திருந்த ஆவி தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றது. தான் ஒரு சாராய வியாபாரி என்றும், தன்னை கொன்றவர்களை பழிவாங்கி விட்டு விலகிக்கொள்வேன் என்று சொல்ல, சித்தரும் இந்த கூட்டினுள் உள்ள ஆன்மா அதனால் பாதிக்கப்படும், நீ செய்த காரியத்திற்காக அது சிறைச்சொல்லக் கூடும். அது தவறு, என்று சொல்லி பிடித்திருந்த ஆன்மாவை விலக சொல்கின்றார். அந்த சாராய வியாபாரியின் ஆன்மாவும், அழைத்து வந்தவர்களிடமே நீ எனக்கு பத்தாயிரம் பணம் தர வேண்டியது பாக்கி இருக்கின்றது என்றும் பேசியுள்ளது. அது அப்படி பேசிக் கொண்டு இருக்க, சித்தரும் அதனுடன் பேசி அனுப்ப முயற்சி செய்கின்றார். திரு. ஆனந்த் அறிந்த வரை சித்தர் அய்யா பிள்ளை ஆவி விரட்டியதில் இது வரை யாரையும் அடித்ததில்லை என்றும் அதிக பட்சம் ஒரு எலுமிச்சம் கனி தருவார் என்று பதிவு செய்துள்ளார். இப்படியே சுமூகமாக பேசியபடி, பிடித்திருந்த சாராய வியாபாரி ஆன்மாவை சாந்தப்படுத்தி வழியனுப்பி வைத்திருக்கின்றார்.
  12. 2003-4ம் வருடம் சித்தருடன், பத்து—பன்னிரெண்டு பேர், வத்திராயிருப்பு வழியாக சதுரகிரி பயணம் செல்கின்றனர். கோரக்கர் குண்டாவில் அனைவரும் நீராடிவிட்டு, சந்தன மகாலிங்கம் செல்கின்றனர். அங்கு பன்னிரெண்டு மணியளவில் அபிஷேகம் நடக்கின்றது. சுவாமி சன்னிதியிலிருந்து மூன்றரை அடி தூரத்திலிருந்து, திரு. ஆனந்த் அவர்கள் அமர்ந்திருக்கின்றார். அங்கு சந்தன மகாலிங்கதிற்கு அபிஷேகம் நடக்க நடக்க இங்கு திரு. ஆனந்த் அவர்களுக்கு உடல் குளிர்ந்து, தூக்கிப்போட்டு நடுங்க ஆரம்பித்து விடுகின்றது. அவரால் அபிஷேகமும் பார்க்க இயலவில்லை,உடல் நிலையும் மாறி, உருள ஆரம்பித்து விடுகின்றார். இதனை கவனித்த சித்தர், சம்மணம் போட்ட படியே, தனது வலது காலை லேசாக தூக்கி விரித்து, திரு. ஆனந்த் அவர்களின் இடது கால் மேல் வைத்து லேசாக அமுத்துகின்றார். அதற்கு பிறகு, திரு. ஆனந்த் அவர்களின் நடுக்கம் நின்று விடுகின்றது, ஆனால் நினைவோ தப்பி மெய்மறந்து கிடந்து இருக்கின்றார். மணியடித்து விபூதி கொடுத்த பின்னரே திரு. ஆனந்த் அவர்களுக்கு நினைவு திரும்பி இருக்கின்றது.
  13. அவர்கள் சென்றது அமாவாசை இரவு, அதே சதுரகிரி பயணத்தின் போது நடந்த நிகழ்வு தான், அப்பொழுது சித்தர், “இப்ப பாருடா மேல ஒண்ணு தெரியும்,” என்று சொல்ல, அனைவரும் கவனிக்கின்றனர். திரு. ஆனந்த் அவர்களுக்கு ஐந்து மீட்டர் விட்டத்தில் ஒரு முழு நிலவு, வட்ட ஒளி, தாங்கள் இருக்கு சந்தன மகாலிங்கத்தில் ஆரம்பித்து, சுந்தர மகாலிங்கம் சென்று, தவசி பாறையை அடைவதை காண்கின்றார். அது பார்க்க, பந்து போல், புஷ்ப விமானமாக தெரிந்திருக்கின்றது. அவரும் சித்தரிடம் அது என்னவென்று விசாரிக்க, சித்தரும், “பேசாம பாரு, உனக்கு தெரிஞ்சிருக்கில்ல நீ பாரு, அவ்வளவு தான்.” என்கின்றார்.
  14. இறங்கும் போது சாப்டூர் வழியாக இறங்குகின்றனர். இறங்கி கொண்டிருந்த போது, சுமார் பன்னிரெண்டு மணியளவில் சரியான பசி எடுத்திருக்கின்றது. மலை அடிவாரம் வந்துவிட்டனர். இன்னும் ஐந்து—ஆறு கிலோ மீட்டர் அங்கிருந்து நடக்க வேண்டியிருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க…சித்தர் இங்கு தோட்டங்கள் இருக்கும், கேப்ப கஞ்சி வைத்திருப்பார்கள், ஆளுக்கு ஒரு பக்கம் போய் கஞ்சி உணவை யாசகமாக பெற்று வர சொல்லுகின்றார். அவர்களும், அவ்வாறு செய்ய, இரண்டு மூன்று பானையளவு அனைவருக்கும் போதும் அளவிற்கு, மாங்காய், மாவடு, ஊறுகாய், மிளகாயுடன் உணவு கிடைத்து விடுகின்றது. அது அற்புதமான உணவாக இருந்திருக்கின்றது, திரு. ஆனந்த் அவர்களின் வாக்கின்படி அந்த சாப்பாட்டை உண்ட உணர்வு இன்னும் நெஞ்சுக்குள் இருக்கின்றது என்று சொல்லியிருக்கின்றார். அந்த மாதிரி இன்னும் ஒரு முறை கிடைக்குமா என்று வியந்துள்ளார்!
  15. தனது மனைவியின் அக்காவிற்கு திருமணமாகி இரண்டு வருடம் கழித்தும் குழந்தை இல்லை என்று திரு. ஆனந்த், அவர்களின் மனைவி, அவர்களது மனைவியின் அக்கா, மற்றும் அவர்களது அக்காவின் கணவன், என அனைவரும் செல்கின்றனர். சித்தர் திரு. ஆனந்த் அவர்களை மட்டும் வெளியே அனுப்பிவிட்டு, மீதம் இருந்த மூவருடன் பேசிக் கொண்டு இருக்கின்றார். அவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்றும், அந்த குழந்தைக்கான பெயரையும் வைத்து கொடுத்துள்ளார். அவர்களிடம் சபரிமலை யாத்திரா பயணத்திறக்கு பணம் பெற்றுக் கொண்டு, அதிலிருந்து நூறு ரூபாய் எடுத்து, தனது, திரு. கோவிந்தராஜன் அவர்களின் பேரன் ஆதவனுக்கு, துளசி மாலையும், வேட்டியும் எடுத்து வரச் சொல்லுகின்றார்.
  16. அந்த சபரி மலை பயணத்தின் போது ஆதவன் மேல் சார்த்திய சித்தர் தந்த உருத்திராட்ச மாலையும், கடையில் வாங்கிய துளசி மாலையும் இரண்டும் பிரிக்க முடியாத அளவிற்கு பின்னிப்பிணைந்து கிடந்தது. இதற்கு இடையில் மாலை போடும் போதே சித்தர் ஒரு நிகழ்வை அனைவருக்கும் காட்டுகின்றார். மாலையை கையில் வைத்துக் கொண்டு பிரணவம் சொல்லும் போது மாலை முன்னும் பின்னும் ஆடுவதை காண்பித்திருக்கின்றார். இப்படி அந்த மாலை, மலை சென்று பின்னி வர, அதனை பொக்கிஷமாக கருதி, பேழையில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். அதனை, தன்னை சந்திக்க வந்த அனைவரிடமும் காட்டுவது, யாத்திரா பயணங்களின் போது, புனிதம் என்பதால், செருப்பு போடாமல், அதனை தானே எடுத்து செல்வது என்று அதனை கண்ணும் கருத்துமாக காத்து வந்திருக்கின்றார். சமாதி அடைந்த பின், அந்த பேழையும், மாலையுடன், சித்தரின் சடலத்தின் கையில் வைத்தவாறு அடக்கம் செய்துவிட்டோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  17. 2010, திருமதி. ஆனந்த் அவர்களின் அக்காவிற்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் கழித்தும் குழந்தைபேறு இல்லாமல், சித்தர் அய்யா பிள்ளையை காண வருகின்றார்கள். திருமதி. ஆனந்த் மற்றும் அவர்களின் அக்கா இருவருடன் சித்தர் பேசிக் கொண்டிருக்கின்றார். அப்பொழுது திருமதி. ஆனந்த் அவர்களது அக்கா, தனக்கு குழந்தை இல்லை என்று தெரிவிக்க, சித்தர் இல்லை நீ மாசமாக தான் இருக்கின்றாய் என்று கூறுகின்றார். அதனை அவர்கள் நம்ப மறுக்க. திருமதி. ஆனந்த் அவர்களை தனது அக்காவின் அடிவயிற்றில் கைவைத்து பார்க்குமாறு சொல்ல, அவர்களும் அப்படியே செய்கின்றார்கள். அக்கணம் அங்கு நெளிவு தெரிந்திருக்கின்றது. கரு உண்டானதையே அப்பொழுது தான் அவர்கள் உணர்கின்றார்கள். சித்தரும் அவர்களுக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்றும், அதற்கு இன்ன பெயர் சூட்ட வேண்டும் என்றும் சொல்லி அனுப்பி வைக்கின்றார். சொன்னவாறு, அவர்களுக்கு ஆண் குழந்தை தான் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  18. அதே நிகழ்வின் போது, திருமதி. ஆனந்த் அவர்களின் அக்கா ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்த பின், திருமதி. ஆனந்த் அவர்களும் ஒரு ஆண் குழந்தை பெற்றெடுப்பார்கள் என்று முன்னதாகவே சொல்லுகின்றார். அதுவும் அவ்வாறே நிகழ்கின்றது. ’சிவ சக்தி சிவா’வும் பிறக்கின்றார்.
* இங்கு சித்தர் என குறிப்பிடாமல் திரு. கோவிந்தராஜன் என்று அழைக்க காரணம், சித்தர் அய்யா பிள்ளை என்பது அவரது ஆன்மாவிற்கு கொடுத்த பெயர், அந்த கூட்டினை வைத்தும், அந்த கூட்டின் மூலம் கிடைத்த உறவினை வைத்து சித்தரை உறவுகளின் கட்டுக்குள் காட்ட இயலாது என்பதால். மேலும், அவரது முதல் மனைவி இறந்த போது, தாலியை கணவராய் தான் வாங்காமல் அவரது மூத்த மகனை வாங்கி சொல்லுகின்றார். அதனை புரிந்து கொள்ளாமல் அங்கிருந்த சிலர் அதனை எதிர்க்க அவர், “நான் எப்படி வாங்க இயலும்” என்று என்னிடம் ஆதங்கப்பட்டார். இப்படி புரிந்து கொள்ளாமல் இருப்பதை எண்ணி வருத்தம் தெரிவித்தார். எனவே அவரை பொது விடயங்களில் குறிப்பிடும் போது, சித்தர், அய்யா, குரு, சாமி, என்று மொழிவது வழக்கம், அதுவே குடும்ப விடயங்களில் குறிப்பிடும் போது, ‘அய்யா’ மற்றும் திரு. கோவிந்தராஜன் என்ற அவரது இயற் பெயரை வைத்து குறிப்பிடுவது வழக்கம். எனது ஏடுகள் அனைத்திலும் அவ்வாறே குறிப்பிட்டு வருகின்றேன். சித்தர் என்று அழைத்து விட்டால், அந்த உயிரை யாரும் உரிமை கோராலாகாது, அன்று முதல் அது பொது வஸ்துவாகி விடுகின்றது. அப்படி மீறி உரிமை கோரினால் அது சித்தர் என்ற பட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்தி விடுகின்றது. இல்லை பொதுவாக ‘அய்யா’ என்று இரு சாராரும் அழைக்கலாம்.

குறிப்பு: நேர்காணல் செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.

No comments:

Post a Comment